பாடல் #1302

பாடல் #1302: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமு
மூணு முணர்வு முறக்கமுந் தானாயக்
காணுங் கனகமுங் காரிகை யாமே.

விளக்கம்:

பாடல் #1301 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் கண்டு உணர்ந்து கொண்ட பேருண்மையான பரம்பொருளே அவர்களின் எண்ணத்திற்கு ஏற்றபடியான வடிவங்களைக் கொண்ட தெய்வமாக அவர்களுக்குள் வீற்றிருக்கின்றார். தமது உடலுக்குள் பரம்பொருளே தெய்வமாக வீற்றிருப்பதால் சாதகர்கள் முறையாகப் பேணிப் பாதுகாக்கின்ற உடலும் அதனால் சாதகர்களுக்குள் ஊற்றெடுத்துப் பெருகுகின்ற அமிழ்தமும் சாதகர்களின் ஆன்மா நுகர்கின்ற இன்பமும் அதனால் கிடைக்கின்ற பேரின்ப உணர்வும் அந்த உணர்விலேயேஎ இலயித்து இருகின்ற நிலையும் இந்த நிலையை அடைந்ததும் அவர்கள் காணும் படி தானாகவே பொன் போல மாறுகின்ற உடலும் ஆகிய இவை அனைத்துமே சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியின் அருளால் கிடைக்கின்ற பேறுகள் ஆகும்.

கருத்து: சாம்பவி மண்டலச் சக்கர சாதகத்தை செய்கின்ற சாதகர் பேருண்மையான பரம்பொருளைத் தமக்குள் கண்டு உணர்ந்து இறைவன் வீற்றிருக்கும் தமது உடலையே கோயிலாக எண்ணிப் பேணிப் பாதுகாத்து உள்ளிருக்கும் இறைவனைப் போற்றி வணங்கி வழிபடும் போது அவரது ஆன்மா இன்பத்தை நுகருகின்றது. அதன் பிறகு அவருக்குள் அமிழ்தம் ஊற்றெடுக்கின்றது. அந்த அமிழ்தத்தைப் பருகியப் பேரின்ப உணர்விலேயே சாதகர் இலயித்து இருக்கும் போது அவரின் உடல் பொன் போல மாறி என்றும் அழியாத நிலை பெறுகின்றது. இவை அனைத்தும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியினால் அவருக்கு கிடைக்கின்றது.

பாடல் #1303

பாடல் #1303: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோகா
னால்நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மே லொருவர் பகையில்லை தானே.

விளக்கம்:

பாடல் #1302 இல் உள்ளபடி சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற சக்தியின் அருள் பெற்ற சாதகர்கள் பாடல் #1300 இல் உள்ளபடி அசபையாக உச்சரிக்கின்ற ‘சிவாய நம’ எனும் மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே இறைவனை நோக்கி சாதகரின் எண்ணங்களை எடுத்துச் செல்லும் வழியாக இருக்கின்றன. சாதகர்கள் தன்னுடைய எண்ணங்களை சிந்தனை போகும் போக்கில் போக விடாமல் சிவாயநம என்னும் எழுத்துக்களின் வழியாக இறைவனை நோக்கிச் செலுத்திக் கொண்டே இருந்தால் சாதகர்கள் நினைக்கின்ற அனைத்தையும் செயலாக்க முடியும். அதன் பிறகு உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

கருத்து: சாதகர் தனக்குள் தோன்றும் எண்ணத்தின் வழி செல்லாமல் தான் அசபையாக உச்சரித்துக் கொண்டிருக்கும் சிவாயநம மந்திரத்துடன் தனது எண்ணங்களை செலுத்தினால் இந்த உலகத்தில் சாதகர் நினைக்கின்ற அனைத்தையும் அவர் செயலாக்க முடியும்.

பாடல் #1304

பாடல் #1304: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

பகையில்லை யென்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாளும் நன்மைக ளாகும்
வினையில்லை யென்றும் விருத்தமு மில்லைத்
தகையில்லைத் தானுஞ் சலமது வாமே.

விளக்கம்:

பாடல் #1303 இல் உள்ளபடி உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். இறைவனை வணங்கித் தொழுகின்ற சாதகருக்கு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகத்தால் நன்மை தீமைகள் எதுவும் இல்லை. அனைத்து நாட்களும் அவருக்கு நன்மையான நாட்களாகவே இருக்கும். நல்வினை தீவினை ஆகிய எதுவுமே அவருக்கு இல்லாமல் போய்விடும். இனி எப்போதும் புதியதாக வினைகள் எதுவும் வந்து சேராது. தமது சாதகத்திற்கு தடைகள் எதுவும் இல்லாமல் தாமும் தடை இல்லாமல் உலக நன்மைக்காகச் சுழற்சியாகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கின்ற நிலையை அடைந்து விடுவார்.

பாடல் #1305

பாடல் #1305: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆரு முரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரு மறியாத வானந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலு மதியதி
யூனு முயிரு முணர்வது வாமே.

விளக்கம்:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரமாகிய ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்துக்களை யாரும் அசபையாக உச்சரிக்கலாம். அதை முறைப்படி உச்சரித்து சாதகம் செய்பவர்களுக்கு யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத பேரின்ப உருவமாக இருக்கின்ற சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்ட சாதகர்களுக்கு உலகமாகவும் ஆகாயமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் பாடல் #1302 இல் உள்ளபடி பொன் போன்ற உடலாகவும் உயிராகவும் உணர்வாகவும் அந்த சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப உருவமே இருக்கின்றது.

பாடல் #1306

பாடல் #1306: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளே
யணைந்தெழு மாங்கதி யாதிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்
கணந்தெழுங் காணு மக்காமுகை யாமே.

விளக்கம்:

பாடல் #1305 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் சாம்பவி மண்டலச் சக்கரத்தை பேரின்ப உருவமாக உணரும் பொழுது அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் என்று நீட்டி உச்சரிக்கும் ஓங்காரத்தின் ஓரெழுத்திலேயே அடங்கி விடும். அப்போது சாதகரோடு சேர்ந்து எழுகின்ற ஓங்காரமே சாதகர் சென்று அடையும் கதி மோட்சமாகவும் அவர் ஆரம்பித்த ஆதி மூலமாகவும் இருக்கின்றது. இதை சாதகர் முழுவதுமாக உணரும் போது இதுவரை அவருக்குள் மாயையால் மறைந்து விளையாடிக் கொண்டு இருந்த இறைவனும் இறைவியும் மாயை நீங்கி வெளிப்பட்டு சாதகரோடு ஒன்றாகக் கலந்து சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப வடிவமாகவே இருப்பார்கள். அதன் பிறகு சாதகரும் அந்த பேரின்பத்திலேயே இறைவனோடும் இறைவியோடும் என்றும் இலயித்து இருப்பார்.

கருத்து:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் அவருக்குள் ஓங்காரத்தின் ஓரெழுத்தாகவே சேர்ந்து எழும் போது சாதகர் சாம்பவி மண்டலச் சக்கரமாகவே ஆகி அதில் இருக்கும் இறைவனோடும் இறைவியோடும் கலந்து அதிலேயே இலயித்து இருப்பார்.

பாடல் #1291

பாடல் #1291: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

அறிந்த பிரதமை யோடாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடவே.

விளக்கம்:

உலக நடப்பில் அறிந்து கொண்ட சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிக்கும் திதிகளில் முதல் திதியாகிய பிரதமையோடு துவிதியை திருதியை சதுர்த்தி பஞ்சமி சஷ்டி ஆகிய ஐந்து திதிகளையும் சேர்த்து மொத்தம் ஆறு திதிகளையும் அவை வருகின்ற கால அளவுகளையும் அறிந்து கொண்டு அந்த திதிகளில் ஏழாவதான சப்தமி திதியிலிருந்து அதற்கு மேல் இருக்கும் ஒன்பது திதிகளில் சிறப்பில்லாத சப்தமி நவமி ஏகாதசி திரயோதசி ஆகிய திதிகளை விட்டு விட்டு சிறப்பான அஷ்டமி தசமி துவாதசி சதுர்த்தசி ஆகிய நான்கு திதிகளுடன் முதல் ஆறு திதிகளையும் சேர்த்து மொத்தம் பத்து திதிகளிலும் மூச்சுக் காற்றை வலது நாடியின் வழியாக உள்ளிழுத்து வெளிவிட்டு பைரவரை நினைத்து வழிபடலாம்.

வளர்பிறை திதிகள்:

  1. பிரதமை
  2. துவிதியை
  3. திருதியை
  4. சதுர்த்தி
  5. பஞ்சமி
  6. சஷ்டி
  7. சப்தமி
  8. அஷ்டமி
  9. நவமி
  10. தசமி
  11. ஏகாதசி
  12. துவாதசி
  13. திரயோதசி
  14. சதுர்த்தசி
  15. பெளர்ணமி

தேய் பிறை திதிகள்: மேலுள்ள முதல் 14 திதிகளுடன் சேர்ந்து அமாவாசையில் முடிவது.

பாடல் #1292

பாடல் #1292: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.

விளக்கம்:

பாடல் #1291 இல் உள்ளபடி குறிப்பிட்ட திதிகளில் முறைப்படி தியானம் செய்து பைரவரை மானசீகமாக வழிபடும் போது திரிசூலத்தையும் கபாலத்தையும் தமது திருக்கைகளில் ஏந்திக் கொண்டு சாதகருக்குள்ளிருந்து பைரவர் வெளிப்பட்டு இதுவரை சாதகர் கடந்து வந்த அனைத்து தீய கர்மங்களையும் தமது திருக்கண்களால் சுட்டெரித்து அழித்து அருள்வார். அதன் பிறகு இனி வரும் தீய சக்திகளும் சாதகரை பாதிக்காதவாறு தடுத்துக் காப்பாற்றும் சக்கர அமைப்பை சாதகரைச் சுற்றி படர்ந்து இருக்கும் படி செய்து அருள்வார். இனி சாதகர் தமது வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அவரைச் சுற்றி படர்ந்து இருக்கும் சக்கர அமைப்பின் மூலம் இனி வரும் தீய கர்மங்களையும் நெருங்க விடாமல் பந்தாடி சாதகரால் விரட்ட முடியும்.

பாடல் #1293

பாடல் #1293: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவ
னாமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

விளக்கம்:

பாடல் #1292 இல் உள்ளபடி சாதகரைச் சுற்றிப் படர்ந்து சாதகர் தரித்து இருக்கும் பைரவச் சக்கரமானது ஆதி மூலமாகிய பைரவர் கொடுத்து அருளியது. பைரவரது அருளானது பைரவச் சக்கரத்தை தரித்த சாதகரின் கைகளில் சூட்சுமமாக இறப்பில்லாத தன்மையை அருளும் கபாலமாகவும் தீய சக்திகளை தடுத்து நிற்கும் திரிசூலமாகவும் நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளையுமே சேர விடாமால் இரண்டு பக்கமும் வருகின்ற நாதத்தால் காத்து அருளுகின்ற தமருகமாகவும் உலகப் பற்றுக்களை அறுக்கின்ற பாசக் கயிறாகவும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழிக்கின்ற சிரமாகவும் இனி வரும் பிறவிகளையும் அறுக்கின்ற வாளாகவும் இருக்கின்றது.

கருத்து: பைரவர் அருளால் சாதகர் பெற்ற பைரவச் சக்கரத்தின் மூலம் சாதகர் இறப்பில்லாத தன்மையையும் தீய சக்திகளை அண்ட விடாமல் தடுத்தும் பிறவி எடுப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளுமே இருக்கக்கூடாது என்பதனால் அதை தடுத்தும் உலகப் பற்றுக்களை நீக்கியும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழித்தும் ஏற்கனவே இருக்கின்ற கர்மங்களினால் இனி எடுக்க வேண்டிய பிறவிகளை அறுத்தும் பயன் பெறுகிறார்.

பாடல் #1294

பாடல் #1294: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

கையவை யாறுங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

விளக்கம்:

பாடல் #1293 இல் உள்ளபடி சாதகரிடம் சூட்சுமமாக இருக்கின்ற ஆறு கைகளிலும் ஏந்தி இருக்கின்ற பைரவர் கொடுத்து அருளிய ஆறு ஆயுதங்களையும் எண்ணத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால் சாதகரின் உடலுக்குள்ளேயே வந்து செம்மையான அருள் வடிவமாக வீற்றிருக்கும் பைரவரை அறிந்து கொள்ளலாம். அதன்படி சாதகருக்குள் வந்து வீற்றிருக்கின்ற பைரவர் தமது தூய்மையான அருளை சாதகருக்குக் கொடுத்து அவருக்குள் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கி பேருண்மையாக விளங்குகின்ற பரம்பொருளை உணரும்படி அருள்வார். அதன் பிறகு பொய்யான மாயை அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிட்டு சாதகர்கள் பைரவரை பூஜித்து வழிபாடு செய்வார்கள்.

பாடல் #1295

பாடல் #1295: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

விளக்கம்:

பாடல் #1294 இல் உள்ளபடி பைரவரை பூஜித்து வழிபடுவதற்கு அவருக்கு ஏற்ற மந்திரத்தை ஒரு ஆயிரம் முறை மானசீகமாக உச்சரிக்க வேண்டும். தூய்மையான தேனாலும் நீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் ஜவ்வாது புனுகு ஆகிய நறுமணம் வீசும் பொருட்களை பூச வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வழிபட்ட பிறகு திருநீறு எடுத்து பூசிக் கொள்ள வேண்டும்.