மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #75

21-1-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வெளிச்சத்தின் தன்மை என்ன? அதன் நிலை என்ன?

இரவு நேரங்களில் நாம் எதையும் காண்பதில்லை சூரியனின் வெளிச்சம் வந்த பிறகே அனைத்தும் தெளிவாகின்றது அல்லவா? இதனை வைத்து ஒன்றை உணர வேண்டும். வெளிச்சம் தெளிவாக்குகின்றது என்பதே பொருள். காயத்ரியின் தன்மையும் இதுவே. காயத்திரி மந்திர ஜெபத்தின் முக்கியமான அம்சம் எனக்கு வெளிச்சத்தை கொடு என்பதாகும். வெளிச்சம் என்பது இக்காலத்தில் எவ்விதமான மின்சார உபகரணங்கள் இருந்த போதிலும் சூரியனின் வெளிச்சத்திற்கு ஈடாகாது என்பது போல் சத்தியத்தின் வெளிச்சத்திற்கு எதுவும் ஈடாகாது. சத்தியம் என்பது இறைவன் ஒருவனே என்பதாகும். மற்ற சத்தியங்கள் அனைத்தும் நிலையற்றவை என்று அறிய வேண்டும். சத்தியத்தின் வெளிச்சத்தை நோக்கி நாம் செல்ல தெளிவு பெறுகின்றோம். தேவையற்ற எண்ணங்கள் சிந்தனைகள் தேவையற்ற மனநிலைகள் மாறுகின்றதை உணருதல் வேண்டும். இதுவே உண்மையான வெளிச்ச நிலை. இறைவனை தேடுதல் இறைவனை நாடுதல் இது ஒன்றே நம்மை வெளிச்சமாக்க முடியும் என்பதை நாம் அறிய வேண்டும். அந்த வெளிச்சத்தை நாம் அடையும் காலத்தில் கண்களை மூடிக்கொள்கிறோம். அந்த இருட்டிலிருந்து வெளிச்சம் தானாக தென்படுகிறது என்றால் அவ்வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என உணர்தல் வேண்டும் சிந்தித்தல் வேண்டும். சிந்தித்தால் வெளிச்சம் நமக்கு உள்ளிருந்து வருகிறது என்பதை உணர முடியும். அப்போது சத்தியம் எங்கு வசிக்கின்றது என நாம் சிந்தித்தால் நமக்குள்ளே இறைவன் இருக்கின்றான் என்பதை உணர முடியும். இதனை மூடி மறைத்துள்ளது நமது மானசீக அவஸ்தைகள் ஆகும். காமகுரோத ரோகங்கள் தேவையற்ற எண்ணங்கள் தேவையற்ற அகங்காரங்கள் அனைத்தும் இருட்டைப் போல் சூழ்ந்து கொண்டு சத்தியத்தை மறைக்கும். தேவையற்ற அனைத்தையும் நீக்கிக்கொள்ள அழகான சத்தியம் வெளியாகி முழு தெளிவோடு வாழ்ந்திட இயலும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.