பாடல் #869

பாடல் #869: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்பாக மகன்பிறந் தானே.

விளக்கம்:

மூலாதாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை எழுப்பி ஜோதியாக மணிப்பூரக சக்கரத்தில் செயல்பட வைத்து ஒவ்வொரு சக்கரங்களாக மேலே எழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் சந்திரயோகப் பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும் பிரணவ மந்திரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த மந்திரத்தை குருவின் மூலம் அறிந்து உணர்ந்த யோகியர்கள் அனைத்துலகிற்கும் தந்தையான இறைவனுக்கு முன்பு மகனாக இருக்கும் தங்களின் ஆத்ம ஜோதியை தரிசிப்பார்கள்.

பாடல் #870

பாடல் #870: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுவன் தானே.

விளக்கம்:

நூல்களைக் கற்றாலும் அவற்றின் பயனை சிறிதும் உணராத அறிவிலிகள் நூல்களின் பயனை மற்றவர்கள் கூறினாலும் உணரமாட்டார்கள். குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் உணர்தலோடு மட்டுமில்லாது அதன் முடிவாகிய சந்திர மண்டலத்தில் சேர்த்தால் அங்கு சிவன் வெளிபடுவான்.

பாடல் #871

பாடல் #871: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீர்
நீங்குதல் கொடானே நெடுந்தகை யானே.

விளக்கம்:

சந்திர யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினியாகிய பாம்பை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் அது நித்தமும் சந்திர கலையை உண்டு அதுவும் பத்தாதென்று சூடாகிய தீங்கைக் கொடுக்கும் சூரிய கலையையும் உண்டு வளரும். குண்டலினிக்கு இரையாக கலைகள் இருப்பதால் இரண்டும் பகையாளிகள் போல இருந்தாலும் சந்திர யோகப் பயிற்சியினால் குண்டலினியை ஒவ்வொரு மண்டலமாக மேலேற்றிச் சென்று கடைசியில் ஒன்பதாவதான பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு ஒன்று சேர்த்துவிட்டால் குண்டலினியும் கலைகளும் தமது பகையைத் தீர்த்து ஒன்றாகிவிடும். அதன் பிறகு மாபெரும் கருணையாளனான இறைவன் யோகியை விட்டு என்றும் நீங்காமல் இருப்பான்.

உட்கருத்து: சந்திர யோகப் பயிற்சியில் மூச்சுக்காற்றின் மூலமே குண்டலினியை வளர்த்து ஏழு சக்கரங்கள் எட்டாவது துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவது பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு கலந்துவிட்டால் அதன் பிறகு யோகியர்களுக்கு மூச்சுக்காற்றோ உணவோ தேவையின்றி எவ்வளவு காலமும் இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.

பாடல் #872

பாடல் #872: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவும் சசியே.

விளக்கம்:

குண்டலினியுடன் மேலே சென்ற சந்திரன் தலையின் மீது நிற்கும் குண்டலினியை உறங்காமல் கவனிக்கும். அதன் பின் கீழே சந்திரன் இறங்கிய போது உறங்கும். நன்மையைத் தரும் ஒளியை மனத்தில் இருக்கச் செய்தால் அப்போது முழுமையாகத் சந்திரக்கலை யோகியிடம் பொருந்தும்.

பாடல் #873

பாடல் #873: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பிற்தன் கண்டுயில் கொண்டதே.

விளக்கம்:

சந்திர யோகத்தில் குண்டலினியைச் சந்திர மண்டலத்தில் சேர்க்கும் வரையில் சோர்வு இன்றி யோகத்தில் முயன்று அதைச் சேர்த்தபின் உள் நாக்கில் பெருகும் அமிர்தத்தைப் பருகி வேறு எதுவும் தேவையின்றி மூச்சுக்காற்று சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் வேண்டும்.

பாடல் #874

பாடல் #874: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லாரில்இச் சசிவன்னர் ராமே.

விளக்கம்:

ஊழிக் காலங்கள் பல சென்றாலும் அழியாமல் உலகிலே வாழ்கின்ற யோகிகள் தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே தமது ஆயுளின் அளவுகோலாகக் கொண்டு எமனை எதிர்த்து நிற்பார்கள். ஆனால் சந்திர யோகத்தைப் பின்பற்றும் யோகியர்கள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள இறைவனே தாமாகி என்றும் இந்த உலகில் மீண்டும் வந்து பிறக்காத உயர் நிலையை அடைவார்கள்.

பாடல் #875

பாடல் #875: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்அள விற்குஅண மின்றே.

விளக்கம்:

குளிர்ந்த நிலவும் சூரியனும் சரிபாதியாக பூமிக்கு வெளிச்சத்தைக் கொடுத்து மண்ணுலகில் மூன்றுவித காலங்களையும் அறிந்து கொள்வதற்கு வழியாக இருக்கின்றன. அதுபோலவே உயிர்களின் உடலில் சந்திர கலையும் சூரிய கலையும் விண்ணுலகின் உண்மை ஞானத்தை அறிந்து கொள்வதற்கு வழியாக இருக்கின்றன. இவை இரண்டையும் கொண்டு சந்திர யோகத்தின் மூலம் குண்டலினியை மேலேற்றிச் சென்று சந்திர மண்டலத்தில் சேர்த்து இறை சக்தியாகிய தூய வெண்ணிற ஜோதியைத் தரிசித்து விட்டால் அளவில் குறைவின்றி குளிர்ந்த அமிர்தம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

பாடல் #876

பாடல் #876: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறுந்
தளர்கின்ற சந்திரன் தன்கலை யாறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.

விளக்கம்:

வளர்கின்ற சூரியக்கலை ஆறும் தேய்கின்ற சந்திரக்கலை ஆறும் மூச்சுக்காற்றாய் வழக்கமாக தொண்டைக்கு கீழே எட்டு அங்குலமும் சந்திர யோகப் பயிற்சியில் தொண்டைக்கு மேலே நான்கு அங்குலமும் ஓடி சகஸ்ரதளத்தில் சேர்ந்து மலர்ந்து பின் அங்கிருந்து உடலெங்கும் விரிந்து பரவும் யோக முறையை யாரும் அறியவில்லை.

பாடல் #877

பாடல் #877: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற வின்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.

விளக்கம்:

சந்திர யோகத்தைச் செய்கின்ற யோகியர்கள் முழு நிலவு வருவதற்குள் தங்களது பயிற்சியை சரியாகச் செய்து முடித்துவிட்டால் அதன் பிறகு வரும் தேய்பிறை நாட்களில் அவர்களின் சுக்கிலம் வழக்கம் போல கீழிறங்கி எதன் மூலமும் வெளியேறிவிடாமல் காம எண்ணங்கள் சிறிதும் இன்றி மூலாதாரத்திலேயே கட்டுப்பட்டு நிற்கும். யோகியர்களும் மூச்சுக்காற்றை ஓங்கார மந்திரத்தோடு சேர்த்து சந்திர மண்டலத்தில் கலந்த பிறகு தமது எண்ணங்களை அதிலேயே நிலைக்க வைத்து அனைத்து உணர்வுகளையும் தாண்டிய நிலையில் இருப்பார்கள்.

பாடல் #878

பாடல் #878: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதி
ஆறுஉட் கலையுள் அகலுவா வாமே.

விளக்கம்:

குண்டலினியிலிருந்து வேர் பிடித்து மேலெழும்பும் செம்மையான கதிர்களைக் கொண்ட உண்மை ஞானத்தைக் கொடுக்கும் ஆறு சூரிய கலைகளோடு வெப்பத்தை கொடுக்கும் நான்கு அக்கினி கலைகள் கலந்து தொடர்ந்து வரும். அதனோடு ஈடு இணையில்லாத இறைவனை அடைய உதவும் பத்து நன்மை தரும் கலைகளோடு குளிர்ச்சியைக் கொடுக்கும் ஆறு சந்திர கலைகளும் கலந்து மொத்தம் 16 கலைகளும் ஒன்றாகச் சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையும் போது யோகியர்கள் அனைத்து உணர்வுகளையும் விட்டு விலகி இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டு இருக்கும் பேரானந்த நிலையை அடைவார்கள்.