பாடல் #567

பாடல் #567: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.

விளக்கம்:

பிராணாயாமத்தின் மூலமாக சுவாசத்தையும் மனத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு நிலைப்படுத்தி மூச்சுக்காற்றை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு சுவாசத்தின் வழியாகச் செலுத்தி சமாதி நிலையை (தன்னை மறந்த நிலை) அடைந்தால் இனி வேறு பிறப்பின்றி பிராணாயாமத்தினால் அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும் பெற்று இன்புற்று இருப்பீர்கள்.

குறிப்பு: மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்.

மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்.

பாடல் #566

பாடல் #566: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

விளக்கம்:

பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தை பிராணாயாம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால் கள் (போதைப்பொருள்) அருந்தாமலேயை மனம் மகிழ்ச்சி (தன்னை மறந்த நிலை) அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையை கூறுகிறோம்.

பாடல் #565

பாடல் #565: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

விளக்கம்:

மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன் அவனிடம் இடகலை ( மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) என இரண்டு சுவாசங்கள் உள்ளது. அந்த சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை. சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.

பாடல் #564

பாடல் #564: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.

விளக்கம்:

உடலின் ஐம்புலன்களான 1. பார்த்தல், 2. கேட்டல், 3. முகர்தல், 4. சுவைத்தல், 5. தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் வைத்துள்ள உடம்பின் தலைவனாக இருக்கக்கூடிய ஆத்மாவானது இறைவனை அடைய மேல் நிலைக்கு செல்ல மனதுடன் மூச்சுக்காற்று ஒன்று உள்ளது, அந்த மூச்சுக்காற்று பயிற்சி செய்து உண்மையான இறைவனை அடைய எண்ணம் கொண்டோர்க்கு மனதை ஒருநிலைப்படுத்த நன்கு உதவும். இறைவுணர்வு இல்லாமல் தேவையில்லாதவறை நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அடங்காமல் அவர்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.