பாடல் #168

பாடல் #168: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.

விளக்கம்:

நாட்டுக்கு நன்மை செய்யும் அரசனின் ஆதிக்கத்தில் இருக்கும் யானைப் படைகளும் தேர்களும் அவன் ஈட்டிய பெருஞ் செல்வங்களும் பின்னொரு நாளில் அவனை வெற்றிகொள்ளும் வேறொருவருக்குச் சொந்தமாகிவிடும். இப்படி யாருடைய செல்வமாக இருந்தாலும் ஓருநாள் மற்றவர் அந்த செல்வங்களை எடுத்துச் செல்வார்கள். அப்படி வேறொருவர் வந்து எடுத்துக் கொள்ளும் முன்னரே உலகச் செல்வங்களுக்கெல்லாம் தலைவனான இறைவனைப் பற்றி தெரிந்து கொண்டு அவனைப் பற்றிய தெளிவு பெற்று உணர்ந்து அவன் திருவடி சென்று சேர்ந்துவிட்டால் அதன் பிறகு செய்வதற்கு இவ்வளவு கடினமா என்று உயிர்கள் பயப்படும் அளவிற்கு இருக்கும் மாபெரும் தவங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை.

கருத்து: ஒரு மாபெரும் நாட்டையே ஆளும் அரசனாக இருந்தாலும் அவனிடமிருக்கும் எந்தச் செல்வமும் நிலைப்பதில்லை. நிலையாத இந்த செல்வங்களில் ஆசை வைக்காமல் பெறுவதற்கு அரிய மாபெரும் செல்வமாக என்றும் நிலைத்து நிற்கும் இறைவனிடன் சென்று சேர்ந்துவிடவேண்டும். அவ்வாறு இறைவனைச் சென்று சேர்வதற்கு மாபெரும் தவங்கள் எதுவும் தேவையில்லை அவன் திருவடியை உளமாற இறுகப் பற்றிக்கொண்டு முழுவதுமாக சரணடைந்துவிட்டாலே போதும்.

பாடல் #169

பாடல் #169: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

விளக்கம்:

பெளர்ணமி அன்று முழுவதாக இருந்து பெரும் ஒளி வீசும் நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து பிறகு அமாவாசை அன்று சுத்தமாக மறைந்து விடுவதுபோல அதிகமாக இருந்தாலும் நாளடைவில் குறைந்து பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும் உலகச் செல்வங்களால் வரும் துன்பங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இந்த நிலையில்லாத உலகச் செல்வங்களின் மேல் மயங்கி இருக்காமல் என்றும் நிலைத்திருப்பவனும் தேவர்களுக்கெல்லாம் தலைவனுமாகிய இறைவனைத் தெளிவாக உணர்ந்து அடையுங்கள். அப்படி அடைந்தால் பெரும் மழையை கொடுக்கும் கார்மேகம் போல பெருஞ் செல்வங்களை இறைவன் மழை போல் பொழிவான்.

பாடல் #170

பாடல் #170: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணும்ஒளி கண்டுகொ ளீரே.

விளக்கம்:

நமது நிழலாக இருந்தாலும் அது நமக்கு உதவாது (நிழல் நமது கூடவே வந்தாலும் அதில் நாம் ஒதுங்கி இளைப்பாற முடியாது) என்பதைத் தெளிவாக கண்ட பிறகும் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வங்கள் நமக்கு எப்போதும் உதவும் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏமாளிகளே. நமது உடலோடு ஒன்றாகப் பிறந்த உயிர் கூட நம்மோடு என்றும் நிலைத்திருக்காமல் என்றாவது ஒரு நாள் போய்விடும். இப்படி நிலையில்லாத எதிலும் மனதை வைக்காமல் நமக்குள் மனதைச் செலுத்தி அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கும் இறைவனின் திரு ஒளியை அகக் கண்ணால் கண்டு என்றும் நிலையான இறைவனை உணர்ந்து கொள்ளுங்கள்.

பாடல் #171

பாடல் #171: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரத்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்துஅது கைவிட்ட வாறே.

விளக்கம்:

வாசனை மிக்க மலர்களைத் தேடிச் சென்று அவைகளில் இருக்கும் தேனைக் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து ஒரு மரத்தின் கொம்பில் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்து பெரிய தேனடை அளவிற்கு சேமித்து வைக்கின்றது தேனீக்கள் ஒரு நாள் அந்தப் பெரிய தேனடையைக் கண்டுவிட்ட மனிதர்கள் வந்து அவைகளைத் தீப்பந்தங்களால் துரத்திவிட்டு அவை சேமித்து வைத்திருந்த தேனடையைக் கொண்டு போய்விடுகிறார்கள். தேனீ தாமே தேனடையைப் பெரியதாகச் சேமித்து தானே மனிதர்களுக்கு காட்டிக்கொடுத்து விடுகிறது. அதுபோலவே உயிர்கள் தாங்கள் சிறுகச் சிறுகச் சேகரித்த செல்வங்களையும் ஒரு நாள் மற்றவர்கள் கவனிக்குமளவு தங்களிடமிருக்கும் செல்வத்தைப் பிறருக்கு பெரிதாகக் காட்டிக்கொடுத்து விட அவர்களைவிட வலிமையான மற்றவர்கள் வந்து அந்தச் செல்வங்களைக் களவாடிச் செல்வார்கள். எனவே உலகச் செல்வங்கள் எதுவுமே எப்போதுமே நிலைத்து இருக்காது.

பாடல் #172

பாடல் #172: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்காலில் குதிக்கலு மாமே.

விளக்கம்:

உலகில் நிலையான செல்வம் எது என்று தெளிவான அறிவு இல்லாதவர்கள் யாம் கூறுவதைக் கேட்டுத் தெளிவடையுங்கள். அவ்வாறு தெளிவடைந்துவிட்டால் உங்களுக்குத் துன்பங்கள் இருக்காது. ஆற்றுப் பெருக்குப் போல திரண்டு வரும் பெருஞ் செல்வங்களைக் கண்டு மதிமயங்கி நிற்காதீர்கள். அந்தச் செல்வங்கள் எதுவும் நிலையானது அல்ல. அந்தச் செல்வங்களை உங்களது சேமிப்பிலிருந்து மாற்றிப் பிறருக்குக் கொடுத்துத் தீர்த்துவிடுங்கள். ஏனெனில் நீங்கள் இறக்கும் தறுவாயில் எம்பெருமான் வரும்பொழுது இந்தச் செல்வங்கள் எதையும் காட்டி அவனைத் தடுக்கவும் முடியாது. இந்தச் செல்வங்கள் எதையும் விட்டுவிட்டு வரமாட்டேன் என்று கூறவும் முடியாது. நீங்கள் பிறருக்குக் கொடுத்து உதவிய தருமங்களே உங்களோடு நிலைத்து நிற்கும்.

பாடல் #173

பாடல் #173: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

விளக்கம்:

உயிர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி சம்பாதிக்கும் செல்வங்களும் சொத்துக்களும் ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் படகு சட்டென்று வெள்ளம் வந்தால் எப்படி மூழ்கிவிடுமோ அதுபோல சட்டென்று போய்விடும். வெள்ளம் பெருகும் கடலாக இருந்தாலும் அதிலிருக்கும் சிப்பிக்கு எதுவும் ஆவதில்லை. அதுபோலவே அழிந்துபோகின்ற இந்த உடலுக்கு உள்ளேயே என்றும் நிலைத்திருக்கும் முக்தியை அடையும் வழியாக ஒரு சிமிழை (குண்டலினி சக்தி) இறைவன் வைத்திருப்பதை எவரும் ஆராய்ந்து பார்த்து அறிந்துகொள்வதில்லை.

உட்கருத்து: அழிகின்ற செல்வங்களில் ஆசை வைக்காமல் என்றும் அழியாத முக்திக்கு வழிதரும் குண்டலினி சக்தியை தியானத்தால் எழுப்பி அதைச் சகஸ்ரர தளத்தின் உச்சியில் கொண்டு சேர்த்து இறைவனின் நமக்குள் உணர்ந்து அறிவுத்தெளிவு பெற வேண்டும்.

பாடல் #174

பாடல் #174: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

வாழ்வு மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்கு
கூவுந் துணையொன்று கூடலு மாமே.

விளக்கம்:

உடன் வாழும் மனைவியும் மக்களும் (பிள்ளைகளும்) உடன் பிறந்தவர்களும் (சகோதர சகோதரிகள்) ஆகிய இவர்கள் அனைவருமே நாம் சேர்த்து வைத்த செல்வங்களில் எமக்குக் கொடுக்கும் அளவு என்ன என்றுதான் கேட்பார்கள். அதற்காக அவர்களுக்கும் சேர்த்து மேலும் மேலும் செல்வங்களைச் சேமிக்கும் மனிதர்களுக்கு அவர்கள் இறக்கும் தறுவாயில் கூப்பிட்டு அழைத்தால் உடனே வருவதற்கென்று யாரும் இருக்க மாட்டார்கள். அவர் இறந்ததும் அவர் சேமித்து வைத்த செல்வங்களை உடனே கூறு போட்டுவிடுபவர்கள் மட்டுமே இருப்பார்கள். எப்போதும் கூப்பிட்ட குரலுக்கு உடனே வந்து அருள் செய்யும் இறைவனின் துணையை விரும்பி அழிந்துவிடுகின்ற செல்வங்களின் மேல் ஆசை வைத்துச் சேமிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் இறைவன் மேல் எண்ணம் வைத்து அவனை வணங்கி வழிபடுங்கள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு அவன் எப்போதும் கூட வருவான்.

பாடல் #175

பாடல் #175: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

வேட்கை மிகுந்தது மெய்கொள்வார் இங்கில்லை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.

விளக்கம்:

உயிர்கள் உலக ஆசைகள் அதிகமாக கொண்டவை அதையும் தாண்டிய உண்மையைத் தெரிந்துகொள்ளும் உயிர்கள் இங்கே அதிகம் இல்லை. உயிரைக் கட்டி வைக்கும் உடல் ஒன்றுதான். ஆனால் அந்த உயிர் உடலை விட்டுப் பிரியும் வழிகளோ ஒன்பது (2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத்துவாரங்கள், வாய், பால்குறி, ஆசனவாய்). உயிர் எவ்வளவுதான் ஆசைகொண்டு மாபெரும் பொருள் சேர்த்தாலும் அதன் உடலிலிருந்து உயிர் பிரிந்து போய்விட்டால் அந்த உயிரைப் பெற்று மண்ணில் வளர்த்த தாய் தந்தையர் முதற்கொண்டு உறவினர்கள் அனைவருமே வந்து உயிர் இல்லாத உடலை மரியாதை நிமித்தம் வணங்கிவிட்டு அந்த உடலைப் புதைக்கும் / எரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று இறந்த உடல் இதுதான் என்று காட்டிக் கொடுத்துவிட்டு அந்த உடலையும் அதனோடு இதுவரை அவர்களுக்கு இருந்த உறவையும் கைவிட்டு விட்டுச் சென்றுவிடுவார்கள். அதன் பிறகு அந்த உயிர் ஈட்டிய அனைத்து செல்வங்களையும் இது உனக்கு இது எனக்கு என்று காட்டிக் கொடுத்து எடுத்துக்கொள்வார்கள். இந்த உலக உண்மையை உணராமல் உயிர்கள் வெறும் ஆசையில் ஆடிக்கொண்டு என்றும் நிலையான உண்மையாகிய இறைவனை மறந்துவிடுகின்றன.

பாடல் #176

பாடல் #176: முதல் தந்திரம் – 3. செல்வம் நிலையாமை

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையும் சூழகி லாரே.

விளக்கம்:

உயிர்கள் உலக ஆசையில் எவ்வளவுதான் செல்வங்கள் சேமித்து வைத்திருந்தாலும் அவர்களின் உடலை விட்டு உயிர் பிரிந்து ஓடிவிடும். உடலை விட்டு உயிர் வரும் வழியில் வெளியே காத்திருந்து அதைத் கவர்ந்து செல்லலாம் என்று நிற்கின்ற எம தூதர்களுக்குத் தடையாக இருக்கக்கூடிய ஒரே செல்வம் இறைவனைப் பற்றிய தூய்மையான சிந்தனை மட்டுமே. அவ்வாறு இறைவனைப் பற்றிய தூய சிந்தனையில் வாழும் உயிர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றை சுற்றி வருவதற்கு கூட எம தூதுவர்கள் பயப்படுவார்கள். எனவே எப்போதும் உயிர்களைக் காக்கும் இறைவனைப் பற்றியே எண்ணியிருந்து வீணான செல்வங்களின் மேல் ஆசை வைக்காமல் இருக்க வேண்டும்.