பாடல் #1817: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)
உற்ற பிறப்பு முறுமல மானதும்
பற்றிய மாயா படலமெனப் பண்ணி
யற்றனை நீக்கி யடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழலணிந் தேனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உறற பிறபபு முறுமல மானதும
பறறிய மாயா படலமெனப பணணி
யறறனை நீககி யடிவைததான பெரநநதி
கறறன விடடென கழலணிந தெனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அற்றனை நீக்கி அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் அணிந்தேனே.
பதப்பொருள்:
உற்ற (எமக்கு கொடுக்கப்பட்ட) பிறப்பும் (பிறவியும்) உறு (யாம் அனுபவிக்கின்ற) மலம் (மூன்று விதமான மலங்கள்) ஆனதும் (ஆக இருப்பதும்)
பற்றிய (எம்மை பற்றிக் கொண்ட) மாயா (மாயையின்) படலம் (இருள் கூட்டம்) என (என்று) பண்ணி (எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து)
அற்றனை (அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும்) நீக்கி (எம்மை விட்டு நீக்கி விட்டு) அடி (தமது திருவடியை) வைத்தான் (எம் தலைமேல் வைத்தருளினான்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
கற்றன (அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும்) விட்டேன் (விட்டு விட்டேன்) கழல் (அவனது திருவடியை) அணிந்தேனே (எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்).
விளக்கம்:
எமக்கு கொடுக்கப்பட்ட பிறவியும், யாம் அனுபவிக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களாக இருப்பதும், எம்மை பற்றிக் கொண்ட மாயையின் இருள் கூட்டம் என்று எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து, அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும் எம்மை விட்டு நீக்கி விட்டு, தமது திருவடியை எம் தலைமேல் வைத்தருளினான் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன். அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும் விட்டு விட்டு அவனது திருவடியை எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்.