9-2-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்
ஆன்மீகம் என்பது ஆத்மாவை மிகையாக (அதிகமாக) நாடுவது என்று பொருளாகும். இவ்விதம் இருக்க பலரும் இக்காலத்தில் அமைதி கிடைக்காத நிலையில் ஆண்டவனை நாடுகின்றனர். ஆண்டவன் உடனடியாக நிவர்த்தி (கேட்டதைக் கொடுப்பது) செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தோடும் அங்கு செல்கின்றனர். ஆனால் அது அவ்விதம் நடக்காது. ஏனெனில் கர்மவிதிகள் கர்ம பாக்கிகளைத் தீர்த்தல் வேண்டும் என்கின்ற ஓர் கணக்கு உண்டு. திடீர் மாற்றங்களை எதிர் பார்ப்பதும் ஓர் குற்றமாகின்றது. மேலும் ஆன்மீகப் பாதையில் செல்லும் முன்னதாக தெய்வ நிலைகளை அடைவதில் நாட்டம் (ஆர்வம்) காணும் முன்னதாக நல்ல மனிதனாக மாறுதல் வேண்டும். நல்ல மனிதன் என்றால் என்ன எனப் பலரும் எண்ணுவர். நல்ல மனிதன் என்பவன் முதலில் மற்றவர்களை எண்ணுபவனாக இருக்க வேண்டும். அதாவது சுயநலமில்லாமல் மற்றவர்களின் சௌகர்யங்களைப் (சுகங்களைப்) பார்ப்பதே முதலில் இருக்க வேண்டும். நம் நாட்டில் இது இல்லை என்பதற்குப் பெரும் ஆதாரமாக நம் சாலைகள் இருக்கின்றது. மற்றவர்களுக்கு வழி விடுவது என்றால் அது பலகீனம் என எண்ணுவார்கள் போல் இருக்கிறது. இந்த இடத்தில் முதலில் மற்றவர்களின் சௌகர்யங்களை எண்ணுங்கள்.
இரண்டாவதாக அகங்காரத்தை நீக்குதல் வேண்டும். நாம் பெரியவன் என்பதில்லை வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பதை மறக்காமல் செயல்படுங்கள். பாசம் காட்டுவது பலகீனம் என்று பலர் எண்ணுகின்றனர் இந்த எண்ணத்தையும் நீக்குதல் வேண்டும். இறைவன் நம் தந்தை என்றால் நாம் அனைவரும் அவர் மக்களே என்கின்ற எண்ணத்தை வளர்த்திடல் வேண்டும். இல்லை என்றால் ஆன்மீகப் பாதையில் செல்வதில் அர்த்தமில்லை. எதிர்பார்ப்புகள் என்பதையும் மனதிலிருந்து அகற்ற வேண்டும். ஏனெனில் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் தேவையில்லாத கோபம் உண்டாகும். கோபத்தினால் வரும் நஷ்டங்கள் மற்றவர்களுக்கு அல்ல உங்களுக்கே என்பதை மனதில் நன்றாக நினைத்து செயல்படுதல் வேண்டும். ஏனெனில் கோபம் வரும் நேரத்தில் எங்கு எந்த இடத்தில் யாரிடம் கோபம் காட்டுகின்றோம் என்பதை நாம் எண்ணுவதில்லை சீறிப் பாய்கின்றோம். விளைவாக சிறு கர்மாக்களையும் சேர்த்துக் கொள்கின்றோம். ஆதலால் தான் ஆன்மீகப் பாதைக்கு செல்லுவது நன்றாய் இருப்பினும் அதில் காலடி வைக்கும் முன்னதாக உன்னையே நீ திருத்திக்கொள் மனிதா என்று பல மகான்கள் கூறி உள்ளனர். இதனைக் கடைபிடித்து நல்வழியில் நல்மாற்றங்கள் ஏற்படுத்துவீர்களாக. மற்றவர்களிடம் நல்ல குணங்களைப் பார்த்தால் நம்மிடம் அது இருக்கின்றதா என எண்ணிப்பார்க்க வேண்டும் இல்லை என்றால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் தீய குணங்களைக் கண்டால் நம்மிடம் உள்ளதா என்று பார்த்து இருந்தால் அதை நீக்க வேண்டும். இதையே முதல் படியாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் ஆன்மீகப் பாதையில் சிறு அளவிற்குச் சென்று அங்கேயே நல்மரத்தின் கீழ் நித்திரை காணுதல் வேண்டும் என்கின்ற நிலை உண்டாகும் (ஆன்மீகப் பாதையில் செல்லும் போது மேல் நிலைக்குச் செல்லாமல் சில காலங்கள் அதே இடத்தில் இருப்பது). சிறிது சிந்தியுங்கள் மாற்றங்கள் நீங்களாக ஏற்படுத்த வேண்டும். இதற்கும் இறைவனுடைய உதவியை நாடுதல் வேண்டும் இருப்பினும் முயற்சிகள் உங்களுடையதாக இருக்க வேண்டும்.