பாடல் #1683

பாடல் #1683: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்ய வுறுதி நடந்தாகா
தீயென்றிங் குன்னைத் தெளிந்தேன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னை பிறர்தெளி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வாயொனறு சொலல மனமொனறு சிநதிகக
நீயொனறு செயய வுறுதி நடநதாகா
தீயெனறிங குனனைத தெளிநதென தெளிநதபின
பெயெனறிங கெனனை பிறரதெளி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வாய் ஒன்று சொல்ல மனம் ஒன்று சிந்திக்க
நீ ஒன்று செய்ய உறுதி நடந்து ஆகா
தீ என்று இங்கு உன்னை தெளிந்தேன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே.

பதப்பொருள்:

வாய் (வாயின் மூலம்) ஒன்று (ஒன்று) சொல்ல (சொல்லவும்) மனம் (மனமானது) ஒன்று (வேறொன்றை) சிந்திக்க (சிந்திக்கவும்)
நீ (நீங்கள்) ஒன்று (வேறொன்றை) செய்ய (செய்வதாகவும் இருந்தால்) உறுதி (உறுதியாக) நடந்து (நடப்பது எதுவும்) ஆகா (பயன் ஆகாது)
தீ (எனக்குள்ளேயே இருக்கின்ற பேரொளியான தீயின் உருவம்) என்று (என்று) இங்கு (இந்த உலகத்திலேயே) உன்னை (இறைவனாகிய உன்னை) தெளிந்தேன் (யான் தெளிவாக அறிந்து கொண்டேன்) தெளிந்த (அவ்வாறு தெளிவாக அறிந்த) பின் (பிறகு)
பேய் (இறந்து பேயாகின்ற மற்றவர்களைப் போன்றவன்) என்று (என்று) இங்கு (இந்த உலகத்தில்) என்னை (என்னை) பிறர் (வேறு யாரும்) தெளியாரே (நினைக்க மாட்டார்கள்).

விளக்கம்:

வாயின் மூலம் ஒன்று சொல்லவும், அதே நேரம் மனமானது வேறொன்றை சிந்திக்கவும், அப்போது நீங்கள் வேறொன்றை செய்வதாகவும் இருந்தால் உறுதியாக நடப்பது எதுவும் பயன் ஆகாது. எனக்குள்ளேயே இருக்கின்ற பேரொளியான தீயின் உருவம் என்று இந்த உலகத்திலேயே இறைவனாகிய உன்னை யான் தெளிவாக அறிந்து கொண்டேன். அவ்வாறு தெளிவாக அறிந்த பிறகு இறந்து பேயாகின்ற மற்றவர்களைப் போன்றவன் என்று இந்த உலகத்தில் என்னை வேறு யாரும் நினைக்க மாட்டார்கள்.

கருத்து:

மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக செயல் படும் படி எதையும் செய்தால் அது நம்மை ஞானியாக்கி நமக்குள் இருக்கின்ற இறைவனை அறிந்து கொள்ள வைத்து இனி பிறவி எடுக்காத நிலைக்கு நம்மை கொண்டு செல்லும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.