பாடல் #1579: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)
உண்மையும் பொய்மை யொழித்தலு முண்மைபாற்
றிண்மையு மொண்மைச் சிவமாய னல்வரன்
வண்மையு மெட்டெட்டுச் சித்த மயக்கவந்
தண்ண லருளன்றி யாரறி வாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உணமையும பொயமை யொழிததலு முணமைபாற
றிணமையு மொணமைச சிவமாய னலவரன
வணமையு மெடடெடடுச சிதத மயககவந
தணண லருளனறி யாரறி வாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பால்
திண்மையும் ஒண்மை சிவம் ஆய நல் அரன்
வண்மையும் எட்டு எட்டு சித்த மயக்க வந்த
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே.
பதப்பொருள்:
உண்மையும் (அடியவர்கள் உலகத்தில் பார்க்கின்ற அனைத்தும் உண்மை என்று நினைக்கின்ற மாயையை நீக்கி) பொய்மை (பொய்யான உலக அறிவினை) ஒழித்தலும் (அழிப்பதையும்) உண்மைப் (பரம்பொருளாகிய உண்மையின்) பால் (மேல்)
திண்மையும் (மன உறுதியுடன்) ஒண்மை (ஒன்றி இருக்கின்ற) சிவம் (சிவத்தோடு) ஆய (இருக்க வைப்பதையும்) நல் (தீமையை நெருங்க விடாமல் தடுக்கும் நல்ல) அரன் (பாதுகாப்பு அரனாக)
வண்மையும் (வலிமையுடன் நிற்பதையும் ஆகிய இவை அனைத்தையும்) எட்டு (எட்டும்) எட்டு (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு உலக அறிவாகிய கலைகளால்) சித்த (சித்தம்) மயக்க (மயங்கி) வந்த (வந்தவர்களால் அறிந்து கொள்ள முடியுமா?)
அண்ணல் (தலைவனாகிய இறைவனின்) அருள் (திருவருள்) அன்றி (இல்லாமல்) யார் (இவற்றை யாரால்) அறிவாரே (அறிந்து கொள்ள முடியும்?).
விளக்கம்:
அடியவர்கள் உலகத்தில் பார்க்கின்ற அனைத்தும் உண்மை என்று நினைக்கின்ற மாயையை நீக்கி பொய்யான உலக அறிவினை அழிப்பதையும், பரம்பொருளாகிய உண்மையின் மேல் மன உறுதியுடன் சிவத்தோடு ஒன்றி இருக்க வைப்பதையும், தீமையை நெருங்க விடாமல் தடுக்கும் நல்ல பாதுகாப்பு அரனாக வலிமையுடன் நிற்பதையும், ஆகிய இவை அனைத்தையும் உலக அறிவாகிய அறுபத்து நான்கு கலைகளால் சித்தம் மயங்கி வந்தவர்களால் அறிந்து கொள்ள முடியுமா? தலைவனாகிய இறைவனின் திருவருள் இல்லாமல் இவற்றை யாரால் அறிந்து கொள்ள முடியும்? ஆகவே சிவ குருவாக வந்த இறைவனின் திருவருளாலேயே அனைத்தையும் அடியவர்களால் அறிந்து கொள்ள முடியும்.