16-6-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
பிராப்த கர்மம் என்பதற்கு தீர்வு கிடையாது என்று கூறுகின்றனரே ஒரு இடத்தில் அத்தகைய கர்ம நிலைகளை அனுபவிக்கத் தயங்கி மற்றொரு இடத்திற்கு ஏன் கடல் கடந்து சென்ற போதிலும் அங்கும் அதன் பாக்கியை அனுபவித்துத் தீரவேண்டும் என்ற விதி உண்டா?
உறுதியாக அவ்விதம் உண்டு. உதாரணமாக ஒரு அலுவலகத்தில் பெரும் கடினங்கள் காணும் நேரத்தில் இந்தக் கர்ம நிலையை மாற்றிடும் வகையில் மற்றொரு பணிக்குப் போகும் காலத்தில் அங்கும் அத்தகைய கொடுமைகள் நேரிடும் என்பது விதியாகும். ஏனெனில் அனுபவிக்க வேண்டியதை முழுமையாக அனுபவித்துத் தீர்த்தல் வேண்டும் இதற்குப் பிராயச் சித்தங்கள் (பரிகாரம்) இல்லை என்றும் அறிதல் வேண்டும். கடினமான தவம் ஜெபம் என்கின்ற வழிகளால் அனைத்தையும் தாங்கும் மனப்பக்குவம் ஏற்படுகின்றது என்பதுதான் உண்மை. துறவிகளும் முனிவர்களும் இத்தகைய மனவலிமை உடையவர்கள் ஆவர். இதனால் எதையும் தாங்கிக்கொள்ளும் தன்மைகளையும் வளர்த்துள்ளனர். கலியுகம்தனில் மனிதர்கள் அவ்விதம் இல்லை என்பதை நன்கு உணர்தல் வேண்டும். கலியுகத்தில் இருப்போர் அக்கால முனிவர் ரிஷிகள் போன்ற மனவலிமை உடல் வலிமை அடைவது மிகவும் கடினம். சதா தெய்வ நாமம் உச்சரித்துக் கொண்டேயிருக்கும் காலத்தில், மனவலிமை ஓரளவிற்கு ஏற்பட்டு எதையும் தாங்கும் தன்மையும் வளர்கின்றது. ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் ஓடிவிட்டால் நாம் தப்பித்துவிட்டோம் என்ற எண்ணம் தவறாகும். ஏனெனில் பிராப்த கர்மம் என்பது உன்னுடையது அது உன்னைத் தொடர்ந்தே வரும் என்று நன்கு உணர்தல் வேண்டும். சக்தியைக் கொடு வலிமையைக் கொடு எதையும் தாங்கும் மனதைக் கொடு என எப்போதும் இறைவனை வேண்டி இறை நாமத்தை விடாது உச்சரித்து வந்தால் அனைத்தும் சீராகும்.