5-4-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
இறைவனுக்குப் படைப்பது (நைவேத்யம்) அவசியமா?
இறைவன் நம்முடன் வாழ்கின்றான் என்கிற எண்ணம் கொண்டால் நாம் உட்கொள்ளும் அனைத்தையும் இறைவனுக்குப் படைத்து வந்தால் விசேஷமாக படையல் தேவையற்றது. அந்த நிலை அடையும் வரை இறைவன் வேறு நாம் வேறு என்கின்ற எண்ணம் இருக்கும் வரை இறைவனுக்கு நாம் யாதேனும் படைத்து நம் ஆன்மீகப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முன்பு கூறியவாறு அனைத்தும் இறைவனுடையதே. அவன் நமக்குத் தருவதை நாம் மீண்டும் திருப்பிக் கொடுக்கின்றோம். ரூபம் சிறிது மாறுகின்றது என்பது ஒன்றே வித்தியாசமாகின்றது (நமக்குக் கிடைக்கும் அனைத்தும் இறைவன் கொடுப்பது நாம் அதிலிருந்து சிறிதளவே திருப்பிக் கொடுக்கின்றோம்). இறைவனுக்கு நாம் பொதுவாகப் படைக்க வேண்டியது தூய்மையான உள்ளம் ஆகும். அந்த தூய்மையான உள்ளம் இருக்கும் நிலை அடைவது சிறிது சிரமம் (கஷ்டம்) என்கின்ற போதிலும் முயற்சிகள் செய்து தூய்மையான நிலையை உணர்ந்து அந்த உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே சிறந்த படைப்பாகும்.