பாடல் #1649

பாடல் #1649: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

சிவனரு ளாற்சில தேவரு மாவர்
சிவனரு ளாற்சில தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேர்கி லாரமைச்
சிவனருள் கூறிற் சிவலோக மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவனரு ளாறசில தெவரு மாவர
சிவனரு ளாறசில தெயவததொ டொபபர
சிவனரு ளாலவினை செரகி லாரமைச
சிவனருள கூறிற சிவலொக மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேர்கிலார் தமை
சிவன் அருள் கூறில் சிவ லோகம் ஆமே.

பதப்பொருள்:

சிவன் (இறைவனது) அருளால் (திருவருளை) சிலர் (சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர்) தேவரும் (வானுலகத்து தேவர்களாகவும்) ஆவர் (ஆவார்கள்)
சிவன் (இறைவனது) அருளால் (திருவருளை) சிலர் (சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர்) தெய்வத்தோடு (தெய்வங்களுக்கு) ஒப்பர் (சரிசமமாக விளங்குவார்கள்)
சிவன் (இறைவனது) அருளால் (திருவருளினால்) வினை (இனி எந்த விதமான வினையும்) சேர்கிலார் (வந்து சேர்ந்து விடாத தன்மை அடைந்தவர்கள்) தமை (தாம் பெற்ற)
சிவன் (இறைவனது) அருள் (திருவருளை) கூறில் (எடுத்துக் கூறினால்) சிவ (அதுவே சிவ) லோகம் (லோகமாகவும்) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனது திருவருளை சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர் வானுலகத்து தேவர்களாகவும் ஆவார்கள். இறைவனது திருவருளை சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர் தெய்வங்களுக்கு சரிசமமாக விளங்குவார்கள். இறைவனது திருவருளினால் இனி எந்த விதமான வினையும் வந்து சேர்ந்து விடாத தன்மை அடைந்தவர்கள் தாம் பெற்ற இறைவனது திருவருளை எடுத்துக் கூறினால் அதுவே சிவ லோகமாகவும் இருக்கின்றது.

பாடல் #1650

பாடல் #1650: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

புண்ணிய னெந்தை புனித னிணையடி
நண்ணி விளக்கென்ன ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவது
மண்ண லிறைவனருள் பெற்ற போதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புணணிய னெநதை புனித னிணையடி
நணணி விளககெனன ஞானம விளைநதது
மணணவ ராவதும வானவ ராவது
மணண லிறைவனருள பெறற பொதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி
நண்ணி விளக்கு என்ன ஞானம் விளைந்தது
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே.

பதப்பொருள்:

புண்ணியன் (புண்ணியமே வடிவாகிய) எந்தை (எமது தந்தையும்) புனிதன் (புனிதனுமாகிய இறைவனின்) இணை (இணையில்லாத) அடி (திருவடிகளை)
நண்ணி (தேடி அடைந்து) விளக்கு (உண்மை ஞானத்தை எமக்கு விளக்குங்கள் தந்தையே) என்ன (என்று கேட்டுக் கொள்ள) ஞானம் (அவரது திருவருளால் ஞானம்) விளைந்தது (எமக்குள் விளைந்தது)
மண்ணவர் (தெய்வங்களுக்கு சரிசமமாக உலகத்திலேயே இருக்கின்ற அமரர்கள்) ஆவதும் (ஆவதும்) வானவர் (வானுலகத்திற்கு சென்று தேவர்கள்) ஆவதும் (ஆவதும்)
அண்ணல் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) இறைவன் (இறைவனின்) அருள் (திருவருளை) பெற்ற (பெற்ற) போதே (போதே கிடைக்கும்).

விளக்கம்:

புண்ணியமே வடிவாகிய எமது தந்தையும் புனிதனுமாகிய இறைவனின் இணையில்லாத திருவடிகளை தேடி அடைந்து உண்மை ஞானத்தை எமக்கு விளக்குங்கள் தந்தையே என்று கேட்டுக் கொள்ள அவரது திருவருளால் ஞானம் எமக்குள் விளைந்தது. அப்படி அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருளால் ஞானம் விளைந்த போதே தெய்வங்களுக்கு சரிசமமாக உலகத்திலேயே இருக்கின்ற அமரர்கள் ஆவதும் வானுலகத்திற்கு சென்று தேவர்கள் ஆவதும் முடியும்.

பாடல் #1651

பாடல் #1651: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலனருள் பெற்றா
லாயத்தே ரேறி யவனிவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காயததெ ரெறி மனபபாகன கைகூடட
மாயததெ ரெறி மயஙகு மவையுணர
நெயததெ ரெறி நிமலனருள பெறறா
லாயததெ ரெறி யவனிவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காயம் தேர் ஏறி மன பாகன் கை கூட்ட
மாயம் தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயம் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆயம் தேர் ஏறி அவன் இவன் ஆமே.

பதப்பொருள்:

காயம் (உயிர்கள் நிலையில்லாத தமது உடலை) தேர் (இறப்பு இல்லாத நிலை பெற்றதாகிய உயர்ந்த தேராக மாற்றி) ஏறி (அதில் ஏறி செல்வதற்கு) மன (மனமாகிய) பாகன் (பாகனின்) கை (கையில்) கூட்ட (ஐம் புலன்களும் அவன் வசப்படும் படி செய்தால்)
மாயம் (மாயையின் மயக்கத்திலிருந்து) தேர் (நீங்கி உண்மை அறிவாகிய தேரில்) ஏறி (ஏறி) மயங்கும் (மாயையினால் மயங்குகின்ற) அவை (மனதை) உணர் (மாற்றி உண்மையை உணர வைக்கலாம்)
நேயம் (அதன் பிறகு அன்பு என்கின்ற நிலையிலிருந்து) தேர் (பேரன்பாகவே மாறுகின்ற தேரில்) ஏறி (ஏறினால்) நிமலன் (ஒரு குற்றமும் இல்லாத இறைவனின்) அருள் (திருவருளை) பெற்றால் (பெற்று விடலாம்)
ஆயம் (அப்போது பொன்னாகவே மாறிவிட்ட) தேர் (தங்களின் உடலாகிய பிரகாசமான தேரில்) ஏறி (ஏறினால்) அவன் (இறைவனே) இவன் (தாம் எனும்) ஆமே (நிலையை அடையலாம்).

விளக்கம்:

உயிர்கள் நிலையில்லாத தமது உடலை இறப்பு இல்லாத நிலை பெற்றதாகிய உயர்ந்த தேராக மாற்றி அதில் ஏறி செல்வதற்கு மனமாகிய பாகனின் கையில் ஐம் புலன்களும் அவன் வசப்படும் படி செய்தால் மாயையின் மயக்கத்திலிருந்து நீங்கி உண்மை அறிவாகிய தேரில் ஏறி மாயையினால் மயங்குகின்ற மனதை மாற்றி உண்மையை உணர வைக்கலாம். அதன் பிறகு அன்பு என்கின்ற நிலையிலிருந்து பேரன்பாகவே மாறுகின்ற தேரில் ஏறினால் ஒரு குற்றமும் இல்லாத இறைவனின் திருவருளை பெற்று விடலாம். அப்போது பொன்னாகவே மாறிவிட்ட தங்களின் உடலாகிய பிரகாசமான தேரில் ஏறினால் இறைவனே தாம் எனும் நிலையை அடையலாம்.

பாடல் #1652

பாடல் #1652: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

அவ்வுல கத்தே பிறக்கி லுடலோடு
மவ்வுல கத்தே யருந்தவம் நாடுவ
ரவ்வுல கத்தே யரனடி கூடுவ
ரவ்வுல கத்தே யருள்பெறு வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அவவுல கததெ பிறககி லுடலொடு
மவவுல கததெ யருநதவம நாடுவ
ரவவுல கததெ யரனடி கூடுவ
ரவவுல கததெ யருளபெறு வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அவ் உலகத்தே பிறக்கில் உடலோடு
அவ் உலகத்தே அரும் தவம் நாடுவர்
அவ் உலகத்தே அரன் அடி கூடுவர்
அவ் உலகத்தே அருள் பெறுவாரே.

பதப்பொருள்:

அவ் (இறைவனை அடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எந்த) உலகத்தே (உலகத்தில்) பிறக்கில் (பிறவி எடுத்தாலும்) உடலோடு (அந்த உலகத்துக்கு ஏற்ற உடம்போடு பிறந்து)
அவ் (அவர்கள் இருக்கின்ற) உலகத்தே (உலகத்திலேயே) அரும் (செய்வதற்கு மிகவும் அரியதான) தவம் (தவங்களை) நாடுவர் (தேடி அடைந்து செய்கின்ற தவசிகள்)
அவ் (அவர்கள் இருக்கின்ற) உலகத்தே (உலகத்திலேயே) அரன் (இறைவனின்) அடி (திருவடியை) கூடுவர் (சேர்ந்து இருப்பார்கள்)
அவ் (அவர்கள் இருக்கின்ற) உலகத்தே (உலகத்திலேயே) அருள் (இறைவனது திருவருளையும்) பெறுவாரே (பெற்று விடுவார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எந்த உலகத்தில் பிறவி எடுத்தாலும் அந்த உலகத்துக்கு ஏற்ற உடம்போடு பிறந்து, அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களை தேடி அடைந்து செய்கின்ற தவசிகள், அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனின் திருவடியை சேர்ந்து இருப்பார்கள். அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனது திருவருளையும் பெற்று விடுவார்கள்.

பாடல் #1653

பாடல் #1653: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

கதிர்கொண்ட காந்தங் கனலின் வடிவா
மதிகண்ட காந்த மணிநீர் வடிவாஞ்
சதிகொண்டு தாக்கி யெரியின் வடிவா
மெரிகொண்ட வீசனெ ழில்வடி வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கதிரகொணட காநதங கனலின வடிவா
மதிகணட காநத மணிநீர வடிவாஞ
சதிகொணடு தாககி யெரியின வடிவா
மெரிகொணட வீசனெ ழிலவடி வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கதிர் கொண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்
சதி கொண்டு தாக்கி எரியின் வடிவு ஆம்
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே.

பதப்பொருள்:

கதிர் (இறையருள் பெற்று பொன் போன்ற பிரகாசமான உடலைக்) கொண்ட (கொண்டு) காந்தம் (தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள்) கனலின் (வெப்பத்தின்) வடிவு (வடிவமாக) ஆம் (இருக்கின்றார்கள்)
மதி (இறையருளால் உண்மை ஞானத்தை) கண்ட (கண்டு கொண்டு) காந்தம் (தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள்) மணி (இரசமணியின்) நீர் (நீரால் இரும்பையும் தங்கமாக்குவது போல தங்களை நாடி வந்த மற்றவர்களுக்கும் ஞானத்தை தருகின்ற) வடிவு (ஞான வடிவமாக) ஆம் (இருக்கின்றார்கள்)
சதி (தம்மை சரணடைந்த அடியவர்களின் வினைகளை எப்படி அழிக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியை) கொண்டு (கொண்டு) தாக்கி (அவற்றை தாக்கி) எரியின் (எரித்து அவற்றை) வடிவு (நெருப்பின் வடிவமாக) ஆம் (ஆக்கி விடுவதே)
எரி (தமது இடது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியைக்) கொண்ட (கொண்டு இருக்கின்ற) ஈசன் (இறைவனின்) எழில் (பேரழகு) வடிவு (வடிவத்தின்) ஆமே (தத்துவம் ஆகும்).

விளக்கம்:

இறையருள் பெற்று பொன் போன்ற பிரகாசமான உடலைக் கொண்டு தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள் வெப்பத்தின் வடிவமாக இருக்கின்றார்கள். இறையருளால் உண்மை ஞானத்தை கண்டு கொண்டு தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள் இரசமணியின் நீரால் இரும்பையும் தங்கமாக்குவது போல தங்களை நாடி வந்த மற்றவர்களுக்கும் ஞானத்தை தருகின்ற ஞான வடிவமாக இருக்கின்றார்கள். தம்மை சரணடைந்த அடியவர்களின் வினைகளை எப்படி அழிக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியை கொண்டு அவற்றை தாக்கி எரித்து அவற்றை நெருப்பின் வடிவமாக ஆக்கி விடுவதே தமது இடது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியைக் கொண்டு இருக்கின்ற இறைவனின் பேரழகு வடிவத்தின் தத்துவம் ஆகும்.

கருத்து:

இறைவன் தமது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியை வைத்திருப்பதன் தத்துவம் தம்மை சரணடைந்த அடியவர்களின் வினைகளை அழித்து நெருப்பாக்குவதே ஆகும். அது போலவே இறையருளால் ஞானத்தை பெற்ற ஞானியர்களும் இரும்பை ஈர்த்து இழுக்கின்ற காந்தத்தைப் போல தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்த்துக் கொண்டு இரும்பு போல இருக்கின்ற அவர்களின் அறிவையும் தங்கம் போல மாற்றுகின்ற இரசமணி நீராக இருக்கின்றார்கள்.

பாடல் #1654

பாடல் #1654: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

நாடு முறவுங் கலந்தெங்க ணந்தியைத்
தேடுவன் றேடிச் சிவபெருமா னென்று
கூடுவன் கூடிக் குரைகழற்கே செல்ல
வீடு மளவும் விடுகின்றி லேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாடு முறவுங கலநதெஙக ணநதியைத
தெடுவன றெடிச சிவபெருமா னெனறு
கூடுவன கூடிக குரைகழறகெ செலல
வீடு மளவும விடுகினறி லெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை
தேடுவன் தேடி சிவ பெருமான் என்று
கூடுவன் கூடி குரை கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின்று இலேனே.

பதப்பொருள்:

நாடும் (எண்ணத்தில்) உறவும் (அன்பை) கலந்து (கலந்து) எங்கள் (எங்களின்) நந்தியை (குருநாதனாகிய இறைவனை)
தேடுவன் (தேடிக் கொண்டே இருப்பேன்) தேடி (தேடி அடையும் போது) சிவ (அவனே அனைத்திற்கும் மேலான சிவப்) பெருமான் (பரம் பொருள்) என்று (என்று அறிந்து)
கூடுவன் (அவனோடு சேர்ந்து கொள்வேன்) கூடி (அப்போது அவனது திருவருளும் என்னோடு சேர்ந்து கொள்ள) குரை (அவனுடைய பேரழகு வாய்ந்த) கழற்கே (திருவடிக்கே) செல்ல (சென்று விட வேண்டும் என்று உறுதியாகப் பற்றிக் கொண்டு)
வீடும் (அவனோடு இரண்டறக் கலக்கின்ற) அளவும் (காலம் வரும் வரையில்) விடுகின்று (அவனுடைய திருவடிகளை விட்டு விட) இலேனே (மாட்டேன்).

விளக்கம்:

எண்ணத்தில் அன்பை கலந்து எங்களின் குருநாதனாகிய இறைவனை தேடிக் கொண்டே இருப்பேன். தேடி அடையும் போது அவனே அனைத்திற்கும் மேலான சிவப் பரம் பொருள் என்று அறிந்து அவனோடு சேர்ந்து கொள்வேன். அப்போது அவனது திருவருளும் என்னோடு சேர்ந்து கொள்ள அவனுடைய பேரழகு வாய்ந்த திருவடிக்கே சென்று விட வேண்டும் என்று உறுதியாகப் பற்றிக் கொண்டு அவனோடு இரண்டறக் கலக்கின்ற காலம் வரும் வரையில் அவனுடைய திருவடிகளை விட்டு விட மாட்டேன்.

பாடல் #1633

பாடல் #1633: ஆறாம் தந்திரம் – 6. தவ தூடணம் (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓதலும வெணடா முயிரககுயி ருளளுறறாற
காதலும வெணடா மெயகாய மிடஙகணடாற
சாதலும வெணடாஞ சமாதியைக கூடினாற
பொதலும வெணடாம புலனவழி பொகாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால்
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதியை கூடினால்
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே.

பதப்பொருள்:

ஓதலும் (மந்திரங்களை ஓதுதல்) வேண்டாம் (தேவை இல்லை) உயிர்க்கு (தங்களின் உயிருக்கு) உயிர் (உயிராக) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை) உற்றால் (உணர்ந்து அடைந்து விட்டால்)
காதலும் (எந்த விதமான விருப்பங்களும்) வேண்டாம் (தேவை இல்லை) மெய் (அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள்) காயம் (தங்களின் உடலையே) இடம் (கோயிலாக) கண்டால் (ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால்)
சாதலும் (அழிவு என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) சமாதியை (சமாதி நிலையை) கூடினால் (கைவரப் பெற்று விட்டால்)
போதலும் (இறைவனை தேடி எங்கும் போவது) வேண்டாம் (தேவை இல்லை) புலன் (ஐந்து புலன்களும்) வழி (காட்டுகின்ற வழிகளில்) போகார்க்கே (போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு).

விளக்கம்:

தங்களின் உயிருக்கு உயிராக உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைந்து விட்டால் மந்திரங்களை ஓத வேண்டியது இல்லை. அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள் தங்களின் உடலையே கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை. சமாதி நிலையை கைவரப் பெற்று விட்டால் உடலுக்கு அழிவு என்பதே இருக்காது. ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு இறைவனை தேடி எங்கும் போக வேண்டியது இல்லை.

பாடல் #1634

பாடல் #1634: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற் றிருக்கிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கததவும வெணடாங கருததறிந தாறினாற
சததமும வெணடாஞ சமாதியைக கூடினாற
சுததமும வெணடாந துடககறறு நிறறலாற
சிததமும வெணடாஞ செயலற றிருககிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றல் ஆல்
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே.

பதப்பொருள்:

கத்தவும் (மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லி செபிக்க) வேண்டாம் (தேவை இல்லை) கருத்து (மாயை நீங்கிய உண்மையை) அறிந்து (அறிந்து) ஆறினால் (மனம் அமைதி அடைந்து விட்டால்)
சத்தமும் (மனதில் எந்த விதமான எண்ணங்களும்) வேண்டாம் (தேவை இல்லை) சமாதியை (சமாதி நிலையை) கூடினால் (அடைந்து விட்டால்)
சுத்தமும் (வெளிப்புற சுத்தங்கள்) வேண்டாம் (தேவை இல்லை) துடக்கு (உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும்) அற்று (இல்லாமல்) நிற்றல் (நிற்கின்ற) ஆல் (நிலையை அடைந்து விட்டால்)
சித்தமும் (சிந்தனை செய்வதற்கு எதுவுமே) வேண்டாம் (தேவை இல்லை) செயல் (செயல்) அற்று (இல்லாமல்) இருக்கிலே (இருக்கின்ற நிலையை அடைந்து விட்டால்).

விளக்கம்:

மாயை நீங்கிய உண்மையை அறிந்து மனம் அமைதி அடைந்து விட்டால் மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லி செபிக்க வேண்டியது இல்லை. சமாதி நிலையை அடைந்து விட்டால் எந்த விதமான எண்ணங்களும் இருக்காது. உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் நிற்கின்ற நிலையை அடைந்து விட்டால் வெளிப்புற சுத்தங்கள் எதுவும் தேவை இல்லை. சிந்தனை செய்வதற்கு எதுவுமே தேவை இருக்காது செயலே இல்லாமல் இருக்கின்ற நிலையை அடைந்து விட்டதால்.

பாடல் #1635

பாடல் #1635: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளைவறி வாரபணடை மெயததவஞ செயவார
விளைவறி வாரபணடை மெயயுரை செயவார
விளைவறி வாரபணடை மெயயறஞ செயவார
விளைவறி வாரவிணணின மணணினமிக காரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளைவு அறிவார் பண்டை மெய் தவம் செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் உரை செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் அறம் செய்வார்
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே.

பதப்பொருள்:

விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையான) தவம் (தவத்தை) செய்வார் (செய்கின்றார்கள்)
விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையாக) உரை (தாம் அறிந்து கொண்ட தவத்தை செய்கின்ற வழிமுறைகளை தகுதியானவர்களும் அறிந்து கொள்ளும் படி காட்டிக்) செய்வார் (கொடுப்பார்கள்)
விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையான) அறம் (தர்மத்தை) செய்வார் (செய்தவர்கள் ஆகின்றார்கள்)
விளைவு (அதனால் தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) விண்ணின் (விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்கும்) மண்ணின் (மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களுக்கும்) மிக்காரே (உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்).

விளக்கம்:

தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை அறிந்து உணர்ந்தவர்களே ஆதிகாலத்தில் இருந்து உண்மையான தவத்தை செய்கின்றார்கள். தவத்தினால் கிடைக்கும் பயனை அறிந்து உணர்ந்து கொண்டவர்கள் அந்த பயனை மற்றவர்களும் பெறுவதற்காக தாம் அறிந்து கொண்ட தவத்தை செய்யும் வழிமுறைகளை தகுதியானவர்களும் அறிந்து கொள்ளும் படி காட்டிக் கொடுக்கின்றார்கள். இப்படி மற்றவர்களும் பயன் பெற வழி வகுத்துக் கொடுத்ததினால் உண்மையான தர்மத்தை செய்தவர்கள் ஆகின்றார்கள். ஆகவே இவர்களே விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்கும் மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களுக்கும் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

பாடல் #1636

பாடல் #1636: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதமிவை களைந்
தூடிற் பலவுல கோரெத்தவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூடித தவஞசெயது கணடென குரைகழல
தெடித தவஞசெயது கணடென சிவகதி
வாடித தவஞசெயவ தெதமிவை களைந
தூடிற பலவுல கொரெததவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூடி தவம் செய்து கண்டேன் குரை கழல்
தேடி தவம் செய்து கண்டேன் சிவ கதி
வாடி தவம் செய்வது ஏதம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத் தவம் ஆமே.

பதப்பொருள்:

கூடி (மனம் ஒன்று கூடி) தவம் (தவம்) செய்து (செய்து) கண்டேன் (தரிசித்தேன்) குரை (இறைவனின் பேரழகு வாய்ந்த) கழல் (திருவடிகளை)
தேடி (அவரை அடைய வேண்டும் என்று எமக்குள்ளே தேடி) தவம் (தவம்) செய்து (செய்து) கண்டேன் (கண்டு) சிவ (சிவனின்) கதி (திருவடியே சரணாகதியாக அடைந்தேன்)
வாடி (இவ்வாறு மனம் ஒன்று படாமலும், இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், உடலை வருத்திக் கொண்டும், வெறும் உலக ஆசைகளுக்காகவும்) தவம் (தவம்) செய்வது (செய்வது) ஏதம் (குற்றமாகும்) இவை (இவைகளை எல்லாம்) களைந்து (நீக்கி விட்டு தவம் செய்யாமல்)
ஊடில் (தமக்குள்ளே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைகளால் குழப்பிக் கொண்டு) பல (பல) உலகோர் (உலகத்தவர்கள் செய்கின்றதெல்லாம்) எத் (எந்த) தவம் (தவம்) ஆமே (ஆகும்?).

விளக்கம்:

மனம் ஒன்று கூடி தவம் செய்து இறைவனின் பேரழகு வாய்ந்த திருவடிகளை தரிசித்தேன். அவரை அடைய வேண்டும் என்று எமக்குள்ளே தேடி தவம் செய்து கண்டு சிவனின் திருவடியே சரணாகதியாக அடைந்தேன். இவ்வாறு மனம் ஒன்று படாமலும் இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் உடலை வருத்திக் கொண்டும் வெறும் உலக ஆசைகளுக்காகவும் தவம் செய்வது குற்றமாகும். இவைகளை எல்லாம் நீக்கி விட்டு தவம் செய்யாமல் தமக்குள்ளே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைகளால் குழப்பிக் கொண்டு பல உலகத்தவர்கள் செய்கின்றதெல்லாம் எந்த தவம் ஆகும்? ஆகாது.