12-6-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
பொதுவாக வெப்பம் அதிகம் என்று பலர் கூறுவதைக் கேட்டோம். மனிதனின் உள்ளிருக்கும் வெப்பத்தை விட இந்த வெப்பம் பெரிதா? என்று யாம் கேட்கிறோம். உள்ளிருக்கும் அனைத்தும் வெப்பம் அளிப்பதாகவே காண்கின்றோம். இவ்வெப்பத்தின் காரணமாக, மனிதனின் சிந்தனை குலைந்து போவதையும் கண்டோம். இவ்வெப்பம் எதனால் உண்டாகுகின்றது என சிந்தித்தல் வேண்டும். வெளியாகக் காணும் வெப்பம் கதிரவனால் என்று உறுதியாக கூற இயலும், உள்ளில் இருக்கும் வெப்பம் எதனால் தோன்றுகிறது என வினாவக் கண்டால், இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஓர் கதிரவன் தானா? பல கதிரவர்கள் உள்ளிருந்து ஆட்டிப் படைக்கின்றனர் என்றும் இங்கு எடுத்தரைப்போம். இதில் முதன்மையான அதிக வெப்பம் அளிக்கும் காரணம் என்ன என வினாவக் கண்டால் இதற்கு மூல காரணமாக யாம் காண்பது தேவையற்ற எதிர்பார்ப்புக்கள் என்று கூறுவோம். எதிர்பார்ப்புகளின் விளைவாக பலப்பல தவறுகள் செய்கின்றனர் மானிடர் என்றும் கூறி இங்கிருக்கும் அனைவரையும் யாம் சுட்டிக் காட்டவில்லை என்றும் அறிதல் வேண்டும். இது ஓர் பொது விளக்கமாக எடுத்துக் கொள்வீர்களாக.
முதலாவதாக ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பு பெண்ணாக பிறந்தால் ஆ என்ன துக்கம்? ஏன் என்றால் அந்தப் பெண் அனைவரையும் விழுங்கி விடுவதாக எண்ணுகின்றனர். இவ்விதம் இல்லை கலியுகத்தில் பெண்ணே பெரிது என்று கூறுவோம்.
இரண்டாவதாக பெற்றக் குழந்தை இந்தக் கல்வி கற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அக்குழந்தைக்கு என்ன விருப்பம் என்று எவரும் சிந்திப்பதில்லை. அந்த ஆன்மா எந்த நாட்டம் செல்கின்றது என்று எவரும் சிந்திப்பதில்லை. இது ஓர் பெரும் வெப்பமாக யாம் காண்கின்றோம்.
மூன்றாவதாக அக் குழந்தை அவ்வழியே செல்லாது வேறு வழி நாடும் போது ஆ என்ன துயரம் மீண்டும் வருத்தமே இதன் வழியாக எதிர்பார்ப்பு போய் விட்டது என் வாழ்க்கை போய் விட்டது என்று பெற்றோர் கருதுவார்கள். இதுவும் வெப்பத்தை உண்டாக்குகிறது.
நான்காவதாக இன்னாரைத்தான் நீ திருமணம் புரிதல் வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என குழந்தை கூறுகிறது பிடிக்காவிட்டால் என்ன சொத்து இருக்கின்றது என்று கூறுகின்றனர். இவ்விதம் பல வகையான சச்சரவுகள் அகம் தனில் வீண் விவாதங்கள் அனைத்தும் நடந்து ஓர் உஷ்ணமே உண்டாக்குகின்றது. விளைவு பூகம்பம் அமைதி போய் விட்டது. இதற்கு ஆண்டவனை ஓர் வழி கேட்போம். என்ன கேட்கப் போகின்றீர்கள்? நாம் உனக்கு அபிஷேகம் செய்கின்றோம் எனக்கு அமைதியைக் கொடு என்று உடனடியாக இங்கு ஓர் ஒப்பந்தம் ஓர் வியாபாரம் நடைபெறுகின்றது. உனது அபிஷேகம் ஆண்டவனுக்கு எதற்கு ஐயா? என பூசாரி வினாவுவான் என எதிர்பார்கின்றோம் ஆனால் அதுவும் அவ்விதம் இல்லை ஓர் இருநூறு ரூபாய் தட்சணையாக நீ வைத்து விடு அனைத்தும் சிறப்பாக ஆண்டவன் மன்னிப்பான் என்று கூறுகின்றனர். பணம் செலுத்தி செலுத்தி மனிதனின் வாழ்க்கையே வியாபாரமாகி விட்டது. இவ்விதம் அனைத்தும் வியாபார ரீதியில் நீ இது தருகிறாயா நான் அது தருகிறேன் என்பது சாதாரண ஓர் காரியமாகி விட்டது.