பாடல் #1704

பாடல் #1704: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்
கோலின் மேல்நின்ற குறிகள் பதினாறு
மூலங் கண்டாங்கே முடிந்த முதலிரண்
டுங்காலங் கண்டானடி காணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாலு மிருமூனறு மீரைநது மீராறுங
கொலின மெலநினற குறிகள பதினாறு
மூலங கணடாஙகெ முடிநத முதலிரண
டுஙகாலங கணடானடி காணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாலும் இரு மூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.

பதப்பொருள்:

நாலும் (நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும்) இரு (இரண்டும்) மூன்றும் (மூன்றும் பெருக்கி வரும் மொத்தம் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும்) ஈர் (இரண்டும்) ஐந்தும் (ஐந்தும் பெருக்கி வரும் மொத்தம் பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும்) ஈர் (இரண்டும்) ஆறும் (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும்)
கோலின் (சுழுமுனை நாடியின்) மேல் (மேல்) நின்ற (நிற்கின்ற) குறிகள் (இந்த சக்கரங்களாகிய குறிகளோடு) பதினாறும் (பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி)
மூலம் (இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற) கண்டு (நீல நிற ஜோதியை கண்டு) ஆங்கே (நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில்) முடிந்த (வினைகள் முடிவதற்கு) முதல் (முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில்) இரண்டும் (பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட)
காலம் (காலத்தை படைத்தவனும்) கண்டான் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின்) அடி (திருவடிகளை) காணலும் (தரிசிக்கவும்) ஆமே (முடியும்).

விளக்கம்:

நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும், சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்த சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி, இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற நீல நிற ஜோதியை கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில் வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில் பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட, காலத்தை படைத்தவனும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை தரிசிக்கவும் முடியும்.

பாடல் #1705

பாடல் #1705: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஈராறு நாதத்தி லீரெட்டா மந்தத்தில்
மேதாதி நாதாந்த மீதாம் பாராசத்தி
போதா லயாந்த விகாரந் தனிற்போத
மேதாரி வாதார மீதானமுண் மையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஈராறு நாதததி லீரெடடா மநதததில
மெதாதி நாதாநத மீதாம பராசததி
பொதா லயாநத விகாரந தனிறபொத
மெதாரி வாதார மீதானமுண மையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தில்
மேத ஆதி நாத அந்த மீது ஆம் பரா சத்தி
போத ஆலய அந்த விகாரம் தனில் போத
மேத ஆர் இவ் ஆதாரம் ஈது ஆனம் உண்மையே.

பதப்பொருள்:

ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு சூரிய கலைகளாகிய) நாதத்தில் (ஓசை மயத்திலும்) ஈர் (இரண்டும்) எட்டாம் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு சந்திர கலைகளாகிய) அந்தத்தில் (அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும்)
மேத (தலை உச்சியில்) ஆதி (அனைத்திற்கும் முதலாகவும்) நாத (ஓசையின்) அந்த (எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின்) மீது (மீது) ஆம் (வீற்றிருப்பது) பரா (அசையும்) சத்தி (சக்தியாகிய பரம்பொருள் ஆகும்)
போத (அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி) ஆலய (வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு) அந்த (உள்ளே) விகாரம் (இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின்) தனில் (ஆன்மாவிற்குள்) போத (ஞானமாகவும்)
மேத (அக்னியாகவும்) ஆர் (முழுவதும் நிறைந்து) இவ் (இந்த உடலுக்குள் இருக்கின்ற) ஆதாரம் (ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது) ஈது (அந்த இறை சக்தியே) ஆனம் (என்று யாம் உரைப்பது) உண்மையே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

பன்னிரண்டு சூரிய கலைகளாகிய ஓசை மயத்திலும், பதினாறு சந்திர கலைகளாகிய அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும், தலை உச்சியில் அனைத்திற்கும் முதலாகவும், ஓசையின் எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின் மீது வீற்றிருப்பது அசையும் சக்தியாகிய பரம்பொருள் ஆகும். அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு உள்ளே இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின் ஆன்மாவிற்குள் ஞானமாகவும், அக்னியாகவும் முழுவதும் நிறைந்து இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது அந்த இறை சக்தியே என்று யாம் உரைப்பது உண்மையே ஆகும்.

பாடல் #1706

பாடல் #1706: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்று நானென்றுந் தன்மைக ளோராறு
பாரெங்கு மாகிப் பரந்த பராபரங்
காரொன்று கற்பக மாகிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலெனறு கீழென றிரணடறக காணுஙகால
தானெனறு நானெனறுந தனமைக ளொராறு
பாரெஙகு மாகிப பரநத பராபரங
காரொனறு கறபக மாகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் என்றும் கீழ் என்றும் இரண்டு அற காணுங்கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பரா பரம்
கார் ஒன்றும் கற்பகம் ஆகி நின்றானே.

பதப்பொருள்:

மேல் (மேன்மையானது) என்றும் (என்றும்) கீழ் (கீழ்மையானது) என்றும் (என்றும்) இரண்டு (இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது) அற (இல்லாமல்) காணுங்கால் (அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது)
தான் (தான்) என்றும் (என்று நினைக்கின்ற ஆத்மாவும்) நான் (நான்) என்றும் (என்று நினைக்கின்ற உடம்பும்) தன்மைகள் (தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற) ஓர் (ஒரு) ஆறும் (ஆறு ஆதார சக்கரங்களும்)
பார் (உலகங்கள்) எங்கும் (அனைத்தும்) ஆகி (ஆகி) பரந்த (அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரம் (பரம்பொருளே என்பதை உணர்ந்தால்)
கார் (வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில்) ஒன்றும் (சேமித்து வைத்து இருக்கும்) கற்பகம் (தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே) ஆகி (உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக) நின்றானே (நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்).

விளக்கம்:

மேன்மையானது என்றும் கீழ்மையானது என்றும் இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது இல்லாமல் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது, தான் என்று நினைக்கின்ற ஆத்மாவும், நான் என்று நினைக்கின்ற உடம்பும், தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களும், உலகங்கள் அனைத்தும் ஆகி அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளே என்பதை உணர்ந்தால், வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில் சேமித்து வைத்து இருக்கும் தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்.

பாடல் #1707

பாடல் #1707: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆதார சோதனை யானாடி சுத்திகள்
வேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி
போதா லையத்துப் புலன்கரணப் புந்தி
சாதா ரணங்கெட்றான சகமார் கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதார சொதனை யானாடி சுததிகள
வெதாதி யீரெண கலநதது விணணொளி
பொதா லையததுப புலனகரணப புநதி
சாதா ரணஙகெடறான சகமார கமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதார சோதனை ஆல் நாடி சுத்திகள்
வேத ஆதி ஈர் எண் கலந்தது விண் ஒளி
போத ஆலயத்து புலன் கரண புந்தி
சாதாரணம் கெட்டது ஆன சக மார்கமே.

பதப்பொருள்:

ஆதார (ஆறு ஆதாரங்களையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்வதன்) ஆல் (மூலம்) நாடி (உடலில் உள்ள அனைத்து நாடிகளையும்) சுத்திகள் (சுத்தம் செய்த பிறகு)
வேத (வேதங்களுக்கு) ஆதி (மூலமாகிய இறைவன்) ஈர் (இரண்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு கலைகளாக) கலந்தது (தமக்குள் கலந்து) விண் (வானத்தில் இருந்து) ஒளி (உலகத்தின் இருளை நீக்கும் பேரொளியைப் போலவே)
போத (தமக்குள் உண்மை ஞானத்தை விளக்கி அருளுகின்ற) ஆலயத்து (ஆலயமாகவே வீற்றிருப்பான். அதன் பிறகு) புலன் (ஐந்து புலன்களும்) கரண (நான்கு அந்தக் கரணங்களும்) புந்தி (அறிவும்)
சாதாரணம் (உலக பற்றுக்கள் சார்ந்த தங்களின் இயல்பான நிலையை) கெட்டது (மாற்றி ஒன்றாக சேர்ந்து இறைவனை நோக்கி) ஆன (செயல்படுவதே) சக (தோழமை) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

ஆறு ஆதாரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நாடிகளையும் சுத்தம் செய்த பிறகு வேதங்களுக்கு மூலமாகிய இறைவன் பதினாறு கலைகளாக தமக்குள் கலந்து வானத்தில் இருந்து உலகத்தின் இருளை நீக்கும் பேரொளியைப் போலவே தமக்குள் உண்மை ஞானத்தை விளக்கி அருளுகின்ற ஆலயமாகவே வீற்றிருப்பான். அதன் பிறகு ஐந்து புலன்களும், நான்கு அந்தக் கரணங்களும், அறிவும், உலக பற்றுக்கள் சார்ந்த தங்களின் இயல்பான நிலையை மாற்றி ஒன்றாக சேர்ந்து இறைவனை நோக்கி செயல்படுவதே தோழமை வழி முறையாகும்.

பாடல் #1708

பாடல் #1708: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

மேதாதி யாலே விடாதோமெனத் தூண்டி
யாதார சோதனை யத்துவ சோதனை
தாதார மாகவே தானெழச் சாதித்தா
லாதாரஞ் செய்ப்போக மாவது காயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெதாதி யாலெ விடாதொமெனத தூணடி
யாதார சொதனை யததுவ சொதனை
தாதார மாகவெ தானெழச சாதிததா
லாதாரஞ செயபபொக மாவது காயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேத ஆதியாலே விடாது ஓம் என தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாது ஆரம் ஆகவே தான் எழ சாதித்தால்
ஆதாரம் செய் போகம் ஆவது காயமே.

பதப்பொருள்:

மேத (உடலுக்குள் இருக்கின்ற மூலாக்கினி வேள்வியை) ஆதியாலே (ஆதியாக இருக்கின்ற இறைவனை) விடாது (இடைவிடாது எண்ணிக் கொண்டு) ஓம் (ஓங்கார) என (மந்திரத்தின் மூலம்) தூண்டி (தூண்டி எழுப்பி)
ஆதார (உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும்) அத்துவ (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும்)
தாது (உடலுக்குள் இருக்கின்ற சுக்கிலத்தை) ஆரம் (மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை ஏற்றி இறக்கி மாலை) ஆகவே (போலவே) தான் (தானாகவே) எழ (எழுச்சி பெறும் படி) சாதித்தால் (சாதகம் செய்து சாதித்தால்)
ஆதாரம் (அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாக) செய் (செயல்பட்டு) போகம் (இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும்) ஆவது (அழியாத பாத்திரமாக) காயமே (தமது உடலை மாற்றி விடும்).

விளக்கம்:

உடலுக்குள் இருக்கின்ற மூலாக்கினி வேள்வியை ஆதியாக இருக்கின்ற இறைவனை இடைவிடாது எண்ணிக் கொண்டு ஓங்கார மந்திரத்தின் மூலம் தூண்டி எழுப்பி, உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்தும், உடலுக்குள் இருக்கின்ற சுக்கிலத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை ஏற்றி இறக்கி மாலை போலவே தானாகவே எழுச்சி பெறும் படி சாதகம் செய்து சாதித்தால், அதுவே இறைவனை அடைவதற்கு ஆதாரமாக செயல்பட்டு இறைவனது பேரின்பத்தை அனுபவிக்க வைக்கும் அழியாத பாத்திரமாக தமது உடலை மாற்றி விடும்.

இறைவனை அடைவதற்கான ஆறு வழிகள் (அத்துவாக்கள்):

  1. மந்திரம் = மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் இறைவனை அடைவது.
  2. பதம் = இறைவனது திருவடிகளை முழுவதுமாக சரணடைவதன் மூலம் இறைவனை அடைவது.
  3. வர்ணம் = தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை தர்மப் படி செய்து அதன் மூலமே இறைவனை அடைவது.
  4. புவனம் = உலகத்தில் இருக்கின்ற ஆலயங்கள், தீர்த்தங்கள் போன்றவற்றை யாத்திரை செய்வதன் மூலம் இறைவனை அடைவது.
  5. தத்துவம் = இறை தத்துவங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு ஞானத்தினால் இறைவனை அடைவது.
  6. கலை = பாடல் #713 இல் உள்ளபடி பதினாறு கலைகளில் மேன்மை பெற்று அவற்றின் மூலமே இறைவனை அடைவது.

பாடல் #1709

பாடல் #1709: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆறந்த முங்கூடி யாகுமுடம் பினிற்
கூறிய வாதார மாறுங்குறிக் கொண்மி
னாறிய வக்கரமா மைம்பதின் மேலே
யூறிய வாதாரத் தோரெழுத் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறநத முஙகூடி யாகுமுடம பினிற
கூறிய வாதார மாறுஙகுறிக கொணமி
னாறிய வககரமா மைமபதின மெலெ
யூறிய வாதாரத தொரெழுத தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறி கொண்மின்
ஆறிய அக்கரம் ஆம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே.

பதப்பொருள்:

ஆறு (ஆறு ஆதார சக்கரங்களின்) அந்தமும் (எல்லைகளும்) கூடி (ஒன்றாக கூடி) ஆகும் (ஆகுகின்ற) உடம்பினில் (உயிர்களின் உடம்பினுள்)
கூறிய (சொல்லிய) ஆதாரம் (ஆதாரங்களாகிய) ஆறும் (ஆறு சக்கரங்களையும்) குறி (குறிக்கோளாக) கொண்மின் (கொண்டு சாதகம் செய்யுங்கள்)
ஆறிய (அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும்) அக்கரம் (வீற்றிருக்கின்ற எழுத்துக்களும்) ஆம் (சக்தியூட்டம் பெற்று) ஐம்பதின் (ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு) மேலே (மேலே வீற்றிருந்து)
ஊறிய (அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து) ஆதாரத்து (நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற) ஓர் (ஒரு) எழுத்து (எழுத்தாகிய) ஆமே (ஓங்காரமாகவே மாறி இருக்கும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களின் எல்லைகளும் ஒன்றாக கூடி ஆகுகின்ற உயிர்களின் உடம்பினுள் சொல்லிய ஆதாரங்களாகிய ஆறு சக்கரங்களையும் குறிக்கோளாக கொண்டு சாதகம் செய்யுங்கள். அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும் வீற்றிருக்கின்ற எழுத்துக்களும் சக்தியூட்டம் பெற்று, ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு மேலே வீற்றிருந்து, அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற ஒரு எழுத்தாகிய ஓங்காரமாகவே மாறி இருக்கும்.

பாடல் #1710

பாடல் #1710: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆகு முடம்பு மழிக்கின்ற வவ்வுடல்
போகு முடம்பும் பொருந்திய வாறுதா
னாகிய வக்கர மைம்பது தத்துவ
மாகு முடம்புக்கு மாறந்த மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகு முடமபு மழிககினற வவவுடல
பொகு முடமபும பொருநதிய வாறுதா
னாகிய வககர மைமபது தததுவ
மாகு முடமபுககு மாறநத மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ் உடல்
போகும் உடம்பும் பொருந்திய ஆறு தான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறு அந்தம் ஆமே.

பதப்பொருள்:

ஆகும் (ஆறு ஆதார சக்கரங்களால் ஆகிய) உடம்பும் (உயிர்களின் உடம்பை) அழிக்கின்ற (அழிக்கின்றதும்) அவ் (அந்த ஆறு சக்கரங்களே ஆகும்) உடல் (உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில்)
போகும் (ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும்) உடம்பும் (உயிர்களின் உடம்புக்குள்) பொருந்திய (பொருந்தி மறைந்து இருக்கின்றதும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்கள்) தான் (தான்)
ஆகிய (அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது) அக்கரம் (ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது) ஐம்பது (ஐம்பது) தத்துவம் (தத்துவங்களாகும்)
ஆகும் (இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய) உடம்புக்கும் (உடம்புக்கும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருப்பது ஓங்காரமே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களே உயிர்களின் உடம்பை ஆக்குவதும் அழிக்கின்றதும் ஆகும். உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில் ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும், உயிர்களின் உடம்புக்குள் பொருந்தி மறைந்து இருக்கின்றதும், அந்த ஆறு சக்கரங்களே ஆகும். அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது ஐம்பது தத்துவங்களாகும். இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய உடம்புக்கும் அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும் எல்லையாக இருப்பது ஓங்காரமே ஆகும்.

பாடல் #1711

பாடல் #1711: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆயு மலரி னணிமலர் மேலது
மாய விதழும் பதினாறு மங்குள
தூய வறிவு சிவானந்த மாகிப்போய்
மேய வறிவாய் விளைந்தது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயு மலரி னணிமலர மெலது
மாய விதழும பதினாறு மஙகுள
தூய வறிவு சிவானநத மாகிபபொய
மெய வறிவாய விளைநதது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயு மலரின் அணி மலர் மேல் அதும்
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவ ஆனந்தம் ஆகி போய்
மேய அறிவு ஆய் விளைந்தது தானே.

பதப்பொருள்:

ஆயு (உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது) மலரின் (ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும்) அணி (அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள்) மலர் (அந்த மலர்களின்) மேல் (மேல்) அதும் (இருக்கின்றது)
ஆய (இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின்) இதழும் (இதழ்களும்) பதினாறும் (பதினாறு கலைகளும்) அங்கு (அங்கேயே) உள (உள்ளது)
தூய (இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற) அறிவு (அறிவானது) சிவ (இறைவனது) ஆனந்தம் (பேரின்பத்தை தாங்குகின்ற) ஆகி (பாத்திரமாக ஆகி) போய் (விடுகின்றது)
மேய (அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது) அறிவு (பேரறிவு) ஆய் (ஆக) விளைந்தது (விளைய வைப்பதற்கு) தானே (இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன).

விளக்கம்:

உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும். அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள் அந்த மலர்களின் மேல் இருக்கின்றது. இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின் இதழ்களும் பதினாறு கலைகளும் அங்கேயே உள்ளது. இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற அறிவானது இறைவனது பேரின்பத்தை தாங்குகின்ற பாத்திரமாக ஆகி விடுகின்றது. அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது பேரறிவு ஆக விளைய வைப்பதற்கு இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன.