9-7-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
மழை கொடுப்பது யார் வருணனா?
இதை யாம் சிறிது மறுக்க வேண்டும். நன்றாக சிந்தித்தால், மழை நமக்கு அளிப்பது சூரிய பகவான் ஆவார் என்று அறிதல் வேண்டும். பூமியில் இருக்கும் நீர் தனை ஆவியாக்கி மேல் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றி சில இடங்களில் மழை பொழிய வைக்கின்றான். பின்பு இந்நாட்டில் இச்சமயத்தில் இவ்வளவிற்கு வெப்பம் இருந்த போதிலும் மழை ஏன் இல்லை? என்று ஓர் வினாவும் எழும்புகின்றது. இதற்குப் பொருள் எளிது. இம்மழை மேகங்கள் எங்கு தர்மம் நிலை நாட்டுகின்றதோ அங்கு செல்லும் என்பதே பொருள்.
இதற்குச் சிறிதாக உதாரணங்கள் யாம் அளிப்போம். ஆகம ரீதியில் சிறப்பாக இன்றும் ஆலய வழிபாடுகள் நடக்கும் தலம் பரசுராம ஷேத்திரம் என்பதும் அங்கு மழை எப்பொழுதும் பொழியும் என்கின்ற நிலையும் உண்டு. இரண்டாவதாக கர்நாடகா எனும் பிரதேசத்தில் பலப்பல ஆண்டுகளாக ஆலயங்களில் அன்னம் அளிக்கப்படுகின்றது. இது அன்னதான சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதன் வழியாக அங்கும் மழை பொழிகின்றது. ஓர் குறுகிய காலத்திற்கு முன்பாகவே இந்நாட்டிலும் இத்தகைய தானங்கள் மீண்டும் துவங்கியுள்ளார்கள் என்பதும் சிறிது காலமாகவே வழிபாடுகளில் சிரத்தை காட்டுகின்றனர் என்றும் இங்கு எடுத்து உரைத்தோமே. இனி வரும் காலங்களில் இங்கும் நன்றாக மழை பொழியக் காணும் என்றென கூறுகின்றோம்.