பாடல் #1016: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
நகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
மிகைத்திடு குண்டங்கள் மேலறி யோமே.
விளக்கம்:
சொல்லப்படும் குண்டத்தை முக்கோண்த்தில் அமைத்து அதனுள்ளே ஹோமத்தீயை எழுப்பினால் அதிலிருந்து நான்கு பக்கத்திலிருந்தும் இன்பமாக ஐந்து விதமான நன்மைகள் மேலெழுந்து வரும். இந்த ஹோமத்தில் இருக்கும் அக்னி வழியாக உயிருக்கு துன்பம் தரும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் அழியும். இந்த நவகுண்டங்களில் செய்யப்படும் ஹோமத்திற்கு மேலான ஹோமமாக யாம் ஒன்றையும் அறியவில்லை.