பாடல் # 823 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்து
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகமும் பகன்முன்ன தாமே.
விளக்கம்:
பாடல் #822 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் அனைத்திலும் கலந்திருக்கும் இறை சக்தியைத் தமக்குள் கலந்திருக்கும் பஞ்ச பூதங்களாகக் கண்டு தரிசிக்க முடிந்த யோகியர்கள் ஞானக் கண்ணைப் பெற்று தமக்குள் இருக்கும் இறை சக்தியை தீபத்தில் ஏற்றி வைத்த ஜோதியைப் போல ஒளி உருவமாகக் கண்டு தரிசித்து தமது எண்ணங்களை அதன் மேலேயே வைத்து தியானித்திருந்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் தாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முழு சூரிய வெளிச்சத்தில் காணும் பகல் காட்சி போல தெள்ளத் தெளிவாகக் காணலாம்.