பாடல் #1778

பாடல் #1778: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உடல்பொரு ளாவி யுதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியிலடி வைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடிய பிறப்பறக் காட்டின னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலபொரு ளாவி யுதகததாற கொணடு
படரவினை பறறறப பாரததுக கைவைதது
நொடியிலடி வைதது நுணணுணர வாககிக
கடிய பிறபபறக காடடின னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கை வைத்து
நொடியில் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே.

பதப்பொருள்:

உடல் (உடல்) பொருள் (உடலுக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன்) ஆவி (ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து) உதகத்தால் (தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி) கொண்டு (எடுத்துக் கொண்டு வரும் படி செய்து)
படர் (அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற) வினை (பல விதமான வினைகளால்) பற்று (உருவாகுகின்ற பற்றுக்கள்) அற (நீங்கும் படி) பார்த்து (தமது திருக்கண்ணால் பார்த்து [நயன தீட்சை]) கை (தமது திருக்கரங்களை) வைத்து (வைத்து அபயம் கொடுத்து [ஸ்பரிச தீட்சை])
நொடியில் (ஒரு கண நேரத்தில்) அடி (தமது திருவடிகளை) வைத்து (வைத்து [திருவடி தீட்சை]) நுண் (அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான) உணர்வு (உணர்வுகளை [ஞான தீட்சை]) ஆக்கி (ஆக்கிக் கொடுத்து)
கடிய (துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற) பிறப்பு (பிறவி சுழற்சியிலிருந்து) அற (நீங்குவதற்கான) காட்டினன் (வழியை காட்டி அருளினான்) நந்தியே (உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைனவன்).

விளக்கம்:

உடல், அதற்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி எடுத்துக் கொண்டு வரும் படி செய்து, அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற பல விதமான வினைகளால் உருவாகுகின்ற பற்றுக்கள் நீங்கும் படி தமது திருக்கண்ணால் பார்த்து (நயன தீட்சை), தமது திருக்கரங்களை வைத்து அபயம் கொடுத்து (ஸ்பரிச தீட்சை), ஒரு கண நேரத்தில் தமது திருவடிகளை வைத்து (திருவடி தீட்சை), அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான உணர்வுகளை (ஞான தீட்சை) ஆக்கிக் கொடுத்து, துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற பிறவி சுழற்சியிலிருந்து நீங்குவதற்கான வழியை காட்டி அருளினான் உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைவன்.

பாடல் #1779

பாடல் #1779: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உயிராஞ் சரீரமு மொண் பொருளான
வியவார் பரமும் பின்மேவு பிராணன்
செயலார் சிவமுஞ் சிற்சத்தி யாதிக்கே
யுயலார் குருபர னுய்யக்கொண் டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயிராஞ சரீரமு மொண பொருளான
வியவார பரமும பினமெவு பிராணன
செயலார சிவமுஞ சிறசததி யாதிககெ
யுயலார குருபர னுயயககொண டானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயிர் ஆம் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவு ஆர் பரமும் பின் மேவும் பிராணன்
செயல் ஆர் சிவமும் சித் சத்தி ஆதிக்கே
உயல் ஆர் குரு பரன் உய்ய கொண்டானே.

பதப்பொருள்:

உயிர் (உயிரோடு) ஆம் (இருக்கின்ற) சரீரமும் (உடலும்) ஒண் (அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) பொருள் (பொருள்) ஆன (ஆகிய ஆன்மாவும்)
வியவு (அனைத்திலும் உயர்ந்து) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) பரமும் (பரம்பொருளும்) பின் (உடல் எடுத்த பிறகு) மேவும் (வந்து சேர்ந்து கொள்ளுகின்ற) பிராணன் (மூச்சுக்காற்றும் ஆகிய இவை அனைத்தின்)
செயல் (செயல்களிலும்) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) சிவமும் (இறைவனும்) சித் (ஞானமாக இருக்கின்ற) சத்தி (இறைவியுமே) ஆதிக்கே (ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள்)
உயல் (என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம்) ஆர் (முழுமையாக இருக்கின்ற) குரு (குருவாகிய) பரன் (பரம்பொருள்) உய்ய (அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு) கொண்டானே (ஆட்கொண்டு அருளுவார்).

விளக்கம்:

உயிரோடு இருக்கின்ற உடலும், அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவும், அனைத்திலும் உயர்ந்து முழுவதுமாக இருக்கின்ற பரம்பொருளும், உடல் எடுத்த பிறகு வந்து சேர்ந்து கொள்ளுகின்ற மூச்சுக்காற்றும், ஆகிய இவை அனைத்தின் செயல்களிலும் முழுவதுமாக இருக்கின்ற இறைவனும் ஞானமாக இருக்கின்ற இறைவியுமே ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள் என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம் முழுமையாக இருக்கின்ற குருவாகிய பரம்பொருள் அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு ஆட்கொண்டு அருளுவார்.

பாடல் #1780

பாடல் #1780: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பச்சிமத் திக்கிலே வைச்ச வாசாரியன்
நிச்சலு மென்னை நினையென்ற வப்பொரு
ளுச்சிக்குக் கீழது வுண்ணாவுக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பசசிமத திககிலெ வைசச வாசாரியன
நிசசலு மெனனை நினையெனற வபபொரு
ளுசசிககுக கீழது வுணணாவுககு மெலது
வைசச பதமிது வாயதிற வாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பச்சிமம் திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அப் பொருள்
உச்சிக்கு கீழ் அது உள் நாவுக்கு மேல் அது
வைத்த பதம் இது வாய் திறவாதே.

பதப்பொருள்:

பச்சிமம் (மேல்) திக்கிலே (திசையிலே) வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) ஆசாரியன் (குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது)
நிச்சலும் (தினமும்) என்னை (தன்னை) நினை (நினைத்துக் கொண்டே இரு) என்ற (என்று அருளிய) அப் (அந்த) பொருள் (பரம்பொருளின் வடிவமானது)
உச்சிக்கு (உச்சந் தலைக்கு) கீழ் (கீழ்) அது (உள்ள இடத்திலும்) உள் (வாய்க்கு உள்ளே இருக்கின்ற) நாவுக்கு (அண்ணாக்குக்கு) மேல் (மேலே) அது (உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில்)
வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) பதம் (திருவடிகளாக) இது (இருக்கின்றது) வாய் (வாய்) திறவாதே (திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்).

விளக்கம்:

மேல் திசையிலே இறையருளால் வைக்கப் பட்ட குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது தினமும் தன்னை நினைத்துக் கொண்டே இரு என்று அருளிய அந்த பரம்பொருளின் வடிவமானது உச்சந் தலைக்கு கீழ் உள்ள இடத்திலும், வாய்க்கு உள்ளே இருக்கின்ற அண்ணாக்குக்கு மேலே உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில் இறையருளால் வைக்கப் பட்ட திருவடிகளாக இருக்கின்றது. வாய் திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்.

பாடல் #1781

பாடல் #1781: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பிட்டி யடித்துப் பிதற்றித் திரிவேனை
யொட்டடித் துள்ளமர் மாசெல்லாம் வாங்கிப்பின்
தட்டொக்கா மாற்றின தன்னையு மென்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிடடி யடிததுப பிதறறித திரிவெனை
யொடடடித துளளமர மாசெலலாம வாஙகிபபின
தடடொககா மாறறின தனனையு மெனனையும
வடடம தொததது வாணிபம வாயதததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிட்டி அடித்து பிதற்றி திரிவேனை
ஒட்டு அடித்து உள் அமர் மாசு எல்லாம் வாங்கி பின்
தட்டு ஒக்கா மாற்றினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்த அதே.

பதப்பொருள்:

பிட்டி (அனைத்தையும் இறைவனே செய்கின்றான் என்று நினைக்காமல் நான் செய்கின்றேன் என்கிற தாழ்வான எண்ணத்தில் பல விதமான செயல்களை) அடித்து (செய்து கொண்டு) பிதற்றி (தேவை இல்லாதவற்றை பேசிக் கொண்டு) திரிவேனை (வீணாக அலைந்து திரிந்தாலும் இறைவன் விதித்த தர்மப்படி வாழ்க்கையை கடத்துகின்ற எம்மை)
ஒட்டு (தூசுகளை) அடித்து (நீக்கி) உள் (எமக்கு உள்ளே) அமர் (வீற்றிருக்கின்ற) மாசு (அழுக்குகளை) எல்லாம் (அனைத்தையும்) வாங்கி (தாமே வாங்கிக் கொண்டு) பின் (பிறகு)
தட்டு (குற்றத்தை) ஒக்கா (சேர்ந்து இருக்காத தூய்மையாக) மாற்றினன் (எம்மை மாற்றி அருளிய) தன்னையும் (இறைவனையும்) என்னையும் (எம்மையும்)
வட்டம் (ஒரே வட்டம்) அது (ஆகிய தன்மைக்குள்) ஒத்து (ஒன்றாக சேர்ந்து இருப்பது) அது (ஆகிய நிலைக்கு கொண்டு வந்து) வாணிபம் (தம்மை நோக்கி பிற உயிர்களும் வருவதற்கான வழிகளை எம்மை செய்ய வைத்து) வாய்த்த (அதன் பயனால் முக்தியை கொடுத்து) அதே (எமக்கு அருளுகின்றான் இறைவன்).

விளக்கம்:

அனைத்தையும் இறைவனே செய்கின்றான் என்று நினைக்காமல் நான் செய்கின்றேன் என்கிற தாழ்வான எண்ணத்தில் பல விதமான செயல்களை செய்து கொண்டு, தேவை இல்லாதவற்றை பேசிக் கொண்டு, வீணாக அலைந்து திரிந்தாலும் இறைவன் விதித்த தர்மப்படி வாழ்க்கையை கடத்துகின்ற எம்மிடமுள்ள தூசுகளை நீக்கி, எமக்குள்ளே வீற்றிருக்கின்ற அழுக்குகளை அனைத்தையும் தாமே வாங்கிக் கொண்டு அருளினான் இறைவன். பிறகு, குற்றத்தை சேர்ந்து இருக்காத தூய்மையாக எம்மை மாற்றி அருளிய இறைவனையும் எம்மையும் ஒரே வட்டமாகிய தன்மைக்குள் ஒன்றாக சேர்ந்து இருப்பதாகிய நிலைக்கு கொண்டு வந்து, தம்மை நோக்கி பிற உயிர்களும் வருவதற்கான வழிகளை எம்மை செய்ய வைத்து, அதன் பயனால் முக்தியை கொடுத்து எமக்கு அருளுகின்றான் இறைவன்.

பாடல் #1782

பாடல் #1782: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவ
னிருக்கின்ற தன்மையை யேது முணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட வீசனைக் கண்டுகொண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரிககினற பலலுயிரக கெலலாந தலைவ
னிருககினற தனமையை யெது முணரார
பிரிககினற விநதுப பிணககறுத தெலலாங
கருககொணட வீசனைக கணடுகொண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே.

பதப்பொருள்:

தரிக்கின்ற (உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (அனைத்திற்கும்) தலைவன் (தலைவனாக)
இருக்கின்ற (இருக்கின்ற இறைவனின்) தன்மையை (தன்மைகள்) ஏதும் (எதையும்) உணரார் (உணராதவர்கள் இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடை பிடித்து வாழும் போது)
பிரிக்கின்ற (இறைவனிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருக்கின்ற) விந்து (மாயையாகிய) பிணக்கு (ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை) அறுத்து (அறுத்து) எல்லாம் (அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும்)
கரு (தமக்குள்ளேயே சேர்த்துக்) கொண்ட (கொண்டு அருளுகின்ற) ஈசனை (இறைவனை) கண்டு (யாம் கண்டு) கொண்டேனே (கொண்டோம்).

விளக்கம்:

உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற பல விதமான உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனின் தன்மைகள் எதையும் உணராதவர்கள் இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடை பிடித்து வாழும் போது, இறைவனிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருக்கின்ற மாயையாகிய ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை அறுத்து, அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் தமக்குள்ளேயே சேர்த்துக் கொண்டு அருளுகின்ற இறைவனை யாம் கண்டு கொண்டோம்.

பாடல் #1783

பாடல் #1783: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

கூடு முடல்பொரு ளாவிகுறிக் கொண்டு
நாடி யருள்வைத் தருண்ஞான சத்தியாற்
பாட லுடலினிற் பற்றற நீக்கியே
கூடிய தானவனாகக் குறிக் கொண்டே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூடு முடலபொரு ளாவிகுறிக கொணடு
நாடி யருளவைத தருணஞான சததியாற
பாட லுடலினிற பறறற நீககியெ
கூடிய தானவனாகக குறிக கொணடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூடும் உடல் பொருள் ஆவி குறி கொண்டு
நாடி அருள் வைத்த அருள் ஞான சத்தி ஆல்
பாடல் உடலினில் பற்று அற நீக்கியே
கூடிய தான் அவன் ஆக குறி கொண்டே.

பதப்பொருள்:

கூடும் (ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) உடல் (உடலையும்) பொருள் (அதற்குள் மறைந்து இருக்கின்ற பொருளாகிய இறைவனையும்) ஆவி (அந்த இறைவனின் சிறு பகுதியாகிய ஆன்மாவையும்) குறி (உணர்ந்து கொள்வதையே குறிக்கோளாகக்) கொண்டு (கொண்டு)
நாடி (உயிர்கள் தம்மை தேடி வர வேண்டும் என்கின்ற) அருள் (மாபெரும் கருணையினால் தமது அருளை) வைத்த (அவர்களுக்குள் வைத்து) அருள் (அருளிய) ஞான (அறிவு வடிவாகிய) சத்தி (இறை சக்தி) ஆல் (ஆனது)
பாடல் (இறைவனை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால் எப்போதும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்துக் கொண்டு தமக்கான செயல்களை செய்கின்ற) உடலினில் (உயிர்களின் உடலில் சேர்ந்து இருக்கின்ற) பற்று (ஆசைகள் பற்றுக்கள் எல்லாம்) அற (முழுவதுமாக) நீக்கியே (நீக்கி விட்டு)
கூடிய (அந்த உயிர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து) தான் (அவர்கள் தாம்) அவன் (இறைவன்) ஆக (ஆகவே) குறி (இருக்கின்ற நிலையையே குறிக்கோளாக) கொண்டே (கொண்டு இருக்க வைக்கின்றான்).

விளக்கம்:

உயிர்களின் உடல், அதற்குள் மறைந்து இருக்கின்ற பொருளாகிய இறைவன், அந்த இறைவனின் சிறு பகுதியாகிய ஆன்மா, ஆகிய மூன்றும் ஒன்றாக சேர்ந்து இருப்பதை உணர்ந்து கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு, உயிர்கள் தம்மை தேடி வர வேண்டும் என்கின்ற மாபெரும் கருணையினால் தமது அருளை அவர்களுக்குள் வைத்து அருளுகின்றான் அறிவு வடிவாகிய இறைவன். அந்த இறைவனின் ஞான சக்தியானது இறைவனை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தால் எப்போதும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்துக் கொண்டு தமக்கான செயல்களை செய்கின்ற உயிர்களின் உடலில் சேர்ந்து இருக்கின்ற ஆசைகள் பற்றுக்கள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக நீக்கி விட்டு, அந்த உயிர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து, அவர்கள் தாமே இறைவனாக இருக்கின்ற நிலையையே குறிக்கோளாக கொண்டு இருக்க வைக்கின்றான்.

பாடல் #1784

பாடல் #1784: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

கொண்டா னடியென் னடிகைக் குறிதனைக்
கொண்டா னுயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் மலமுற்றுந் தந்தவன் கோடலால்
கொண்டா னெனவொன்றுங் கூடிநி லானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொணடா னடியென னடிகைக குறிதனைக
கொணடா னுயிரபொருள காயக குழாததினைக
கொணடான மலமுறறுந தநதவன கொடலால
கொணடா னெனவொனறுங கூடிநி லானே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொண்டான் அடி என் அடி கை குறி தன்னை
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை
கொண்டான் மலம் முற்றும் தந்த அவன் கோடல் ஆல்
கொண்டான் என ஒன்றும் கூடி நில்லானே.

பதப்பொருள்:

கொண்டான் (எம்மை ஆட்கொண்ட இறைவன்) அடி (தமது திருவடி கருணையால்) என் (உலக வாழ்க்கையை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற எம்மை) அடி (அவனது அருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை கடை பிடிக்கும் வழியில் செல்ல வைத்து) கை (தமது திருக்கையினால் அபயம்) குறி (என்கிற அருள் குறியைக் காட்டி) தன்னை (எம்மை)
கொண்டான் (ஆட்கொண்டு அருளி) உயிர் (எமது உயிர்) பொருள் (எமக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற அறிவு வடிவாகிய இறை சக்தி) காய (எமது உடல்) குழாத்தினை (ஆகிய மூன்றும் சேர்ந்து இருக்கின்ற கூட்டத்தை)
கொண்டான் (தனதாக ஏற்றுக் கொண்டு) மலம் (எமக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களையும்) முற்றும் (முழுவதுமாக நீக்கி விட்டு) தந்த (அவற்றை தந்த) அவன் (அவனே) கோடல் (மீண்டும் எடுத்துக்) ஆல் (கொள்வதின் மூலம்)
கொண்டான் (எம்மை ஆட்கொண்டு எம்மோடு இருக்கின்றான்) என (என்றாலும்) ஒன்றும் (எதனுடனும்) கூடி (கூடி) நில்லானே (இருக்காமல் அனைத்தையும் தாண்டியும் நிற்கின்றான்).

விளக்கம்:

எம்மை ஆட்கொண்ட இறைவன் தமது திருவடி கருணையால் உலக வாழ்க்கையை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற எம்மை அவனது அருளால் உணர்த்தப்பட்ட தர்மத்தை கடை பிடிக்கும் வழியில் செல்ல வைத்து, தமது திருக்கையினால் அபயம் என்கிற அருள் குறியைக் காட்டி எம்மை ஆட்கொண்டு அருளினான். அதன் பிறகு எமது உயிர், எமக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற அறிவு வடிவாகிய இறை சக்தி, எமது உடல், ஆகிய மூன்றும் சேர்ந்து இருக்கின்ற கூட்டத்தை தனதாக ஏற்றுக் கொண்டு, எமக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களையும் முழுவதுமாக நீக்கி வீட்டு அவற்றை தந்த அவனே மீண்டும் எடுத்துக் கொள்வதின் மூலம் எம்மை ஆட்கொண்டு எம்மோடு இருக்கின்றான் என்றாலும் எதனுடனும் கூடி இருக்காமல் அனைத்தையும் தாண்டியும் நிற்கின்றான்.

பாடல் #1785

பாடல் #1785: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

குறிக்கின்ற தேகமுந் தேகியுங் கூடி
நெறிக்கும் பிராண னிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றியே நேர்மை
பிறிக்க வறியாதார் பேயோ டொப்பரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிககினற தெகமுந தெகியுங கூடி
நெறிககும பிராண னிலைபெறற சீவன
பறிககினற காயததைப பறறியெ நெரமை
பிறிகக வறியாதார பெயொ டொபபரே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றியே நேர்மை
பிறிக்க அறியாதார் பேயோடு ஒப்பரே.

பதப்பொருள்:

குறிக்கின்ற (ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட) தேகமும் (உடலும்) தேகியும் (உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும்) கூடி (ஒன்றாக சேர்ந்து)
நெறிக்கும் (வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட) பிராணன் (மூச்சுக்காற்றும்) நிலை (அந்த மூச்சுக்காற்றை நிலையாகக்) பெற்ற (கொண்டு வாழ்கின்ற) சீவன் (உயிரும்)
பறிக்கின்ற (சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற) காயத்தை (உடலை) பற்றியே (சார்ந்து தாம் வாழ்ந்தாலும்) நேர்மை (இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை)
பிறிக்க (உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து) அறியாதார் (அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள்) பேயோடு (ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப்) ஒப்பரே (போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள்).

விளக்கம்:

ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட உடலும், உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும், ஒன்றாக சேர்ந்து வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட மூச்சுக்காற்றும், அந்த மூச்சுக்காற்றை நிலையாகக் கொண்டு வாழ்கின்ற உயிரும், ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற உடலை சார்ந்து தாம் வாழ்ந்தாலும் இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை, உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள், ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப் போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள்.

பாடல் #1786

பாடல் #1786: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்று
முணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
யுணர்வுடை யார்க ளுணர்ந்த வக்கால
முணர்வுடை யார்க ளுணர்ந்து கண்டாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரவுடை யாரகட குலகமுந தொனறு
முணரவுடை யாரகட குறுதுய ரிலலை
யுணரவுடை யாரக ளுணரநத வககால
முணரவுடை யாரக ளுணரநது கணடாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்வு உடையார்களுக்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்களுக்கு உறு துயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.

பதப்பொருள்:

உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உலகமும் (அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற) தோன்றும் (தர்மங்களும் தெரிய வரும்)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உறு (உலகத்தில் அனுபவிக்க வேண்டிய) துயர் (துன்பங்கள்) இல்லை (என்று எதுவும் இல்லை)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்த (அதை உணர்ந்த) அக் (அந்த) காலம் (நொடிப் பொழுதிலேயே)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்து (தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து) கண்டாரே (தரிசிப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1785 இல் உள்ளபடி உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற அனுபவத்தை பெற்றவர்களுக்கு, அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தர்மங்களும் தெரிய வரும். அவர்களுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் என்று எதுவும் இல்லை. அவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்த அந்த நொடிப் பொழுதிலேயே தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து தரிசிப்பார்கள்.

பாடல் #1787

பாடல் #1787: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

காய பரத்தி லலைந்து துரியத்துச்
சாய விரிந்து குவிந்து சகலத்தி
லாய வவ்வாறே யடைந்து திரிந்தோர்குத்
தூய வருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காய பரததி லலைநது துரியததுச
சாய விரிநது குவிநது சகலததி
லாய வவவாறெ யடைநது திரிநதொரகுத
தூய வருளதநத நநதிககென சொலவதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காய பரத்தில் அலைந்து துரியத்து
சாய விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறே அடைந்து திரிந்தோர்கு
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே.

பதப்பொருள்:

காய (உடலாக இருக்கின்ற) பரத்தில் (பரம்பொருளின் அடையாளத்தில்) அலைந்து (வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும்) துரியத்து (கனவு நிலையை)
சாய (சார்ந்து வாழ்ந்து) விரிந்து (மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும்) குவிந்து (மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து) சகலத்தில் (வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும்)
ஆய (ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும்) அவ்வாறே (அந்த ஆசைகளின் வழியிலேயே) அடைந்து (இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து) திரிந்தோர்கு (திரிகின்ற அடியவர்களுக்கு)
தூய (மாயை இல்லாத தூய்மையான) அருள் (அருளை) தந்த (தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை) என் (என்னவென்று) சொல்வதே (யான் எடுத்து சொல்வது?).

விளக்கம்:

உடலாக இருக்கின்ற பரம்பொருளின் அடையாளத்தில் வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும், கனவு நிலையை சார்ந்து வாழ்ந்து மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும், மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும், ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், அந்த ஆசைகளின் வழியிலேயே இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து திரிகின்ற அடியவர்களுக்கு, மாயை இல்லாத தூய்மையான அருளை தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை என்னவென்று யான் எடுத்து சொல்வது?