31-10-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
சூரபத்மனை எம்பெருமான் வேலவன் (முருகன்) வதை செய்த (அழித்த) சூரசம்ஹாரத்தின் (சூரனின் அழிவு) பொருள் என்ன?
ஆலயங்களில் பெருமளவில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. இக்கதை பொதுவாக அனைவரும் அறிந்த கதை. இருப்பினும் இவ்வித சம்ஹாரங்களின் (அழித்தல்களின்) பொருள் என்ன என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அசுரர்கள் அழிந்தார்கள் என்பது கதையாகின்றது. உண்மையாக அழிய வேண்டியது அசுரத் தன்மையாகும். ஓர் மனிதனை குற்றம் காணாமல் அவனின் தன்மைகளைக் குற்றம் காணுதல் வேண்டும். இதனை அனைவரும் பின்பற்றுவது நலமாகும். அடுத்தவரிடம் குற்றம் காண்பது எளிதாக இருக்கின்றது. நமக்குள் இருக்கும் குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கின்றது. ஏனெனில் நமது குற்றத்தை நமது அகங்காரம் மறைத்து விடுகின்றது. நமக்குள் இருக்கும் குற்றத்தை அறிய வேண்டுமெனில் முதலில் அகங்காரத்தை நீக்க வேண்டும். இதற்கு அனைவரும் கடினமான முயற்சிகள் எடுக்க வேண்டும். எளிதில் எதுவும் கிடைப்பதில்லை. துரித உணவுகளுக்கும் சிறிது நேரம் வேண்டுமல்லவா? நல்ல உணவு வேண்டுமென்றால் இன்னும் அதிக காலம் காத்திருத்தல் வேண்டுமல்லவா? இத்தகைய நிலையில் நாம் நலம் பெற வேண்டுமென்றால் படிப்படியாக முயற்சித்து முன்னேறுதல் வேண்டும். இத்தகைய அசுரர்கள் அழியும் கதைகளைக் கேட்பது வெறும் மன மகிழ்ச்சிக்கு மட்டும் அல்ல அக்கதைகளைக் கேட்டு தீய குணங்களை அகற்றுதல் வேண்டும். அனைவரும் இறைவனால் கொல்லப்பட மாட்டார்கள் விடுதலைப்பட மாட்டார்கள் என்பதை மனதில் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய கதையில் நடைபெறும் உண்மையான நிலையை அறிந்து இறைவனின் துணையோடு நாம் நமது தீய குணங்களை அழித்தல் வேண்டும். இதனை மனதில் வைத்துச் செயல்பட்டால் இறைவனின் அருளும் ஆசிகளும் முழுமையாகக் கிடைக்கும்.