மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #20

29-9-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கடவுள் என்று கூறினால் அவர் ஆண்பாலா? பெண்பாலா? அவரை எவ்விதம் வணங்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதர்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு என்கின்றதை அறிதல் வேண்டும். அமைதி அளிப்பது அசையா நிலையை அளிப்பது ஆண்பால் என்றும் அசையும் சக்தியானது பெண்பால் என்றும் உணர்தல் வேண்டும். சில சமயங்களில் பெண்மையும் சீறி எழுந்து ஆண் செய்யும் தொழில்கள் செய்கின்றதை காண்கின்றோம். இவ்விதமே ஆண்களும் சில சமயங்களில் மௌனம் சாதித்து அழுது ஒதுங்கி விடுகின்றனர். இது உள்ளிருக்கும் பெண்பால் செய்யும் தொழிலாகின்றது என்பதே உண்மையான நிலை. இறைவனைப் பொறுத்த அளவில் அங்கு பால் (ஆண்பால், பெண்பால்) இல்லை. பிரம்மம் என எடுத்துக் கொண்டால் பிரம்மத்திற்குப் பால் (ஆண்பால், பெண்பால்) இல்லை. குணங்கள் இல்லை ஆசைகள் இல்லை பாசங்கள் இல்லை. சுத்தம் முழுமையான சுத்தம் சுத்த சிவம் என்கின்ற பொருளாகின்றது. இவ்விதம் இருக்கையில் நமக்கு ஏன் பெண் ரூபங்கள் ஆண் ரூபங்கள் படைத்து இருக்கின்றான்? இது இறைவனாகப் படைக்கவில்லை. மனிதன் எவ்விதத்தில் இறைவனை வணங்குகின்றானோ அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளித்து அருள் பாலிக்கின்றான் என்பதே உண்மையான நிலை.

இவ்விதம் இருக்க சக்தி பெரிதா? சிவன் பெரிதா? என்கின்ற ஓர் பழமையான வினா ஒன்றும் இங்கு காண்கின்றோம். உண்மையாக கூறுகையில் இறைவன் நமக்குள் இருக்கின்றான் இது உண்மை. அவ்விறைவன் எங்கு இருக்கின்றான்? ஆண்பால் பெண்பால் உள்ள தேகத்தில் இருக்கின்றான். அவ்விதம் இருக்கும்போது தாயாகவும் தந்தையாகவும் அவ்வொரு சக்தியே இருக்கின்றது என உணர்தல் வேண்டும். வணங்குவது உங்களது விருப்பமாக இருக்கும். ஏனெனில் எந்த ரூபம் உமக்கு அதிகமாக பிடிக்கின்றதோ அந்த ரூபத்தில் வணங்கிக் கொள்வாய் அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளிப்பான். இதில் எவ்வித குழப்பமும் இல்லை. இருப்பினும் இறையருளானது பால் (ஆண்பால், பெண்பால்) அற்றது என்கின்ற நிலையை இங்கு யாம் விளக்கினோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.