பாடல் #1318

பாடல் #1318: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

சீவிப் பதன்முன்னே தேவியையுத் துவாகனத்தாற்
பாவித் திதைய கமலத்தே பதிவித்தங்கி
யாவற்கு மெட்டா வியந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்தெதுந் தருமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சீவிப பதனமுனனெ தெவியையுத துவாகனததாற
பாவித திதைய கமலததெ பதிவிததஙகி
யாவறகு மெடடா வியநதிர ராசனை
நீவைததுச செமி நினைநததெந தருமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சீவிப்ப தன் முன்னே தேவியை உத்துவ ஆகனத்தால்
பாவித்து இதைய கமலத்தே பதிவித்து அங்கி
யாவற்கும் எட்டா இயந்திர ராசனை
நீ வைத்துச் சேமி நினைந்தது எதுவும் தருமே.

பதப்பொருள்:

சீவிப்ப (போற்றி வணங்கும்) தன் (சாதகர் தமக்கு) முன்னே (முன்பு எண்ணத்தில் இருக்கும்) தேவியை (இறைவியை) உத்துவ (மனதின்) ஆகனத்தால் (உறுதியோடு)
பாவித்து (உருவமாக இருக்கின்றவளை மாற்றி அருவமாக பாவித்து) இதைய (இதயமாகிய) கமலத்தே (தாமரையில்) பதிவித்து (நிலை பெறச் செய்து) அங்கி (அவளின் நன்மை தரும் நெருப்பு உருவத்தோடு)
யாவற்கும் (எவருக்கும்) எட்டா (எளிதில் கிடைக்காத) இயந்திர (புவனாபதி சக்கரத்தின்) ராசனை (அதிபதியாகிய இறைவனையும் சேர்த்து)
நீ (சாதகர்) வைத்துச் (தமக்குள் வைத்து) சேமி (சக்கரத்திலிருந்து கிடைக்கும் சக்தியை சேமித்து வைத்தால்) நினைந்தது (சாதகர் நினைத்தது) எதுவும் (எதுவாக இருந்தாலும் அதைத்) தருமே (தந்து அருளும்).

விளக்கம்:

பாடல் #1317 இல் உள்ளபடி போற்றி வணங்கும் சாதகர் தமக்கு முன்பு எண்ணத்தில் இருக்கும் இறைவியை மனதில் உறுதியோடு உருவமாக இருக்கின்றவளை அருவமாக மாற்றி பாவித்து இதயத் தாமரையில் நிலை பெறச் செய்ய வேண்டும். அதன் பிறகு அவளின் நன்மை தரும் நெருப்பு உருவத்தோடு எவருக்கும் எளிதில் கிடைக்காத புவனாபதி சக்கரத்தின் அதிபதியாகிய இறைவனையும் சேர்த்து வைக்க வேண்டும். இப்படிச் சேர்த்து வைத்திருக்கும் சக்கரத்திலிருந்து கிடைக்கும் சக்தியை சேமித்து வைத்தால் சாதகர் நினைத்தது எதுவாக இருந்தாலும் அதை புவனாபதி சக்கரம் தந்து அருளும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.