23-11-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
எவ்வழி நல்வழி? யோக வழியா? பூஜை வழியா?
அவரவர் சக்திக்கேற்றார் போல் என யாமும் கூறுகிறோம். இதில் பல அர்த்தமும் உண்டு என்பேன். அவரவர் சக்தி எனக் கூறிட ஒன்று உடல் வலிமையைக் குறிக்கின்றது. இரண்டு காலமதின் நிலையையும் குறிக்கின்றது. அதாவது கடினமானது செய்திட காலம் கிட்டுமோ என்கின்ற வினாவும் இங்கு காணப்படுகின்றது. மூன்றாவது அவரவர் ஜென்மாந்திர நிலையையும் குறிக்கின்றது. இதுவே முக்கியத்துவம் காண்கின்றது என்று இங்கு எடுத்துரைப்போமே. நல்லதோர் நிலையில் செல்வந்தன் ராட்சஸ பறவையில் (விமானம்) அயல் நாடு செல்ல நேரிடும். சாதாரணமானவன் இணைப்புப்பெட்டி (இரயில்) வழியாகவும் செல்ல நேரிடும். இல்லாதோன் பேருந்து வழியாகச் செல்லக்கூடும். அதுவும் இயலாதோன் நடை பயணமாகச் செல்வதும் உண்டு.
இவ்விதமே பூர்வ ஜென்ம நிலையைக் குறித்தும் அவரவர்க்கும் மார்க்கம் அமையும். இதில் நீங்களாக யாதும் தேடுதல் வேண்டாம் என்பதே எமது கருத்தாகின்றது. இருப்பினும் கிட்டும் வழி நல்வழி எனக் கண்டு முழுமையாக ஒன்றில் நின்று சாதனை புரிந்திட வெற்றி, இறைபாதம், ஜெயம் உறுதி என்றும் இங்கு எடுத்துரைக்கின்றோம்.