பாடல் #116

பாடல் #116: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயமது வாய்எழும் சூரிய னாமே.

விளக்கம்:

மூங்கிலினுள்ளே இருக்கும் நெருப்பு போல (காய்ந்த மூங்கில்களை ஒன்றோடு ஒன்று உரசினால் வெளிப்படும் நெருப்பு) உயிர்களின் மெய் எனப்படும் உடலாகிய கோயிலினுள்ளே குடி கொண்டு வீற்றிருக்கும் உயிர்களின் தலைவனாகிய குருநாதன் இறைவன் உலகத் தாயை விடவும் உயிர்களின் மேல் அதிக கருணை கொண்டு அவ்வுயிர்களைப் பற்றியிருக்கும் மும்மலங்களாகிய அழுக்குகளை அகற்ற வேண்டி இருளை விலக்க கடலின் மேலே தோன்றும் சூரியனைப் போல மும்மல இருளை அகற்றும் பேரொளியாக தனது கருணை எனும் மாபெரும் கடலின் மேலே தோன்றும் சூரியன் இறைவன்.

பாடல் #115

பாடல் #115: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நிலாவே.

விளக்கம்:

ஆன்மாக்களின் தலைவன் இறைவன் பதி. ஆன்மாவாகிய உயிர்கள் பசு. உயிர்களைப் பிடித்திருக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் பாசம். இந்த மூவரும் யாரென்று சொல்லப் போனால் என்றும் நிலைத்து நிற்கும் பழமைவாய்ந்த இறைவனைப் போலவே ஆன்மாக்களும் அவற்றை பிடித்திருக்கும் மும்மலங்களும் நித்தியமானவையே. மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்கள் தங்களின் தலைவனாகிய இறைவனைத் தேடிச் சென்று அடைவதில்லை. இறைவன் யாரென்று தெரிந்து கொள்ள முயன்று அவனைப் பலவித வழிகளில் தேடிச்சென்று அடைந்தால் ஆன்மாக்களிடமிருந்து மும்மலங்களும் விலகிவிடும்.

பாடல் #114

பாடல் #114: முதல் தந்திரம் – 1. உபதேசம்

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவழம் பதித்தான் பதியே.

விளக்கம்:

எங்களது ஆன்மாக்களின் மேல் இருந்த மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயைகளை தன் அருட் பார்வையால் அகற்றி எமது ஞானக்கண்ணைத் திறந்தான் குருநாதராக வந்த இறைவன். அவனே எந்தவித மலங்களும் நெருங்க முடியாத மாசு மருவற்ற தனது அருட் பேரொளியைக் காட்டியவன். அவனே மும்மலங்கள் அகற்றியதால் பளிங்கு போல மாறிய எமது ஆன்மாக்களின் மேல் பவழம் போன்ற தனது திருவருளைப் பதித்தான் எமக்குத் தலைவனாக இருப்பவன்.

பாடல் #113

பாடல் #113: முதல் தந்திரம் – 1. உபதேசம்

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.

விளக்கம்:

வானத்தில் (அண்டத்தில்) வெவ்வேறு நிலைகளில் இருக்கும் ஆன்மாக்கள் உலகத்தில் இறங்கி வந்து அவரவர் வினைக்கு ஏற்ப பலவிதமான உடல்களை ஏற்றுப் பிறக்கும்போது அடியவர்களின் உள்ளம் குளிர்விக்கும் திருவடிகளை அவர்களின் தலைக்கு மேலே காவலாக வைத்து அவர்களின் உடலுக்குள்ளே உயிர்சக்தியாய் நின்று தான் யார் என்பதை உள்ளிருந்து உணரவைத்து உயிர்களுக்கு ஞானக்காட்சியய் தனது ஈடுஇணையில்லாத பேரானந்த நிலையைக் காட்டி அடியவர்களின் ஆன்மாவை மூடியிருக்கும் மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றை அகற்றி அருளுகின்றான் இறைவன்.