பாடல் #1734

பாடல் #1734: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சமையத் தெழுந்த வவத்தை யீரைந்துள
சமையத் தெழுந்த விராசி யீராறுள
சமையத் தெழுந்த சதிர் ரீரெட்டுள
சமையத் தெழுந்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமையத தெழுநத வவததை யீரைநதுள
சமையத தெழுநத விராசி யீராறுள
சமையத தெழுநத சதிர ரீரெடடுள
சமையத தெழுநத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள
சமயத்து எழுந்த சதிர் ஈர் எட்டு உள
சமயத்து எழுந்த சதா சிவம் தானே.

பதப்பொருள்:

சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) அவத்தை (ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய) ஈர் (மேலாலவத்தை கீழாலவத்தை ஆகிய இரண்டிலும்) ஐந்து (ஐந்து ஐந்தாக மொத்தம் பத்து) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) இராசி (இராசிகள்) ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி மொத்தம் 12) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) சதிர் (இறையருளால் கிடைக்கின்ற பேறுகள்) ஈர் (இரண்டும்) எட்டு (எட்டும் பெருக்கி மொத்தம் 16) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்த இவை அனைத்தும்) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருள்) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களிருந்து எழுவது ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய ஐந்து விதமான மேலாலவத்தைகளும், ஐந்து விதமான கீழாலவத்தைகளும், 12 இராசிகளும், இறையருளால் கிடைக்கக் கூடிய 16 விதமான பேறுகளும் உள்ளது. இந்த சமயங்கள் அனைத்தும் சதா சிவப் பரம்பொருளே ஆகும்.

பாடல் #1735

பாடல் #1735: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நடுவு கிழக்குத் தெற்குத்தர மேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்ன
மடைவுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பா
லடியற் கருளிய முகமிவை யைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடுவு கிழககுத தெறகுததர மெறகு
நடுவு படிகநற குஙகும வனன
மடைவுள வஞசனஞ செவவரத தமபா
லடியற கருளிய முகமிவை யைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடுவு கிழக்கு தெற்கு உத்தர மேற்கு
நடுவு படிக நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ் அரத்தம் பால்
அடியற்கு அருளிய முகம் இவை ஐந்தே.

பதப்பொருள்:

நடுவு (நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம்) கிழக்கு (கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம்) தெற்கு (தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம்) உத்தர (வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம்) மேற்கு (மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகிய ஐந்து முகங்களில்)
நடுவு (ஈசானம் முகம்) படிக (படிக நிறத்திலும்) நல் (தற்புருடம் முகம் நல்ல) குங்கும (குங்கும) வன்னம் (நிறத்திலும்)
அடைவு (தெற்கு நோக்கி) உள (இருக்கின்ற அகோரம் முகம்) அஞ்சனம் (கருப்பு நிறத்திலும்) செவ் (வாமதேவம் முகம் செம்மையான) அரத்தம் (அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும்) பால் (சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றதே)
அடியற்கு (தம்மை வணங்கும் அடியவர்களுக்காக) அருளிய (இறைவன் அருளிய) முகம் (திருமுகங்கள்) இவை (இவை) ஐந்தே (ஐந்தும் ஆகும்).

விளக்கம்:

தம்மை வணங்கும் அடியவர்களுக்காக இறைவன் அருளிய திருமுகங்கள் ஐந்தாகும். இவை முறையே நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம், கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம், தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம், வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம், மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகும். ஈசானம் முகம் படிக நிறத்திலும், தற்புருடம் முகம் நல்ல குங்கும நிறத்திலும், அகோரம் முகம் கருப்பு நிறத்திலும், வாமதேவம் முகம் செம்மையான அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும், சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றது.

பாடல் #1736

பாடல் #1736: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுள
வஞ்சி னோடைந்து கரதலந் தானுள
வஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்
னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அஞசு முகமுள வைமமூனறு கணணுள
வஞசி னொடைநது கரதலந தானுள
வஞசி னொடைஞ சாயுதமுள நமபியென
னெஞசுள புகுநது நிறைநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள
அஞ்சினோடு ஐந்து கரதலம் தான் உள
அஞ்சினோடு ஐஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு உள் புகுந்து நிறைந்து நின்றானே.

பதப்பொருள்:

அஞ்சு (சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து) முகம் (திருமுகங்கள்) உள (உள்ளது) ஐம் (அந்த ஐந்து திருமுகங்களிலும்) மூன்று (முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து) கண் (திருக்கண்கள்) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐந்து (ஐந்தும் கூட்டி மொத்தம்) கரதலம் (பத்து திருக்கரங்கள்) தான் (அவருக்கு) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐஞ்சு (ஐந்தும் கூட்டி மொத்தம்) ஆயுதம் (பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக) உள (உள்ளது) நம்பி (இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற) என் (அடியவர்களின்)
நெஞ்சு (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) புகுந்து (புகுந்து) நிறைந்து (முழுவதுமாக நிறைந்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளது. அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளது. அவருக்கு பத்து திருக்கரங்கள் உள்ளது. அந்த பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக உள்ளது. இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான்.

பாடல் #1737

பாடல் #1737: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்தி தராதல மண்டஞ் சதாசிவஞ்
சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்
சத்தி யுருவ மருவஞ் சதாசிவஞ்
சத்தி சிவந்தத்துவ முப்பத்து ஆறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி தராதல மணடஞ சதாசிவஞ
சததி சிவமிகக தாபர சஙகமஞ
சததி யுருவ மருவஞ சதாசிவஞ
சததி சிவநதததுவ முபபதது ஆறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதா சிவம்
சத்தி சிவம் தத்துவம் முப்பத்து ஆறே.

பதப்பொருள்:

சத்தி (சக்தி) தராதலம் (பூமியாகிய நிலத்திலும்) அண்டம் (அண்டமாகிய ஆகாயத்தில்) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சதாசிவப் பரம்பொருளும்) மிக்க (பரிபூரணமாக) தாபரம் (சதாசிவ இலிங்கத்தில்) சங்கமம் (ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தி) உருவம் (உருவமாகவும்) அருவம் (அருவமாக) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சிவமும்) தத்துவம் (தத்துவங்கள்) முப்பத்து (முப்பத்து) ஆறே (ஆறாகவும் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

சக்தி பூமியாகிய நிலத்திலும் சதாசிவப் பரம்பொருள் அண்டமாகிய ஆகாயத்தில் இருக்கின்றார்கள். சக்தியும் சதாசிவப் பரம்பொருளும் பரிபூரணமாக சதாசிவ இலிங்கத்தில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள். சக்தி உருவமாகவும் சதாசிவப் பரம்பொருள் அருவமாகவும் இருக்கின்றார்கள். சக்தியும் சிவமும் முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருக்கின்றார்கள்.

பாடல் #1738

பாடல் #1738: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

தத்துவ மாவ தருவஞ் சராசரந்
தத்துவ மாவ துருவஞ் சுகோதைய
தத்துவ மெல்லாஞ் சகலமு மாய்நிற்குந்
தத்துவ மாகுஞ் சதாசிவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தததுவ மாவ தருவஞ சராசரந
தததுவ மாவ துருவஞ சுகொதைய
தததுவ மெலலாஞ சகலமு மாயநிறகுந
தததுவ மாகுஞ சதாசிவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தத்துவம் ஆவது அருவம் சராசரம்
தத்துவம் ஆவது உருவம் சுகோதையம்
தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) அருவம் (உருவம் இல்லாமல்) சராசரம் (அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) உருவம் (உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து) சுகோதையம் (அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) எல்லாம் (எல்லாமே) சகலமும் (அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்தும்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆகும் (ஆக இருப்பதே) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருள்) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

உருவம் இல்லாமல் அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருப்பதும், உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருப்பதும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்துமாகவும் இருப்பதே முப்பத்தாறு தத்துவங்களாகும். இந்த முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருப்பது சதா சிவப் பரம்பொருளே ஆகும்.

பாடல் #1739

பாடல் #1739: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கூறுமி னூறு சதாசிவ னெம்மிறை
வேறோரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கு
மேறுகை செய்தொழில் வானவர் தம்மோடு
மாறுசெய் வானென் மனம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூறுமி னூறு சதாசிவ னெமமிறை
வெறொரை செயது மிகைபபொரு ளாயநிறகு
மெறுகை செயதொழில வானவர தமமொடு
மாறுசெய வானென மனமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை
வேறு ஓரை செய்து மிகை பொருள் ஆய் நிற்கும்
ஏறுகை செய் தொழில் வானவர் தம்மோடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.

பதப்பொருள்:

கூறுமின் (எடுத்துக் கூறினால்) ஊறு (உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற) சதா (சதா) சிவன் (சிவப் பரம்பொருளே) எம் (எமது) இறை (இறைவனாகும்)
வேறு (வேறு வேறு விதங்களில்) ஓரை (பல விதமாக திருவிளையாடல்கள்) செய்து (செய்து) மிகை (அனைத்திற்கும் மேலான) பொருள் (பொருள்) ஆய் (ஆகவும்) நிற்கும் (அதுவே நிற்கும்)
ஏறுகை (உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து அதன் பயனால் மேலான நிலைக்கு ஏறுவதை) செய் (செய்து) தொழில் (உலக இயக்கத்திற்காக பல தொழில்களை புரிகின்ற) வானவர் (வானவர்கள்) தம்மோடு (அனைவரோடும் சேர்ந்து இருந்து)
மாறு (தீயவற்றை மாற்றி) செய்வான் (நன்மையை அருளுவதை செய்கின்றான்) என் (எமது) மனம் (மனதில்) புகுந்தானே (புகுந்தான் சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவன்).

விளக்கம்:

எடுத்துக் கூறினால் உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற சதா சிவப் பரம்பொருளே எமது இறைவனாகும். அவனே வேறு வேறு விதங்களில் பல விதமாக திருவிளையாடல்கள் செய்து அனைத்திற்கும் மேலான பொருளாகவும் நிற்கின்றான். உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து அதன் பயனால் மேலான நிலைக்கு சென்று உலக இயக்கத்திற்காக பல தொழில்களை புரிகின்ற வானவர்கள் அனைவரோடும் சேர்ந்து இருந்து தீயவற்றை மாற்றி நன்மையை அருளுவதை செய்கின்றான் எமது மனதில் புகுந்தான் சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவன்.

பாடல் #1740

பாடல் #1740: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

இருளார்ந்த கண்டமு மேந்து மழுவுஞ்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையு
மருளார்ந்த சிந்தையெம் மாதிப் பிரானைத்
தெருளார்ந் தென்னுள்ளே தெளிந்திருந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருளாரநத கணடமு மெநது மழுவுஞ
சுருளாரநத செஞசடைச சொதிப பிறையு
மருளாரநத சிநதையெம மாதிப பிரானைத
தெருளாரந தெனனுளளெ தெளிநதிருந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செம் சடை சோதி பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே.

பதப்பொருள்:

இருள் (ஆலகால விஷத்தை அருந்தியதால் கருமை) ஆர்ந்த (நிறைந்த) கண்டமும் (திருக்கழுத்தும்) ஏந்து (திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற) மழுவும் (பாசங்களை அறுக்கின்ற மழுவும்)
சுருள் (சுருள்) ஆர்ந்த (நிறைந்த) செம் (செம்மையான) சடை (சடையும்) சோதி (அந்த சடையின் மேல் ஜோதியாகப் பிரகாசிக்கும்) பிறையும் (பிறை நிலாவும்)
அருள் (அருள்) ஆர்ந்த (நிறைந்த) சிந்தை (சிந்தையும் கொண்டு விளங்குகின்ற) எம் (எமது) ஆதி (ஆதிப் பரம்பொருளாகிய) பிரானை (இறைவனை)
தெருள் (தெளிவான அறிவினால்) ஆர்ந்து (ஆராய்ந்து) என் (எனக்கு) உள்ளே (உள்ளே) தெளிந்து (தெளிவாக உணர்ந்து) இருந்தேனே (இருக்கின்றேன்).

விளக்கம்:

ஆலகால விஷத்தை அருந்தியதால் கருமை நிறைந்த திருக்கழுத்தும், திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற பாசங்களை அறுக்கின்ற மழுவும், சுருள் நிறைந்த செம்மையான சடையும், அந்த சடையின் மேல் ஜோதியாகப் பிரகாசிக்கும் பிறை நிலாவும் அருள் நிறைந்த சிந்தையும் கொண்டு விளங்குகின்ற எமது ஆதிப் பரம்பொருளாகிய இறைவனை தெளிவான அறிவினால் ஆராய்ந்து எனக்கு உள்ளே தெளிவாக உணர்ந்து இருக்கின்றேன்.

பாடல் #1741

பாடல் #1741: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்தி தானிற்கின்ற வைமுகஞ் சாற்றிடி
லுத்தர வாம முரையற் றிருந்திடுந்
தத்துவம் புரவி தற்புருடன் சீர
மத்த வகோர மகுடத்தீசா னனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி தானிறகினற வைமுகஞ சாறறிடி
லுததர வாம முரையற றிருநதிடுந
தததுவம புரவி தறபுருடன சீர
மதத வகொர மகுடததீசா னனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி தான் நிற்கின்ற ஐம் முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரை அற்று இருந்திடும்
தத்துவம் புரவி தற்புருடன் சீரம்
அத்த அகோரம் மகுடத்து ஈசானனே.

பதப்பொருள்:

சத்தி (இயங்குகின்ற சக்தியாகிய இறைவியானவள்) தான் (தானாக) நிற்கின்ற (நிற்கின்ற அசையாத சக்தியாகிய இறைவனின்) ஐம் (ஐந்து) முகம் (முகங்களோடு) சாற்றிடில் (இணைந்து விட்டால்)
உத்தரம் (வடக்கு நோக்கி இருக்கின்ற) வாமம் (வாமதேவமாகிய திருமுகம்) உரை (பேச்சு) அற்று (இல்லாமல்) இருந்திடும் (இறைவியின் ஆற்றலுக்கு உட்பட்டு விடும்)
தத்துவம் (மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதமாகிய திருமுகத்தின் தன்மையானது) புரவி (குதிரையைப் போல் விரைந்து இயங்கும்) தற்புருடன் (கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடமாகிய திருமுகம்) சீரம் (சிகப்பான இரத்தத்தின் ஓட்டம் போல இயங்கும்)
அத்த (இறைவி இறைவனில் பாதியாகி) அகோரம் (தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரமாகிய திருமுகத்தில் சேர்ந்து) மகுடத்து (நடுவில் இருவரும் இணைந்து மகுடமாக மேல் நோக்கி இருக்கின்ற) ஈசானனே (ஈசானமாகிய திருமுகத்தில் வீற்றிருப்பார்கள்).

விளக்கம்:

ஆதியிலிருந்தே தானாக இருக்கின்ற அசையாத சக்தியாகிய இறைவனின் ஐந்து விதமான திருமுகங்களோடு அசையும் சக்தியாகிய இறைவி சேர்ந்து விட்டால் வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவ திருமுகம் அமைதியாகி இறைவியின் ஆற்றலுக்கு உட்பட்டு விடும். மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாத திருமுகம் குதிரையின் ஓட்டம் போல இயங்கும். கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருட திருமுகம் சிகப்பான இரத்த ஓட்டம் போல இயங்கும். தெற்கு நோக்கி இருக்கின்ற அகோர திருமுகத்தில் இறைவனும் இறைவியும் சரிபாதியாக இருப்பார்கள். நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசான திருமுகத்தில் இறைவனும் இறைவியும் இணைந்து மகுடம் போல உயர்ந்து இருப்பார்கள்.

பாடல் #1742

பாடல் #1742: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நாணுநல் லீசானம் நடுவுச்சி தானாகுந்
தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங்
காணு மகோர மிருதையங் குய்யமாம்
வாணுறு வாமமாஞ் சத்திநற் பாதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாணுநல லீசானம நடுவுசசி தானாகுந
தாணுவின றனமுகந தறபுருட மாகுங
காணு மகொர மிருதையங குயயமாம
வாணுறு வாமமாஞ சததிநற பாதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாணு நல் ஈசானம் நடு உச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகம் தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதையம் குய்யம் ஆம்
வாண் உறு வாமம் ஆம் சத்தி நல் பாதமே.

பதப்பொருள்:

நாணு (அறிவு வடிவமாக) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) ஈசானம் (இறைவனின் ஈசான முகமானது) நடு (நடுவில்) உச்சி (உச்சியாக இருக்கின்ற) தான் (இறைவியின் தலை உச்சி) ஆகும் (ஆகும்)
தாணுவின் (முக்தியாகிய நிலை பேற்றை கொடுக்கின்ற) தன் (இறைவியின்) முகம் (திருமுகமே) தற்புருடம் (இறைவனது தற்புருடமாகிய திருமுகம்) ஆகும் (ஆகும்)
காணும் (கண்களால் அருளைக் கொடுக்கின்ற) அகோரம் (இறைவனின் அகோர முகமானது) இருதையம் (இறைவியின் இருதயமாகும்) குய்யம் (இறைவியின் கீழ்) ஆம் (பகுதியாக இருப்பது)
வாண் (அமிழ்தம் பெற்று) உறு (மேல் நிலையைக் கொடுக்கின்ற) வாமம் (இறைவனின் வாமதேவ முகம்) ஆம் (ஆகும்) சத்தி (இறைவனின் சத்தியோசாத முகமானது) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) பாதமே (இறைவியின் திருவடிகளாகும்).

விளக்கம்:

இறைவனின் ஐந்து திருமுகங்களோடு பாடல் #1741 இல் உள்ளபடி இறைவி சென்று சேரும்போது அறிவு வடிவமாக இருக்கின்ற இறைவனின் ஈசான முகம் இறைவியின் தலை உச்சியாகவும், முக்தியாகிய நிலை பேற்றைக் கொடுக்கின்ற இறைவனது தற்புருட முகம் இறைவியின் திருமுகமாகவும், கண்களால் அருளைக் கொடுக்கின்ற இறைவனின் அகோர முகம் இறைவியின் இருதயமாகவும், அமிழ்தம் பெற்று மேல் நிலையைக் கொடுக்கின்ற இறைவனின் வாமதேவ முகம் இறைவியின் கீழ் பகுதியாகவும், நன்மையைக் கொடுக்கின்ற இறைவனின் சத்தியோசாத முகம் இறைவியின் திருவடிகளாகவும் விளங்கும்.

பாடல் #1744

பாடல் #1744: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

எண்ணி லிதைய மிறைஞான சத்தியாம்
விண்ணிற் பரசிர மிக்க சிகையாகி
வண்ணக் கவசம் வனப்புடை யிச்சையாம்
பண்ணுங் கிரிகை பரநேத்திரத் திலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எணணி லிதைய மிறைஞான சததியாம
விணணிற பரசிர மிகக சிகையாகி
வணணக கவசம வனபபுடை யிசசையாம
பணணுங கிரிகை பரநெததிரத திலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எண்ணில் இதையம் இறை ஞான சத்தி ஆம்
விண்ணில் பரம் சிரம் மிக்க சிகை ஆகி
வண்ண கவசம் வனப்பு உடை இச்சை ஆம்
பண்ணும் கிரிகை பர நேத்திரத்திலே.

பதப்பொருள்:

எண்ணில் (ஆராய்ந்து பார்த்தால்) இதையம் (இதயமானது) இறை (இறைவனின்) ஞான (ஞான) சத்தி (சக்தி) ஆம் (ஆகும்)
விண்ணில் (ஆகாயத்தில் இருக்கின்ற) பரம் (பரம்பொருளின் உறுப்புகளான) சிரம் (தலையும்) மிக்க (அதன் மேலுள்ள) சிகை (திருமுடியும்) ஆகி (ஆகி)
வண்ண (பல வண்ணமுள்ள) கவசம் (கவசம்) வனப்பு (செழுமையான) உடை (உடை) இச்சை (இச்சா சக்தி) ஆம் (ஆகும்)
பண்ணும் (செய்கின்ற) கிரிகை (அனைத்து தொழில்களும் கிரியா சக்தியாக) பர (பரம்பொருளின்) நேத்திரத்திலே (திருவருள் கண்ணால் செயல் படுவதாகும்).

விளக்கம்:

இறைவனின் மூன்று விதமான சக்திகளானது எப்படி இருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் இதயமானது இறைவனின் ஞான சக்தியாக இருக்கின்றது. இறைவனின் தலையும் அதன் மேலுள்ள திருமுடியும் பல வண்ணங்களுள்ள கவசமும் செழுமையான உடையும் இச்சா சக்தியாக இருக்கின்றது. இறைவனின் திருவருள் கண்களே கிரியா சக்தியாக இருக்கின்றது.