13-1-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
போகி பொங்கல் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகளின் விளக்கங்கள் என்ன?
போகிப் பண்டிகை அன்று பழமையான பொருட்களையும் உடைந்ததையும் வீதியில் போட்டு எரித்து விடுகின்றனர். புதிய பொருட்களை அகம் தனில் (வீட்டின் உள்ளே) வைத்து விடுகின்றனர். இதன் தாத்பரியம் (அர்த்தம்) என்ன என்று சிறிது சிந்தித்தல் வேண்டும். இந்நாளில் நம்மிடம் இருக்கும் தீயவைகளையும் தீய பழக்கங்களையும் உறுதியாக எரித்து விட வேண்டும். இது பொருட்களைக் குறிப்பதல்ல என உணர்தல் வேண்டும். குறிப்பாக நம்மிடமிருக்கும் தீய பழக்கங்கள் தீய குணங்கள் தீய தன்மைகள் ஆகியவற்றை எரித்துவிட்டு அனைத்தும் நல்வழியில் மாறுதல் வேண்டும் என்பதை உணர்த்திடவே இந்நாள் கொண்டாடப்படுகின்றது. அடுத்து வருகின்ற பொங்கல் மாட்டுப் பொங்கல் என்பதையெல்லாம் கொண்டாடுகின்றீர்கள். நியாயமாகக் கண்டால் சிறு அளவிற்கே விவசாயம் என்பது தற்போது உண்டு. இதற்குப் பல காரணங்கள் கண்டு கொள்ளலாம். ஆயினும் முக்கியமான காரணம் நமது சுயநலத்திற்காக இயற்கை வளங்களை அழிக்கும் விருப்பம். பொங்கல் பண்டிகை பூமி விளைவதற்காக அதற்கு உணவளிக்கும் பூமாதேவிக்கும் பூமியில் உணவை வழங்கும் அன்னபூரணி தேவிக்கும் நன்றி செலுத்தக்கூடிய நாளாகும். இதனைக் குறித்திடவே புதிய பானையில் பொங்கல் வைத்து ஆனந்தம் காண்கின்றனர். இக்காரணத்தை வைத்து விசேஷமாக உணவுகள் படைத்தும் தெய்வத்தை சாந்திப்படுத்துகின்றனர் நன்றி செலுத்துகின்றனர். அடுத்ததாக மாட்டுப் பொங்கல் என்கின்ற ஒன்று உண்டு. இந்நாளில் இதற்குப் பெரிய அர்த்தம் எதுவும் இல்லை என்றே கூறுவோம். ஏனெனில் இக்காலத்தில் நிலத்தை உழுவதற்கு வாகனங்கள் மற்றும் நவீன கருவிகள் உபயோகப்படுத்துகின்றனர். இருப்பினும் விவசாயத்தில் அறுவடை செய்தவை அனைத்தையும் மாடுகள் பூட்டிய வண்டியில் சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் அம்மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வழியாக அவைகளுக்கும் நல்காரியங்கள் அன்று நடைபெறுகிறது. மேலும் பால் சுரந்து தரும் பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் நாளாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் கணக்கிட்டுப் பார்த்தால் அன்ன பூரணியை நாம் தலை வணங்கி நன்றி செலுத்தும் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும். போகியில் தீயவற்றை நீக்கி நல் மார்க்கங்களை நாடி பின்பு இக்காலத்தில் இதுவரை கிடைத்த அனைத்திற்கும் நன்றி செலுத்தவே இம்மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இதனை உணராமல் ஆனந்தக் கோஷங்களில் (பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் என்று பண்டிகை அன்று கூச்சலிடுவது) ஈடுபடுவது அர்த்தமற்றது.