பாடல் #1044: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
சாதன நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதஞ்சு பொற்கயல் வாரண
நாதனை நாடு நவகோடி தானே.
விளக்கம்:
பாடல் #1043 இல் உள்ளபடி உலக நன்மைக்கு கருவியாக இருக்கும் யோகின் உடலுக்குள் 1. நான்கு கோணம் கொண்ட குண்டம் (சதுர வடிவம்), 2. யாக குண்டத்தில் எரியும் அக்னி போன்ற முக்கோண குண்டம் (முக்கோண வடிவம்), 3. வளைத்த வில்லைப் போன்ற பிறை வட்ட வடிவம் கொண்ட பிறை குண்டம் (பிறை வடிவம்), 4. ஆரம்பமும் முடிவும் இல்லாத வேதங்களைப் போன்ற வட்ட குண்டம் (வட்ட வடிவம்), 5. சக்தி விளையும் மயங்களான ஆறு சக்கரங்கள் கொண்ட குண்டம் (அறுகோண வடிவம்), 6. உலகத்தின் எட்டுத் திசைகள் கொண்ட குண்டம் (அட்டகோண வடிவம்), 7. இலை வடிவம் போன்ற குண்டம் (இலை வடிவம்), 8. ஐந்துவிதமான பொறிகள் கொண்ட குண்டம் (பஞ்சகோண வடிவம்), 9. பொன் போன்ற தாமரை மலர் வடிவம் கொண்ட குண்டம் (பதும வடிவம்) ஆகிய ஒன்பது வகையான குண்டங்கள் இருக்கின்றது. இந்த நவ குண்டங்களின் மூலமாக யோகியானவர் ஆதி மூலமாகிய இறைவனை ஒன்பது கோடி யுகங்களானாலும் நாடிக்கொண்டே இருப்பார்.