13-7-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
சுத்தம் அசுத்தம் என்பது ஆன்மீகத்தில் உண்டா? சுத்தம் தேவையா? ஏனெனில் பல சித்தர்கள் அழுக்கிலும் அமர்ந்து இருக்கின்றனரே அவர் நிலையில் சுத்தம் தேவையில்லையா?
முதலில் ஓர் பழஞ்சொல் ஒன்று உண்டு முதன்மையில் தூய்மை பின்பே இறையருள் என்போம். சித்தர்கள் அமர்ந்தாற்போல் பல வருடங்கள் நீ அமர்ந்திருந்தால் உடல் தூய்மை பார்க்க வேண்டாம். ஏனெனில் அசுத்தம் என்பது இல்லாமல் போகும். இருப்பினும் பல தலங்களில் (இடங்கள்) அலைந்து வருபவர்களுக்கு உடல் சுத்தம் உறுதியாக வேண்டும். இதற்கும் மேலாக இறைவனுக்குப் படைக்கும் காலத்தில் கை சுத்தம் வஸ்துக்கள் சுத்தம் (நைவேத்யம் வைக்கும் பொருள்கள்) என்பதெல்லாம் வேண்டும். சித்தர்கள் நிலை வேறு ஏனெனில் அவர்கள் தன்னை மறந்த நிலையில் உள்ளார்கள். உடலுக்கு என்ன நேர்ந்திட்ட போதிலும் சிறிதும் அசைய மாட்டார்கள். உன்னால் அவ்வாறு இருக்க முடியாது அல்லவா? உடலுக்குச் சிறிது ஏதேனும் வந்தவுடன் வைத்தியரை நோக்கிச் செல்வீர்கள். உடலை மறந்தோருக்கு அசுத்தம் இல்லை என்கின்ற விதி உண்டு. மற்றவர்கள் அனைவரும் குறிப்பாக ஆன்மீகப் பாதையில் செல்கின்றவர்களுக்கு உறுதியாக சுத்தம் அசுத்தம் என்பதை அதிகமாகவே பார்த்தல் வேண்டும். குறிப்பாக வாக்கு சுத்தம் தன் வாக்குகளைப் (தான் கூறும் வார்த்தைகளைப்) பொய்யாக்குவதைத் தவிர்த்தல் வேண்டும். சிறு சிறு சம்பவங்களில் இருந்து தப்பிக்கச் சிறு சிறு பொய்கள் கூறுவதும் கூடாது. அவ்வாறு கூறினால் வாக்கு சுத்தமற்றதாகும். மேலும் இயன்ற அளவிற்குச் சுத்தமான பண்டங்களை உண்ணுதல் வேண்டும். ஏனெனில் ஆன்மீகப் பாதையில் செல்லச் செல்ல ஜீரண உறுப்புகளின் சக்தி குறையும். நலம் தரும் உணவை மட்டுமே ஜீரண உறுப்புகள் ஏற்றுக்கொள்ளும் என்கின்ற விதியும் உண்டு. இதனை மனதில் வைத்துச் சுத்தமான எரிவு தன்மை (அதிக அளவு எரிக்க/ஜீரணிக்க வேண்டியில்லாத) அளிக்கா உணவுகளை உண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும். நாக்கினை அடக்கா விட்டால் ஆன்மீக வளர்ச்சி மிகவும் குறைவாகவே காணப்படும். நாக்கு என்பது சொல் ருசி இரண்டையும் குறிக்கும். இதனை மனதில் வைக்க வேண்டும். மற்றவர்கள் சுத்தமாக இருக்கின்றார்களா இல்லையா என சிந்திக்க வேண்டாம். மற்றவர்களுக்கு வேறுபல தகுதிகள் உள்ளன அதை நீ கண்டாயா? இல்லையே. இதனால் மற்றவர்களின் நிலை எண்ணாமல் நம் நிலை என்ன நாம் எப்படி முன்னேற வேண்டும் என்று மனதில் வைத்துச் சான்றோர்கள் (ஞானம் பெற்ற பெரியவர்கள்) மகான்கள் கூறியதை மனதில் வைத்து முன்னேறுவாயாக.