பாடல் #1470: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)
இருக்குஞ் சேயிடம் பிரமமு மாகும்
வருக்குஞ் சராசர மாகு முலகந்
தருக்கிய வாசார மெல்லாந் தகுமே
திருக்கமில் ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இருககுஞ செயிடம பிரமமு மாகும
வருககுஞ சராசர மாகு முலகந
தருககிய வாசார மெலலாந தகுமெ
திருககமில ஞானததைத தெரநதுணரந தொரகெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இருக்கும் சேய் இடம் பிரமமும் ஆகும்
வருக்கும் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தகுமே
திருக்கம் இல் ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்கே.
பதப்பொருள்:
இருக்கும் (இருக்கின்ற) சேய் (பிள்ளைகளாகிய ஞானிகளுக்கு) இடம் (தாம் இருக்கின்ற இடமே) பிரமமும் (வீடுபேறாக) ஆகும் (ஆகி விடும்)
வருக்கும் (ஆதியிலிருந்து தொடர்ந்து வருகின்ற) சராசரம் (அசையும் பொருளும் அசையா பொருளும்) ஆகும் (ஆக இருக்கின்ற) உலகம் (இந்த உலகமே)
தருக்கிய (அவர் கடைபிடித்து வருகின்ற) ஆசாரம் (ஒழுக்கங்கள்) எல்லாம் (அனைத்திற்கும்) தகுமே (தகுதியான படி அமைந்து விடும்)
திருக்கம் (இது யாருக்கு என்றால் ஒரு பிழையும்) இல் (இல்லாத) ஞானத்தை (உன்னதமான ஞானத்தை) தேர்ந்து (தமக்குள்ளே ஆராய்ந்து) உணர்ந்தோர்கே (உணர்ந்து கொண்டவர்களாகிய ஞானிகளுக்கே ஆகும்).
விளக்கம்:
இறைவனின் பிள்ளைகளாகிய ஞானிகளுக்கு அவர்கள் இருக்கின்ற இடமே வீடுபேறாக ஆகி விடும். ஆதியிலிருந்து தொடர்ந்து வருகின்ற அசையும் பொருளும் அசையா பொருளுமாக இருக்கின்ற இந்த உலகமே அவர் கடைபிடித்து வருகின்ற ஒழுக்கங்கள் அனைத்திற்கும் தகுதியான படி அமைந்து விடும். இது யாருக்கு என்றால் ஒரு பிழையும் இல்லாத உன்னதமான ஞானத்தை தமக்குள்ளே ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்களாகிய ஞானிகளுக்கே ஆகும்.