பாடல் #536

பாடல் #536: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞானிக் கொப்பே.

விளக்கம்:

ஞானத்தைப் பெற்ற குரு இருக்கும் போது அவரை விட்டுவிட்டு கர்மத்தின் வழியில் நடப்பவரை குருவாக ஏற்பது கையில் இருக்கும் மாணிக்கத்தைத் தவற விட்டுவிட்டு காலில் பட்ட கல்லை எடுத்துச் சுமப்பவரின் விதியைப் போன்றதாகும். அதுமட்டுமின்றி கையில் இருக்கும் நெய், பால், தயிரை விட்டுவிட்டு தனக்கு நன்மை தராத உணவை சாப்பிடுவது போன்றதாகும்.

பாடல் #526

பாடல் #526: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வாரம ராபதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.

விளக்கம்:

தெளிந்த ஞானம் உள்ளவர்கள் சிந்தனை செய்து தமக்குள்ளே இருக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானை உணர்ந்து அவருடைய அருளைப் பெறுவார்கள். தெளிந்த ஞானமில்லாத கீழான மக்கள் அச்சிவபெருமானை சிறுதெய்வமாக எண்ணி இகழ்ந்து புறக்கணித்தால் அவர்களின் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளிபோல ஆகும்.

பாடல் #527

பாடல் #527: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

விளக்கம்:

ஆசையால் அனுபவித்து வாடிப்போன தேகத்தை உடையவர்கள், தேவர்கள் அசுரர்கள் ஆகியவர்கள் உண்மை ஞானத்தை உணரவில்லையென்றால் இறந்தவர்களைப் போலானவர்களே. அன்பினால் கசிந்து அமுதம்போல் சுரக்கும் ஆதியாகிய சிவபெருமானைத் தன் உள்ளக் கோவிலில் வைத்து வழிபடுபவர்களால் மட்டுமே உண்மையான ஞானத்தைப் பெற இயலும்.

பாடல் #520

பாடல் #520: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

விளக்கம்:

தேவர்களை விட அசுரர்கள் வலிமை பெற்றுத் தேவர்களை துன்புறுத்திட தேவர்கள் சிவபெருமானை நோக்கி எம்பெருமானே இறைவா நாங்கள் அசுரர்களால் துன்பப்படுகின்றோமே இது சரியா எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறி வேண்டிட சிவபெருமான் தற்பரன் நிலையில் நின்று (நெற்றிக் கண் நெருப்பால் அனைத்தையும் அழித்துத் தானே அனைத்திற்கும் மேலானவன் நிரந்தரமானவன் ஆனந்தமானவன் எதனாலும் அழிக்க முடியாதவன் என்கின்ற நிலை) தன் இதயத்திலிருக்கும் ஒளியாகிய அழகிய பவளம் போன்ற திருமேனியுடைய ஆறுமுகனை யாம் அளிக்கும் படையுடன் சென்று தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்து வருவாயாக என்று கூறினார்.

பாடல் #528

பாடல் #528: இரண்டாம் தந்திரம் – 21. சிவ நிந்தை

அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.

விளக்கம்:

அறியாமையால் வரும் அகங்காரத்தினால் தேவர்களும் அசுரர்களும் சிவபெருமானுடன் பகைமை கொண்டு விரைவில் அழிந்து போனார்கள். சிவபெருமானுடன் எந்த வகையான பகைமை கொண்டாலும் அவரை அடைய முடியாது. அது பொய்யான பகையாக இருந்தாலும் அதனால் வரும் தீமை ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகி அழிக்கும்.

பாடல் #521

பாடல் #521: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

விளக்கம்:

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அதோமுகம் பூமி அனைத்துக் கோள்கள் பல நட்சத்திரங்கள் உள்ளடக்கிய விண்வெளிப் பிரதேசங்கள் கொண்ட அண்டங்கள் அனைத்தையும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என எட்டுத் திசைகளையும் தாங்கிக் கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. அதனால்தான் அவருடைய அதோமுகத்திற்கு அடியில் இருக்கும் கழுத்து அண்டவெளியைப் போல கண்டங் கருமையாய் உள்ளது என்கிற உண்மையை யாரும் அறிந்துகொள்ளாமல் சிவபெருமான் நஞ்சை உண்டதால்தான் (அமுதம் எடுக்கப் பாற்கடலை வாசுகி பாம்பினால் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம்) அவருடைய கழுத்து கருமையாய் இருக்கிறது என்று கூறுவார்கள் அவரை உணராதவர்கள். இதுபோலவே இறந்தவர்களின் ஆன்மாக்களைத் தாங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் வெள்ளை நிறத்திலான மண்டையோடுகளை மாலையாக அணிந்து விரிந்த சடையைக் கொண்டிருக்கும் சிவபெருமானின் தன்மையை யாரும் அறியவில்லை.

அதோமுகம்: சிவபெருமானின் அதோமுகம் என்பது சூட்சும உடலில் எங்கும் செல்லும் ஆற்றலை உடையது. தீயவர்களை அழிக்க முற்படும்போது தோன்றுவது அதோமுகம். அதோமுகத்தைக் கொண்ட சிவபெருமான் அழித்தலின் தலைவன் ஆவார். அவர் சூரபதுமன் என்ற அசுரனை அழிக்கத் தன் அதோமுகத்தை வெளிப்படுத்திய போது சக்தி தேவியே அதைக் கண்டு பயந்து மறைந்து கொண்டாள். இந்த அதோமுகத்தை உலக அழிவின் போதும் முருகப்பெருமானைப் படைத்த போதும் உக்கிரமாக வெளிப்படுத்திய சிவன்பெருமான் தன்னை வணங்கும் யோகிகளுக்கும் முனிவர்களுக்கும் அருள் கொடுக்கும் போது மட்டும் சாந்தமாக வெளிப்படுத்துவதே அதோமுக தரிசனம்.

பாடல் #522

பாடல் #522: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைத்திடில் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

விளக்கம்:

செழுமையான கடல்களால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகத்தைப் படைத்த இறைவனுக்கு மனிதர்களில் யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி இல்லாமல் பொய்யாகப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்பது நன்றாகத் தெரியும். யாரெல்லாம் தம்மீது உண்மையான பக்தி கொண்டு போற்றி வணங்குகின்றார்களோ அவர்களை வாணுலகத்து தேவர்களும் வந்து வணங்கச்செய்வான் அதோமுகம் கொண்ட கருத்த தொண்டையை உடைய இறைவன்.

பாடல் #523

பாடல் #523: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துட் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.

விளக்கம்:

குண்டலினிசக்தி முதலாவது சக்கரமான மூலாதாரத்திலிருந்து சுழுமுனை (முதுகெலும்பு) வழியாக மேலே ஏறிச்சென்று சிரசிலுள்ள (தலை உச்சி) சகஸ்ரர தளத்தில் உள்ள செஞ்சிவப்பு நிற ஒளியுடன் கலந்து சிவமாகி நிற்கும். அவ்வாறு மேலெழுந்து நின்றவுடன் முன் வினைகள் அனைத்தையும் அழித்து உலகப்பற்றை அறுத்து உலகமும் உடலும் ஒன்றே என்ற நிலையை அடைவித்து ஆட்கொள்வது சிவபெருமானின் அதோமுகம் ஆகும்.

பாடல் #524

பாடல் #524: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலுஞ்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

விளக்கம்:

ஆதியான அதோமுகம் கொண்ட சிவபெருமான் தனது அதோமுகத் தத்துவத்தில் தனக்குக் கீழே உள்ள அண்டம் முழுவதும் எங்கும் வியாபித்திருக்கின்றார். அவரே ஓம் எனும் பிரணவ ஒலியை மாலையாக அணிந்துகொண்டு அழித்தலின் தலைவனாகவும் நின்று அருள் புரிகின்றார்.

பாடல் #525

பாடல் #525: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.

விளக்கம்:

அதோமுகம் பெரிய தாமரை மலராக மாறிய அதிசயத்தைக் கேளுங்கள். பாடல் 523 ல் உள்ளபடி குண்டலினி சக்தி உயிர்களின் தலையின் உச்சியிலுள்ள சகஸ்ரர தளத்தை அடைந்து நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலராக விரிந்தவுடன் அழிவில்லாத சக்தியாகி அந்த சிவபெருமானே அதோமுகமாகி அமர்ந்திருக்கின்றார்.