பாடல் #1311

பாடல் #1311: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏதும் பலமா மியந்திரா சன்னடி
யோதிக் குருவி னுபதேச முட்கொண்டு
நீதங்கு மங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணந் தானிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எதும பலமா மியநதிரா சனனடி
யொதிக குருவி னுபதெச முடகொணடு
நீதஙகு மஙக நியாசந தனைபபண்ணிச
சாதங கெடசசெமபிற சடகொணந தானிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏதும் பலமாம் இயந்திர ஆசன் அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம் தனைப் பண்ணிச்
சாதம் கெடச் செம்பில் சட் கோணம் தான் இடே.

பதப்பொருள்:

ஏதும் (எந்த விதமான) பலமாம் (சக்திகளையும் பெறுவதற்கு) இயந்திர (உதவுகின்ற புவனாபதிச் சக்கரத்திற்கு) ஆசன் (சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின்) அடி (திருவடிகளை பற்றிக் கொண்டு)
ஓதிக் (அந்தத் திருவடிகளைப் போற்றி வணங்கி) குருவின் (சாதகர் தமது குருவிடம்) உபதேசம் (முறைப்படி உபதேசம் கேட்டுப் பெற்றுக் கொண்ட மந்திரங்களை) உட்கொண்டு (முழுவதுமாக உள் வாங்கிக் கொண்டு)
நீ (சாதகர் தாம்) தங்கும் (வீற்றிருக்கும் இடத்தில்) அங்க (தமது உடல் அங்கங்களால்) நியாசம் (குரு உபதேசித்த நியமங்களை) தனைப் (அவர் உபதேசித்த முறைப்படியே) பண்ணிச் (சரியாகச் செய்து)
சாதம் (தமது பிறவி முழுவதும்) கெடச் (இல்லாமல் போகும்படி) செம்பில் (செப்புத் தகட்டில்) சட் (ஆறு) கோணம் (கோணம் வரும்படி) தான் (இரண்டு பெரிய முக்கோணங்களை) இடே (வரைந்து வையுங்கள்).

விளக்கம்:

பாடல் #1310 இல் உள்ளபடி அட்டாங்க யோகத்தின் மூலம் பெறுகின்ற அட்டமா சித்திகளைப் போன்ற எந்த விதமான சக்திகளையும் பெறுவதற்கு உதவும் புவனாபதிச் சக்கரத்திற்கு சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு போற்றி வணங்க வேண்டும். அதன் பலனாக இறைவன் சாதகருக்கு சரியான குருவைக் காண்பித்து அருளுவார். அந்த குருவிடம் முறைப்படி உபதேசம் பெற்ற மந்திரங்களையும் நியமங்களையும் முழுவதுமாக உள் வாங்கி உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குரு உபதேசித்த மந்திரங்களையும் நியமங்களையும் அவர் உபதேசித்த முறைப்படியே ஓதி தமது உடல் அங்கங்களால் சரியாகச் செய்து தமக்கு இனிப் பிறவியே வேண்டாம் என்று வேண்டி செப்புத் தகட்டில் ஆறு கோணங்கள் வரும்படி இரண்டு பெரிய முக்கோணங்களை வரைந்து வைக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.