பாடல் #1418: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
ஆனை மயக்கு மறுபத்து நாற்றறி
யானை யிருக்கு மறுபத்து நாலொளி
யானை யிருக்கு மறுபத்து நாலறை
யானை யங்கோடு மறுபத்து நாலிலே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆனை மயககு மறுபதது நாறறறி
யானை யிருககு மறுபதது நாலொளி
யானை யிருககு மறுபதது நாலறை
யானை யஙகொடு மறுபதது நாலிலெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆனை மயக்கும் அறு பத்து நால் தறி
ஆனை இருக்கும் அறு பத்து நால் ஒளி
ஆனை இருக்கும் அறு பத்து நால் அறை
ஆனை அங்கு ஓடும் அறு பத்து நாலிலே.
பதப்பொருள்:
ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவின்) மயக்கும் (இறை தன்மையில் கவர்ந்து இழுக்கப்பட்டு வணங்குகின்ற ஆன்மாக்களுக்கு அருளுகின்ற) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) தறி (சக்திகள் இருக்கின்றார்கள்)
ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள்) இருக்கும் (இருக்கின்ற) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) ஒளி (சக்திகளும் ஒளியாக இருக்கின்றார்கள்)
ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள்) இருக்கும் (இருக்கின்ற) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நால் (நான்கும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) அறை (சக்திகளும் நவாக்கிரி சக்கரத்தை சுற்றி காவலாக நிற்கின்றார்கள்)
ஆனை (இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள்) அங்கு (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை) ஓடும் (நாடி வருகின்ற ஆன்மாக்களை இந்த) அறு (ஆறும்) பத்து (பத்தும்) நாலிலே (நாலும் கூட்டி வரும் மொத்தம் அறுபத்து நான்கு சக்திகளும் காத்து அருளுகின்றனர்).
விளக்கம்:
பாடல் #1417 இல் உள்ளபடி இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவின் இறை தன்மையில் கவர்ந்து இழுக்கப்பட்டு வணங்குகின்ற ஆன்மாக்களுக்கு அருளுகின்ற பாடல் #1371 இல் உள்ளபடி அறுபத்து நான்கு சக்திகள் இருக்கின்றார்கள். இவர்கள் அந்த ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் அறுபத்து நான்கு ஒளிகளாக இருக்கின்றார்கள். இறைவனாகவே ஆகிவிட்ட சாதகரின் ஆன்மாவிற்குள் இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை சுற்றி காவலாக வீற்றிருக்கின்ற இந்த அறுபத்து நான்கு சக்திகளும் சாதகரை நாடி வருகின்ற ஆன்மாக்களை காத்து அருளுகின்றனர்.