பாடல் # 821 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடும் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்ந்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.
விளக்கம் :
உடலின் அடிவயிற்றில் தொப்புளுக்கு பின்புறம் இருக்கின்ற மூச்சுக்காற்றை மேல்நோக்கி செலுத்தி முகவாயைக் கழுத்தோடு சேர்த்து ஜாலந்திர பந்தம் என்கிற முறையில் சுருக்கிக் கொண்டு யோகத்தில் எண்ணங்களை நெற்றிக்கு நடுவில் வைத்து அமர்ந்திருந்தால் தலை உச்சியிலிருந்து சுரக்கும் அமிர்தமானது அடி வயிற்றுக்கு சென்று அங்கிருக்கும் நெருப்பில் பொசுங்கிப் போகாமல் நெற்றியிலேயே நிலைத்து நிற்கும். அவ்வாறு அமிர்தம் நின்றால் கிடைக்கும் பெரும் பயன்களைச் சொல்லவும் முடியாது.