பாடல் #1035

பாடல் #1035: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.

விளக்கம்:

பாடல் #1034 இல் உள்ளபடி சகஸ்ரதள ஜோதியோடு கலந்த பின் அங்கே முழுமையான நல்ல சுடரொளியாக இருக்கும் பரம்பொருள் ஆட்கொள்கிறது. உலக ஞானங்கள் அனைத்தையும் கற்று அறிந்திருந்தாலும் கூட அதைவிட மேலான இந்த இறை ஞானத்தை உணர்ந்தவர்களின் எண்ணத்துள்ளே அவன் இருப்பான். அந்த எண்ணங்களையும் விட்டு விலகி எங்கும் பரவியிருக்கும் இறைவனின் பேரொளியை விரும்பி சென்று அடைந்து அங்கே இறைவனோடு பேரின்பத்தில் சேர்ந்து இருப்பார்கள்.

கருத்து: நவகுண்ட யாகத்தை முறைப்படி செய்த சாதகர்கள் தமது மூலாதாரத்திலுள்ள அக்னியை எழுப்பி சகஸ்ரதளத்தில் இருக்கும் இறை சக்தியோடு சேர்த்து விட்டால் இறையருளால் அனைத்து எண்ணங்களும் அற்ற நிலையை அடைந்து இறைவனோடு ஒன்றாகச் சேர்ந்து இருப்பார்கள்.

பாடல் #1036

பாடல் #1036: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமின் குண்டமும்
ஆர்ந்த திசைகளு மங்கே யமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவ ரென்றுங் கலந்தவர் தாமே.

விளக்கம்:

பாடல் #1035 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்து இருக்கும் சாதகர் இறைவனுடைய ஐந்துவித தொழில்களையும் நவகுண்டமாகிய இந்த உடலுக்குள்ளிருந்து இயக்கலாம். அதன் பிறகு அனைத்து திசைகளையும் முழுமையாக சாதகர் அறிந்து கொள்வார். ஐம்பூதங்களும் தங்களின் உச்சத் தன்மையில் சாதகரின் உடலுக்குள் இருந்து தாமாகவே மூலாக்கினியை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையை அடைந்த சாதகர் இறைவனோடு என்றும் கலந்து இருப்பார்.

குறிப்பு: நவகுண்ட யாகம் செய்யும் சாதகர் அனைத்து திசைகளிலுள்ள எங்கும் செல்லும் தன்மையைப் பெறுவார். இதுவரை சாதகர் தனது சாதகத்தின் மூலம் எழுப்பிய மூலாக்னியை இனி அவரது உடலுக்குள்ளிருக்கும் ஐந்து பஞ்ச பூதங்களும் (நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம்) மூலாக்கினியை தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருக்கும்.

பாடல் #1037

பாடல் #1037: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டஞ் செய்த வொருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

விளக்கம்:

இறைவனால் முறையாக வகுக்கப்பட்டு படைக்கப்பட்ட பரந்து விரிந்த கடல்களைக் கொண்ட ஏழு உலகங்கள் இருக்கின்றன. இந்த ஏழு உலகங்களிலுள்ள உயிர்களனைத்தும் முக்திபெற வேண்டும் என்ற கருணையினால் அவை முக்திபெறும் வழிமுறைகளையும் முறையாக இறைவன் வகுத்திருக்கின்றான். அவனை உயிர்கள் சென்று அடைந்தால் முறையாக வகுக்கப்பட்ட நவகுண்ட யாகத்தின் மூலம் கிடைக்கும் ஞானங்கள் அனைத்தும் அறிந்து உயிர்கள் தேவர்களாக உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு உயர்ந்த தேவர்கள் பொய் முறைகளால் வகுக்கப்பட்ட எந்தவித மாயையும் இல்லாத உண்மையான மெய்ப்பொருளான சதாசிவமூர்த்தியோடு கலந்து இருப்பார்கள்.

பாடல் #1038

பாடல் #1038: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே.

விளக்கம்:

பாடல் #1037 இல் உள்ளபடி சதாசிவமூர்த்தியுடன் கலந்து நிற்கின்ற சாதகரின் உடலாகிய நவகுண்டத்திலுள்ள அக்கினியின் அடியாக இருப்பது இறைவனின் பாதங்களாக இருக்கின்றது. சுடராகப் பரவும் அக்கினியாக இருப்பது இறைவனின் கரங்களாக இருக்கின்றது. குண்டத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற அக்கினியின் ஜூவாலையே இறைவனின் சிவந்த முகமாகவும் மூக்காகவும் இருக்கின்றது. அக்கினியின் கங்கானது இறைவனின் மூன்றாம் கண்ணாக இருக்கின்றது. காற்றின் போக்கில் அலையும் அக்கினியின் உச்சி நுனியாக இருப்பது இறைவனின் சடைபின்னிய முடிக்கற்றைகளாக இருக்கின்றது. இப்படி நவகுண்டத்தின் அக்கினியில் இறைவன் உத்தமமான உருவமாக இருக்கிறார்.

குறிப்பு: நவகுண்ட யாகம் செய்து உணர்ந்த இறைவன் அக்கினி உருவமாக எப்படி இருக்கின்றார் என்பதை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1039

பாடல் #1039: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

உத்தமன் சோதி யுளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

விளக்கம்:

பாடல் #1038 இல் உள்ளபடி உத்தமாக உணர்ந்த இறைவனோடு சேர்ந்த சாதகர் ஆரம்ப நிலையில் பாலகனாய் இருக்கின்றார். அதன் பிறகு பாடல் #1036 இல் உள்ளபடி ஐந்து பூதங்களும் அவரது சாதகத்தைத் தொடர்ந்து செய்யும் பொழுது அந்த பாலகன் ஆறு சக்கரங்களுக்கும் சென்று இளைஞனாகி மலர்ந்து இருக்கின்றார். அதன் பிறகு ஆறு சக்கரங்களிலிருந்தும் வரும் சக்தி அனைத்து திசைகளுக்கும் பரந்து விரிந்து நிரம்பி இருக்கும். அதன் பிறகு ஆறு சக்திமயங்களிலும் உள்ள சக்தியானது தமது உச்ச நிலையை அடைந்து விளங்குகின்றது.

பாடல் #1040

பாடல் #1040: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமா யந்தமு மொக்கும்
படியே ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

விளக்கம்:

பாடல் #1039 இல் உள்ளபடி ஆறு சக்திமயங்களிலும் உச்ச நிலையில் இருக்கும் சக்தியானது உடலாகிய நவகுண்டத்தோடு பேரின்பத்தில் இருக்கும். இந்த சக்தியானது மூலாதாரத்திலிருந்து சுடரொளியாக இரண்டு கோணங்களாகச் சென்று ஏழு உலகங்களுக்கும் பரவி அதையும் தாண்டிய உச்சியாக இருக்கும். மூலாதாரத்தில் இருக்கும் இந்த சுடரொளியை தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருப்பவர்கள் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

கருத்து: இறைவனை உத்தம ஜோதியாக உணர்ந்த சாதகரின் ஆறு சக்கரங்களிலுள்ள சக்தியானது உச்ச நிலையை அடைகிறது. இந்த உச்ச நிலையை அடைந்த சக்தியானது தந்து மூலாதாரத்திலிருந்து V போல இரண்டு கோணங்களாக சென்று ஏழு உலகங்களுக்கும் பரவி இருக்கும். இந்த நிலையை தொடர்ந்து செய்யும் சாதகர் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர் ஆவார்.

குறிப்பு: சக்தி பரவும் விதத்தை படத்தில் காண்க.

ஏழு உலகங்கள்:

  1. சத்ய லோகம்
  2. தப லோகம்
  3. ஜன லோகம்
  4. மகர லோகம்
  5. சுவர் லோகம்
  6. புவர் லோகம்
  7. பூலோகம்

பாடல் #1041

பாடல் #1041: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

விளக்கம்:

பாடல் #1040 இல் உள்ளபடி சாதகர் பெற்ற இறைவனின் மாபெரும் அருளானது தமக்குள்ளே இருக்கும் மூலாக்கினியை பஞ்ச பூதங்களும் கருவியாகக் கொண்டு வளர்ந்து முழுமை அடைந்து குருவாக இருந்து தமக்குள்ளே வழிகாட்டுகிறது. அப்படி குரு காட்டிய வழிகாட்டுதலின் படி நவகுண்டமாகிய உடலானது ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைகளுக்கு ஏற்றார் போல மாறிச் செல்கிறது. அங்கே குரு கூறிய செயலை செய்யும் பொழுது அந்த உலகம் அவர் முன்பு வணங்கி நிற்பதை பார்க்கலாம்.

கருத்து: பஞ்ச பூதங்களும் சாதகரின் உடலுக்குள்ளிருக்கும் மூலாக்கினியை வளர்ந்து கொண்டே இருக்கும். அது முழுமை அடையும் போது குருவாக நின்று ஏழு உலகங்களுக்கும் செல்ல வழிகாட்டுகிறது. அதன்படி நவகுண்டமாகிய உடலுடன் ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைக்கேற்ப மாறி செல்லலாம். அங்கே சாதகர் செய்யும் செயலுக்கு அந்த உலகங்கள் சாதகரை வணங்கி நிற்கும்.

பாடல் #1042

பாடல் #1042: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

விளக்கம்:

பாடல் #1041 இல் உள்ளபடி சாதகர் பார்க்கின்ற உலகங்கள் அனைத்திலும் பரவி எழுகின்ற ஜோதியான இறைவனது உண்மையான தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்கின்றவர்கள் யாரும் இல்லை. அந்த ஜோதியின் உண்மையான தன்மையை தமக்குள் உணரும் வரை காத்திருக்கும் சாதகர்கள் அதை முழுவதும் அறிந்து உணர்ந்த பிறகு அவர்களின் நவகுண்டமாகிய உடலானது மேன்மை நிலையை அடைந்து என்றும் அழியாமல் கோடி யுகங்கள் நிலைத்திருக்கும்.

பாடல் #1043

பாடல் #1043: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

விளக்கம்:

பாடல் #1042 இல் உள்ளபடி கோடி யுகங்களாக நிலைத்திருக்கும் உடலைப் பெற்ற சாதகர் யோகியாகிறார். அந்த யோகி நவகுண்டமாகிய தமது உடலுக்குள் இருக்கும் ஒன்பது வகையான குண்டங்களிலும் தாமாகவே அக்னி எழுப்பிக்கொண்டே இருக்கின்றார். கரு உற்பத்திக்கு உயிர்சக்தி கருவியாகப் பயன்படுவதைப் போல இறையருளை தமக்குள் கண்டுகொண்ட யோகியின் நவகுண்ட உடலை உலகம் தனது நன்மைக்கு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

கருத்து: கோடி யுகங்கள் இருக்கும் யோகியின் மேன்மையான உடலை உலகம் தனது நன்மைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

பாடல் #1044

பாடல் #1044: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

சாதன நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதஞ்சு பொற்கயல் வாரண
நாதனை நாடு நவகோடி தானே.

விளக்கம்:

பாடல் #1043 இல் உள்ளபடி உலக நன்மைக்கு கருவியாக இருக்கும் யோகின் உடலுக்குள் 1. நான்கு கோணம் கொண்ட குண்டம் (சதுர வடிவம்), 2. யாக குண்டத்தில் எரியும் அக்னி போன்ற முக்கோண குண்டம் (முக்கோண வடிவம்), 3. வளைத்த வில்லைப் போன்ற பிறை வட்ட வடிவம் கொண்ட பிறை குண்டம் (பிறை வடிவம்), 4. ஆரம்பமும் முடிவும் இல்லாத வேதங்களைப் போன்ற வட்ட குண்டம் (வட்ட வடிவம்), 5. சக்தி விளையும் மயங்களான ஆறு சக்கரங்கள் கொண்ட குண்டம் (அறுகோண வடிவம்), 6. உலகத்தின் எட்டுத் திசைகள் கொண்ட குண்டம் (அட்டகோண வடிவம்), 7. இலை வடிவம் போன்ற குண்டம் (இலை வடிவம்), 8. ஐந்துவிதமான பொறிகள் கொண்ட குண்டம் (பஞ்சகோண வடிவம்), 9. பொன் போன்ற தாமரை மலர் வடிவம் கொண்ட குண்டம் (பதும வடிவம்) ஆகிய ஒன்பது வகையான குண்டங்கள் இருக்கின்றது. இந்த நவ குண்டங்களின் மூலமாக யோகியானவர் ஆதி மூலமாகிய இறைவனை ஒன்பது கோடி யுகங்களானாலும் நாடிக்கொண்டே இருப்பார்.