23-1-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
நாம் காணும் துக்கங்களுக்கு மூல காரணம் என்ன?
இந்தக் கேள்விக்கு ஒரே வரியில் எதிர்பார்ப்புகள் என்று பதில் கூறினோம். எவ்விதம் என்றால் எவ்விதமான ஆசைகள், பாசங்கள், விகாரங்கள் ஆகியவை மனதில் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் தேடிப் பார்த்தால் நமது எதிர்பார்ப்புகள் என்று உணரலாம். எதிர்பார்ப்பின்றி துக்கம் இல்லை. எதிர்பார்ப்பின்றி தோல்வி இல்லை. எதிர்பார்ப்பின்றி மோசம் போவதில்லை. எதிர்பார்ப்பின்றி தீயது எதுவும் நடைபெறுவதில்லை என்பதை எளிதாக உணர முடியும். நாம் உறுதியாக எதிர்பார்ப்பின்றி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பின்றி என்ன வருகிறதோ என்ன நடக்கின்றதோ அனைத்தும் அவன் செயல் அவன் அருள் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதன் இறைவனின் திருவடிகளை எளிதாக அடைந்திட முடியும். இது பெரும் சாதனை அல்ல கடினமான சாதனை என்று கூறுகிறோம். எதிர்பார்ப்பின்றி வாழ்கின்றவன் எவன் என்று தேடினால் எளிதாகக் காண்பதில்லை. இத்தகைய மனிதர்கள் எதிர்பார்ப்புகள் வேண்டாம் என எண்ணிக் காடுகளிலும் குகைகளிலும் மறைந்து விடுகின்றனர். மக்கள் மத்தியில் வாழ்கின்றவனுக்கு எதிர்பார்ப்புகள் உறுதியாக இருக்கும். இதில் நல்ல எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தீய எதிர்பார்ப்புகளை நீக்கி விட்டால் தெய்வ நிலை தெய்வ காட்சிகள் காணக்கூடும்.