பாடல் #1316: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்
கையிற் படையங்குச பாசத் தோடவை
மெய்யி லணிகல னிரற்றின மாமேனி
துய்ய முடியு மவையத்தின் ரோற்றமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
செயய திருமெனி செமபட டுடைதானுங
கையிற படையங்குச பாசத தொடவை
மெயயி லணிகல னிரறறின மாமெனி
துயய முடியு மவையததின ரொறறமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
செய்ய திரு மேனி செம் பட்டு உடை தானும்
கையில் படை அங்குசம் பாசத்தோடு அவை
மெய்யில் அணிகலன் இரத்தினம் ஆம் மேனி
துய்ய முடியும் அவ் வையத்தின் தோற்றமே.
பதப்பொருள்:
செய்ய (பூஜை செய்தால்) திரு (இறைவி தனது) மேனி (திருமேனியில்) செம் (செம்மையான) பட்டு (பட்டு போல் பிரகாசிக்கும்) உடை (உடையை) தானும் (அணிந்து கொண்டவளாக)
கையில் (தனது திருக்கரங்களில்) படை (ஆயுதங்களாகிய) அங்குசம் (அங்குசமும் / ஆசையை அடக்கி அருளுவது) பாசத்தோடு (பாசக் கயிறும் / உலகப் பற்றை அறுப்பது) அவை (தரித்துக் கொண்டு)
மெய்யில் (தனது உடலில்) அணிகலன் (நகைகளை அணிந்து கொண்டு) இரத்தினம் (நவரத்தினம்) ஆம் (போல) மேனி (பிரகாசிக்கின்ற உடலோடும்)
துய்ய (தூய்மையான) முடியும் (திருமுடியையும் / கிரீடம் அணிந்து கொண்டு) அவ் (சாதகரின்) வையத்தின் (முன்பு உலகத்தின் அதிபதியான) தோற்றமே (தோற்றமாகவே வந்து நிற்பாள்).
விளக்கம்:
பாடல் #1315 இல் உள்ளபடி பூஜை செய்தால் இறைவனுடன் சேர்ந்து இருக்கும் இறைவியானவள் தனது திருமேனியில் செம்மையான பட்டு போல் பிரகாசிக்கும் உடையை அணிந்து கொண்டு தனது திருக்கரங்களில் ஆசையை அடக்கி அருளும் அங்குசமும் உலகப் பற்றை அறுத்து அருளும் பாசக் கயிறும் தரித்துக் கொண்டு நவரத்தினங்கள் போல பிரகாசிக்கின்ற தனது திருமேனியில் நகைகளை அணிந்து கொண்டு தனது தலையில் தூய்மையான திருமுடியையும் (கிரீடம்) அணிந்து கொண்டு சாதகரின் முன்பு உலகத்தின் தோற்றமாகவே வந்து நிற்பாள்.