பாடல் #1753: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)
அகார முதலா யனைத்துமாய் நிற்கு
முகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கு
மகார வுகார மிரண்டு மறியி
லகார வுகார மிலிங்கம தாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அகார முதலா யனைததுமாய நிறகு
முகார முதலா யுயிரபபெயது நிறகு
மகார வுகார மிரணடு மறியி
லகார வுகார மிலிஙகம தாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அகாரம் முதல் ஆய் அனைத்தும் ஆய் நிற்கும்
உகாரம் முதல் ஆய் உயிர்ப்பு எய்து நிற்கும்
அகாரம் உகாரம் இரண்டும் அறியில்
அகாரம் உகாரம் இலிங்கம் அது ஆமே.
பதப்பொருள்:
அகாரம் (ஓங்கார தத்துவத்தில் ‘அ’கார எழுத்தின்) முதல் (முதல்) ஆய் (ஆகி) அனைத்தும் (அனைத்தும்) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்பதுவும்)
உகாரம் (‘உ’கார எழுத்தின்) முதல் (முதல்) ஆய் (ஆகி) உயிர்ப்பு (அனைத்து உயிர்களின்) எய்து (இயக்கமாக) நிற்கும் (நிற்பதுவும்)
அகாரம் (‘அ’கார எழுத்தின் தத்துவம்) உகாரம் (‘உ’கார எழுத்தின் தத்துவம்) இரண்டும் (ஆகிய இரண்டுமாக இருப்பதுமாகிய பரம்பொருளை உள்ளுக்குள் உணர்ந்து) அறியில் (அறிந்து கொண்டால்)
அகாரம் (அந்த ‘அ’கார எழுத்தும்) உகாரம் (‘உ’கார எழுத்துமாக தமக்குள் இருக்கின்ற) இலிங்கம் (பரம்பொருளின் இலிங்க வடிவம்) அது (அதுவே) ஆமே (ஆத்மாவாகும்).
விளக்கம்:
ஓங்கார தத்துவத்தில் ‘அ’கார எழுத்தின் முதலாகி அனைத்துமாக நிற்பதுவும், ‘உ’கார எழுத்தின் முதலாகி அனைத்து உயிர்களின் இயக்கமாக நிற்பதுவும், ‘அ’கார எழுத்தின் தத்துவம் ‘உ’கார எழுத்தின் தத்துவம் ஆகிய இரண்டுமாக இருப்பதுமாகிய பரம்பொருளை உள்ளுக்குள் உணர்ந்து அறிந்து கொண்டால், அந்த ‘அ’கார எழுத்தும் ‘உ’கார எழுத்துமாக தமக்குள் இருக்கின்ற பரம்பொருளின் இலிங்க வடிவமே ஆத்மாவாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.