பாடல் #1712: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)
இலிங்கம தாகுவ தாரு மறியா
ரிலிங்கம தாவது எண்டிசை யெல்லா
மிலிங்கம தாகுவ தெண்ணெண் கலையு
மிலிங்கம தாக வெடுத்த துலகே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இலிஙகம தாகுவ தாரு மறியா
ரிலிஙகம தாவது எணடிசை யெலலா
மிலிஙகம தாகுவ தெணணெண கலையு
மிலிஙகம தாக வெடுதத துலகே.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆகுவது எண் எண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.
பதப்பொருள்:
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (எதுவாக இருக்கின்றது என்பதை) ஆரும் (யாரும்) அறியார் (அறியாமல் இருக்கின்றார்கள்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆவது (ஆக இருப்பது) எண் (எட்டு) திசை (திசைகளில்) எல்லாம் (உள்ள அனைத்தும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (ஆக இருப்பது) எண் (எட்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) கலையும் (கலைகளும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆக (ஆகவே) எடுத்தது (இறைவன் தமது அடையாளமாக) உலகே (அனைத்து உலகங்களும் உருவாக்கினான்).
விளக்கம்:
இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். எட்டு திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும், அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும். இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான்.