6-8-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
காண்பவனும் அவனே கண்டதும் அவனே இடைவெளியும் அவனே என்ற ஓர் சொல்லுக்குப் பொருள் என்ன?
அனைத்திலும் இறைவன் இருக்கின்றான் என்கின்றதை உணர்த்திடவே இவ்வித சொல்லாகின்றது. அகம் பிரம்மாஸ்மி என்பது ஒரு பக்கமாக யாமும் பிரம்மமும் ஒன்றே என்கின்ற பொருள் அளிக்கின்றது. இது அதற்கும் மேலாக யாம் மட்டுமின்றி அனைத்தும் இறை அருளே அனைத்தும் பரப்பிரம்மமே என்கின்ற பொருளை விளக்குகின்றது. உட்பொருள் என்னவென்றால் இந்நிலையில் அனைத்து உயிர் ஜீவராசிகளின் மேலும் அன்பு செலுத்த வேண்டும். பாசம் செலுத்த வேண்டும். அவர்களையும் இறைவனாக காணுதல் வேண்டும் என்பதே பொருளாகின்றது. கலியுகத்தில் இது சிறிது கடினமானதாகும் என யாம் அறிவோம். இருப்பினும் இயன்ற அளவிற்கு இறைவனை அனைத்திலும் கண்டு தீயவையையும் தீயசெயல்களையும் நல்செயல்களையும் இறைவனின் திருவிளையாட்டாகக் கண்டுகொண்டால் குழப்பம் நீங்குவது மட்டுமல்லாமல் மேன்மையும் அடையக்கூடும் என்பதே பொருள் ஆகின்றது.