ஞாதுரு ஞான ஞேயம் முன்னுரை:
பார்க்கின்றவன் என்பது சாதகரை குறிக்கும். சாதகர் தமது ஆன்மாவை மாயை நீங்கிய ஞானத்தோடு பார்க்கும் போது அது சிவமாகத் தெரிகின்றது. அதுவே ஞானத்தின் மூலம் பார்க்கப் படுகின்ற பொருளாகும். தமது ஆன்மா சிவமாக இருப்பதை ஞானத்தினால் பார்த்து உணர்ந்த சாதகருக்கு ‘நான்’ என்ற அகங்காரம் நீங்கி விடுகின்றது.
பாடல் #1605: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
நீங்கார் சிவானந்த நேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படராப் படரினு
மாங்கார நீங்கி யதனிலை நிற்கவே
நீங்கா வமுத நிலைபெற லாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நீஙகார சிவானநத நெயததெ நினறிடப
பாஙகான பாசம படராப படரினு
மாஙகார நீஙகி யதனிலை நிறகவெ
நீஙகா வமுத நிலைபெற லாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நீங்கார் சிவ ஆனந்த நேயத்தே நின்றிட
பாங்கு ஆன பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுத நிலை பெறல் ஆமே.
பதப்பொருள்:
நீங்கார் (நீங்காமல்) சிவ (சிவப் பரம்பொருளின்) ஆனந்த (பேரானந்தத்தில்) நேயத்தே (தூய்மையான அன்பிலே) நின்றிட (நின்று இருப்பார்கள்)
பாங்கு (அப்படி நிற்கின்ற பாவனை) ஆன (விட்டுவிடாமல் இருக்கும் போது) பாசம் (பாசத் தளைகள்) படரா (மூடி விடாமல் இருக்கும்) படரினும் (பிறகு உலக நன்மைக்காக செயல்கள் செய்யும் போது பாசம் வந்தால் கூட)
ஆங்காரம் (நான் என்கின்ற அகங்காரம்) நீங்கி (நீங்கி விட்டதால்) அதன் (பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத) நிலை (நிலையிலேயே) நிற்கவே (நிலைத்து நிற்பார்கள்)
நீங்கா (அப்போது எப்போதும் நீங்காத) அமுத (சமாதி நிலையில் அமிழ்தத்தை பருகிக் கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற) நிலை (நிலையை) பெறல் (அவர்களால் பெற) ஆமே (முடியும்).
விளக்கம்:
திருவடி பேற்றை பெற்ற அடியவர்கள் நீங்காமல் சிவப் பரம்பொருளின் பேரானந்தத்தில் தூய்மையான அன்பிலே நின்று இருப்பார்கள். அப்படி நிற்கின்ற பாவனை விட்டுவிடாமல் இருக்கும் போது பாசத் தளைகள் மூடி விடாமல் இருக்கும். பிறகு உலக நன்மைக்காக செயல்கள் செய்யும் போது பாசம் வந்தால் கூட நான் என்கின்ற அகங்காரம் நீங்கி விட்டதால் பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத நிலையிலேயே நிலைத்து நிற்பார்கள். அப்போது எப்போதும் நீங்காத சமாதி நிலையில் அமிழ்தத்தை பருகிக் கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற நிலையை அவர்களால் பெற முடியும்.