15-3-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
மகான்களின் சமாதிகளுக்கு செல்வதின் பயன் என்ன?
மகான்களின் சமாதிக்கும் சென்று அமர்ந்து வருவதில் எவ்வித லாபமும் இல்லை. லாபம் என கணக்கிட்டால் ஆத்ம ஞானம் பெருகுதல் வேண்டுமென்றால் அங்கு அமர்ந்து செய்ய வேண்டியதை செய்தல் வேண்டும். இதற்கு தேவையானது 1.விசுவாசம் (நம்பிக்கை) 2.ஆன்மீக விருப்பம் 3.பெரும் தெய்வ சிந்தனை 4.மனஉறுதி 5.மனஒருமைப்பாடு இவை இல்லையென்றால் அங்கு அமர்ந்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்து என்ன எதிர்பார்க்கிறிர்கள்? பொதுவாக இக்காலத்தில் பௌர்ணமி நேரங்களில் சமாதிகளுக்கு சென்று வட்டமிட்டு அங்கு தின்பண்டங்கள் உண்டு மகிழ்வதும் கொண்டாடுவதும் இப்போது உள்ளது. இதில் ஆன்மீக ரீதியாக எவ்வித வளர்ச்சியும் இல்லை. உடல் ஆரோக்யம் சிறிது காணலாம். இறை நாட்டத்தில் எவ்வித வளர்ச்சியும் இருக்காது. இதற்கு சமாதிக்கு ஏன் செல்ல வேண்டும். வீட்டிலேயை இருந்து செய்யலாமே? அங்கு அமர்ந்து அங்கு உள்ள மகான்களை நினைத்து தியானம் செய்தல் வேண்டும். அவரிடம் அருளைக் கேட்டு பெறுதல் வேண்டும், இக்காலத்தில் பலர் மகான்களின் சமாதிக்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்ற ஓர் மூடநம்பிக்கை வைத்துள்ளனர், உங்களை காப்பது அந்த மகான்கள் அல்ல, உமது விசுவாசமே என மனதில் உணர வேண்டும், மகான்கள் அனைவரும் கூறுவது உன் விசுவாசம் உன்னை காக்கும் என்பது தான், நான் உன்னை காக்கின்றேன் என்று யாரும் கூறியதில்லை, இதனை முழுமையாக மனதில் வைத்து முறையாக செயல்பட்டால் நன்மைகள் உண்டாகும் இல்லையேல் வெறும் பொழுது போக்காகும்.