10-8-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
ஆன்மீகப் பாதையில் செல்வோர் தெய்வீகக் காரியங்களில் பெருமளவில் நாணப்படுவது (வெட்கப்படுவது) சரியாகாது. தெய்வ நாமங்களைக் கூறுவதற்கோ பாடுவதற்கோ தயக்கம் காண்பது நலம் தருவது அல்ல. ஏனெனில் தெய்வ நாமங்களைச் சொல்ல சொல்ல நாம் கேட்பது மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளும் கேட்டுக் கொண்டு அவர்களுக்கும் முக்திக்கு வழி பிறக்கிறது. அன்பர்கள் பலரும் முணுமுணுத்தவாரே மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கின்றனர். இவ்விதம் செய்வதை விட மனசுக்குள் (மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஜெபிப்பது) செய்வதே நலம் தரும். ஒன்று உரக்க (சத்தமாக) இல்லையேல் மௌனமாகச் செய்ய வேண்டும் என்பதே விதியாகும். இதற்குக் காரணம் உண்டு. ஆன்மீகத்தில் எவ்வாறு ரூபம் விட்டு அரூபம் செல்கின்றோமோ அவ்விதமே ஓசை (சத்தம்) விட்டு நிசப்தத்திற்கும் (மௌனம்) செல்லுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதற்கு இரண்டு பொருள்கள் (அர்த்தங்கள்) உண்டு. நமக்குள் வெறும் நிசப்தம் இருக்கும் போது வெளியில் எவ்விதம் ஓசை இருந்த போதிலும் காதில் விழாத நிலை ஏற்படும். இதுவே தியானத்தின் மிகையானது (எல்லை) ஆகும். எந்தக் காலத்திலும் எந்த ஸ்தலத்திலும் எந்த நிலையிலும் தியானம் செய்திடவோ ஜெபிக்கவோ கூச்சம் தேவையற்றது ஆகும். இறைவனின் நாமங்கள் என்பது இக்காலத் தந்தியைப் போல நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்கிறது. எவ்வளவு தியானம் செய்தாலும் சிறிது நேரமாவது தெய்வ நாமங்களை மனதிலாவது கூற வேண்டும்.