பாடல் #1661: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)
தவமிக் கவரே தலையான வேட
ரவமிக் கவரே யதிகொலை வேட
ரவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தவமிக கவரெ தலையான வெட
ரவமிக கவரெ யதிகொலை வெட
ரவமிக கவரவெடத தாகாரவ வெடந
தவமிக கவரககனறித தாஙகவொண ணாதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தவம் மிக்கு அவரே தலையான வேடர்
அவம் மிக்கு அவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கு அவர் வேடத்து ஆகார் அவ் வேடம்
தவம் மிக்கு அவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே.
பதப்பொருள்:
தவம் (உண்மையான தவ வலிமையை) மிக்கு (அதிகமாக கொண்ட) அவரே (தவசிகளே) தலையான (அனைத்திலும் சிறந்த) வேடர் (உண்மையான தவ வேடத்தை அணிந்தவர்கள் ஆவார்கள்)
அவம் (பொய்யான தவ வேடம் அணிந்ததால் பெற்ற பாவங்கள்) மிக்கு (அதிகமாக கொண்ட) அவரே (பொய்யான தவசிகளே) அதி (உயிர் கொலையை விடவும் கொடுமையான கொலையாகிய தர்மத்தையே) கொலை (கொலை செய்கின்ற) வேடர் (பொய்யான வேடதாரிகள் ஆவார்கள்)
அவம் (ஆதலால் பாவங்கள்) மிக்கு (அதிகமாக கொண்ட) அவர் (அவர்கள்) வேடத்து (உண்மையான தவ வேடத்திற்கு) ஆகார் (தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள்) அவ் (உண்மையான அந்த) வேடம் (தவ வேடத்தை)
தவம் (உண்மையான தவ வலிமையை) மிக்கு (அதிகமாக கொண்ட) அவர்க்கு (தவசிகளைத்) அன்றி (தவிர) தாங்க (வேறு யாராலும் தாங்க) ஒண்ணாதே (முடியாது).
விளக்கம்:
உண்மையான தவ வலிமையை அதிகமாக கொண்ட தவசிகளே அனைத்திலும் சிறந்த உண்மையான தவ வேடத்தை அணிந்தவர்கள் ஆவார்கள். பொய்யான தவ வேடம் அணிந்ததால் பெற்ற பாவங்கள் அதிகமாக கொண்ட பொய்யான தவசிகளே உயிர் கொலையை விடவும் கொடுமையான கொலையாகிய தர்மத்தையே கொலை செய்கின்ற பொய்யான வேடதாரிகள் ஆவார்கள். ஆதலால் பாவங்கள் அதிகமாக கொண்ட அவர்கள் உண்மையான தவ வேடத்திற்கு தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள். உண்மையான அந்த தவ வேடத்தை தவ வலிமை அதிகமாக கொண்ட தவசிகளைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது.
கருத்து:
உண்மையான தவசிகள் அணிந்து இருக்கின்ற வேடப் பொருள்களில் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் சக்தியானது அதிகமாக இருக்கும். அந்த சக்தியை தாங்குகின்ற தவ வலிமை அவர்களிடம் உண்டு. ஆனால், பொய்யான வேடதாரிகளிடம் தவ வலிமை இல்லாததால் அந்த பொருள்களில் உள்ள சக்தியை தாங்க முடியாது.