பாடல் #773

பாடல் #773 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்
தலைவ னிடம்வலந் தன்வழி நூறே.

விளக்கம் :

மூச்சுக் காற்றை இடகலை பிங்கலை நாடிகளின் வழியாக உள்ளெடுத்து சுழுமுனை நாடி வழியே எடுத்துச் சென்று தலை உச்சியிலுள்ள சிவனை அடையும் பிராணாயாமத்தைச் சரியாய் செய்பவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு சாதனை செய்து கைகூடினால் சக்தியாய் இருக்கும் சிவனை உணரலாம். இந்தப் பயிற்சியை நாள் தோறும் ஐந்து நாழிகைகள் செய்தால் நூறு வயது தாண்டியும் வாழலாம்.

பாடல் #774

பாடல் #774 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளியிவ் வகையே.

விளக்கம் :

மூச்சுக்காற்று ஆறு விரற்கடை அளவு வெளியேற்றினால் வாழ்நாள் எண்பது ஆண்டாகும். ஏழு விரற்கடை அளவு வெளியேற்றினால் வாழ்நாள் அறுபது ஆண்டாகும். இவ்விரண்டு வகையையும் ஆராய்ந்து உணர்ந்து தெளிவாயாக.

பாடல் #775

பாடல் #775 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.

விளக்கம் :

மூச்சுக்காற்று எட்டு விரற்கடை அளவு சுவாசம் நீண்டு வெளியேரினால் ஆயுள் ஐம்பது வருடமாகும். மூச்சுக்காற்று ஒன்பது விரற்கடை அளவு சுவாசம் நீண்டு இயங்குமானால் ஆயுள் முப்பத்து மூன்று வருடமாகும்.

பாடல் #776

பாடல் #776 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.

விளக்கம் :

மூச்சுக்காற்று பத்து விரற்கடை அளவு சுவாசம் நீண்டு இயங்குமானால் ஆயுள் இருபத்தி எட்டு வருடமாகும். மூச்சுக்காற்று பதினைந்து விரற்கடை அளவு சுவாசம் நீண்டு இயங்குமானால் ஆயுள் இருபத்தைந்தது வருடமாகும்.

பாடல் #777

பாடல் #777 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.

விளக்கம் :

மூச்சுக்காற்று பகல் முப்பது நாழிகையும் இடநாடி வழியே சென்றால் ஆயுள் பன்னிரண்டாண்டு ஆகும். அதனை அனுபவமாகவும் காண முடியும். இடையே மாற்றம் இல்லாமல் ஒருநாள் முழுதும் (அறுபது நாழிகை) மூச்சுக்காற்று இடை நாடி வழியே உள்வந்து வெளிச் சென்றால் ஆயுள் இனி பத்தாண்டு என்று அறியலாம்.

பாடல் #778

பாடல் #778 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடில்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமேல்

விளக்கம் :

மூச்சுக்காற்று ஒரு நாடியின் வழியாகவே இருநாட்கள் சென்றால் கன்மேந்திரியத்ததின் வழியாக கீழே செல்லும் அபானன் என்னும் பகைக்காற்று தடைபட்டு மூச்சுக் காற்றுடன் மூன்று நாட்கள் இணைந்தது நிலை பெற்று இருந்தால் ஆயுள் வளர்ச்சி அடையும்.

பாடல் #779

பாடல் #779 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே.

விளக்கம் :

வாழ்நாளை அளந்தது தெரிந்து கொள்ளும் வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கினால் நான்கு ஆண்டுகள் உயிர் உடலில் இருக்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கினால் தெளிவாக மூன்றாண்டு உயிர் உடலில் இருக்கும்.

பாடல் #780

பாடல் #780: மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

விளக்கம் :

மூச்சுக்காற்று பத்து நாள் இடைநாடி வழியே சென்றால் உயிர் உடலில் இரண்டு ஆண்டு கலந்து இருக்கும். மூச்சுக்காற்று பதினைந்து நாள் இடைநாடி வழியே சென்றால் வாழ்நாள் ஓர் ஆண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பாடல் #781

பாடல் #781: மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.

விளக்கம்:

மூச்சுக்காற்று இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால் வாழ்நாள் ஆறு மாதம் ஆகும். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று மாதம் ஆகும். இருபத்தாறு நாள் இயங்கினால் இரண்டு மாதம் ஆகும்.

For one who has awakened in knowledge, there is no more suffering. For him every inch of this creation is filled with bliss, is a part of the Self. Jaya Moksha inspiration - check out my designs at etsy.com/shop/JayaMoksha - inspired by spiritual symbolism and tribal handicrafts ♥

பாடல் #782

பாடல் #782 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

விளக்கம் :

மூச்சுக்காற்று இருபத்தேழு நாள் இடகலைநாடி வழியே சென்றால் அதன்பிறகு ஒரு மாதம் வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டமுடியும். இருபத்தெட்டுநாள் சென்றால் அதன்பின் பத்து நாள்களே வாழ்நாள் என்று மெய்ப்பித்துக் காட்டமுடியும்.