பாடல் #277

பாடல் #277: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவென் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

விளக்கம்:

உண்மையான அன்புகொண்டு இருப்பவர்களின் எண்ணத்தில் இறைவன் தூய்மையான தங்கம் போன்ற பிரகாசத்துடன் பேரொளி வீசும் சூரியனின் ஜோதியாக வீற்றிருப்பான். ஜோதி உருவத்தில் இருக்கும் இறைவனை எம்பெருமானே இறைவா என்று உருகி யாரொருவர் வேண்டினாலும் விண்ணுலகத்திலிருக்கும் தேவர்களுக்கெல்லாம் அரசனாக இருக்கும் இறைவன் அவர்கள் வேண்டியதை உடனே வழங்கிவிடுவான்.

பாடல் #278

பாடல் #278: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகின்றி லாரே.

விளக்கம்:

தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்ற பிறப்பைக் கொடுத்த இறைவனே உயிர்களிடம் உள்ள பெருங் கருணையினால் அவர்கள் அந்த பிறப்பிலிருந்து வெளிவரும் அன்பையும் கொடுத்திருக்கின்றான். இதைத் தெரிந்து கொண்டாலும் மனிதர்கள் தங்களின் அன்பை உலகப் பற்றுகளின் ஆசையின் மேல்தான் வைக்கின்றார்களே தவிர எம்மைப் படைத்த தந்தையே எம்பெருமானே என்று இறைவனின் மேல் அன்பை வைத்து அவனை அடையும் வழியைத் தேடாமல் இருக்கின்றனர்.

பாடல் #279

பாடல் #279: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளாருக்கே அணைதுணை யாமே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்தில் தூய்மையான அன்பாக இருக்கும் இறைவனே வெளியே உடலாகவும் இருக்கின்றான். அவன் உலகத்தோற்றத்திற்கு முன்பே இருப்பவன். உலக அழிவிற்கு பின்னும் அழியாமல் இருப்பவன். இறைவனை அடைய அனைத்துவித பற்றுக்களையும் விட்ட முனிவர்களுக்கு தலைவன் அவன். தூய்மையான அன்பினுள் வந்து அமரும் அரிய பொருளான இறைவன் அன்பினை உள்ளத்தில் வைத்திருக்கும் உயிர்களுக்கு காக்கும் துணையாக எப்போதும் இருப்பான்.

பாடல் #260

பாடல் #260: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயனுமறி யாரே.

விளக்கம்:

எட்டிக்காயின் கனி பழுத்து பெரிதாகி தானாக நிலத்தில் விழுந்தாலும் அது விஷத்தன்மை கொண்டு இருப்பதால் யாருக்கும் உணவாக உதவாது. அதுபோலவே நல்ல தருமத்தோடு இணைந்த புண்ணிய செயல்களைச் செய்யாதவர்களின் செல்வமும் யாருக்கும் உதவாது. உலகத்திலுள்ள உயிர்களிடம் வட்டி மேல் வட்டி போட்டு அவர்களை ஏமாற்றிப் பெரும் செல்வம் சம்பாதிக்கும் நீதிநெறி இல்லாத பாதகர்களுக்கு அவர்கள் சம்பாதித்த செல்வமும் நிலைக்காமல் அதன் உண்மையான பயனை அறியமாட்டார்கள்.

பாடல் #261

பாடல் #261: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயிக்
கழிந்தன கற்பனை நாளும் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

விளக்கம்:

காலங்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. ஓடிய காலங்கள் பல யுகங்களாக மாறி ஊழிக்காலத்தில் அழிந்தும் போகின்றது. உயிர்கள் தம் கற்பனையில் கட்டிய மனக்கோட்டைகளும் அவை வாழும் நாட்களும் குறைந்துகொண்டே சென்று கடைசியில் பெரிய துயரத்தையே தரும் உடலானது சக்கையாகப் பிழிந்து எடுக்கப்பட்டது போல வயதாகிச் சுருங்கிப் போய் ஒரு நாள் முழுவதுமாக அழிந்தும் போகின்றது. இதையெல்லாம் கண்கூடாக தினமும் பார்தாலும் தங்கள் வாழ்க்கையும் அழிந்து போய்விடும் என்பதை அறியாமல் வாழும் நாட்களில் செய்ய வேண்டிய தான தருமங்களை அறியாமலேயே பல உயிர்கள் வீணாக வாழ்ந்து அழிந்து போகின்றன.

பாடல் #262

பாடல் #262: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

விளக்கம்:

தருமங்கள் என்னவென்பதை அறியாத உயிர்களுக்கு இறைவனின் திருவடிகளை நினைத்து வணங்கும் முறையும் தெரியாது. ஆதலால் அவர்களுக்கு சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்திற்குச் செல்லும் வழியும் தெரியாது. பலர் தம்மிடம் பொய்யாக கூறிய விஷயங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு பாவத்தை மட்டுமே அறிந்தவர்களாகவும் அறமில்லாத வீரத்தில் மற்றவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டவர்களாகவும் மட்டுமே வாழ்ந்து துயரப்படுகின்றனர்.

பாடல் #263

பாடல் #263: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.

விளக்கம்:

மார்புச் சளியால் வரும் இருமல் இரத்தக் குறைவால் வரும் இரத்த சோகை சளியால் வரும் காச நோய் அதிக சூட்டினால் வரும் உபாதைகள் (சுரம் போன்றவை) போன்ற அனைத்துவிதமான நோய்களும் தருமம் செய்யாமல் வாழுகின்ற உயிர்களைத் தேடி வரும். அதே சமயம் உயிர் பயத்தைத் தரக்கூடிய இடிச்சத்தமும் நாகப் பாம்பும் வாதத்தால் வரும் தொண்டை வீக்கமும் வயிற்றுக்கட்டியால் வரும் கழலை நோயும் இன்னும் பல இன்னல்களைத் தரும் நோய்களும் தருமம் செய்து வாழுகின்றவர்களின் வாழ்க்கையில் வந்து சேராமல் ஒதுங்கிவிடும்.

பாடல் #264

பாடல் #264: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

பரவப் படுவார் பரமனை ஏத்தார்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.

விளக்கம்:

உயிர்களெல்லாம் வணங்கித் தொழும் பரம்பொருளான இறைவனை வணங்கித் தொழாதவர்கள் தர்மம் கேட்டு வருகின்றவர்களுக்கு தம்மிடம் மீதமிருப்பதிலிருந்தும் ஈ யின் தலையளவு கூட தர்மம் கொடுக்காதவர்கள் செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றை வளர்க்காதவர்கள் ஆகிய இவர்கள் தங்களை நல்லவர்கள் என்று தன்னைத்தானே எண்ணிக்கொண்டு இருப்பார்கள் இவர்கள் இறந்தபின் நரகத்தில்தான் சென்று நிற்பார்கள்.

பாடல் #265

பாடல் #265: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

விளக்கம்:

தர்ம வழியில் நடப்பவர் மட்டுமே விண்ணுலகத்திற்கு செல்லமுடியும். வேறு யாரும் செல்ல முடியாது. தரும வழியில் இல்லாமல் ஆசை வழிகளிலேயே நடப்பவர்கள் இருள் சூழ்ந்த உலகமான நரகத்திற்குத்தான் செல்ல முடியும். ஆசைகளின் வழி தம்மை இழுத்துச் செல்லும் வினைகளையும் மும்மலங்களையும் இறைவனது திருவருளால் நிக்கிவிட்டு தாம் கொண்ட தர்மநெறியில் நடப்பவர்கள் தாம் பிறந்த பிறவிக்கும் இன்னும் பிறக்கப் போகும் பல பிறவிகளுக்கும் நல்ல வினைகளை அதிகமாக சேர்த்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள்.

பாடல் #266

பாடல் #266: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

விளக்கம்:

அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்து எல்லா உயிர்களையும் இறைவனாக எண்ணி அன்பு செலுத்துபவர்கள் ஈசன் கழல் அணிந்த திருவடிகளை தரிசிப்பார்கள். அனைத்து உலகப் பற்றுக்களையும் விடத்துணிந்து இறைவனை மட்டுமே பற்றிக்கொண்டு தவம் புரியத் துணிந்தவர்கள் ஈசன் இருக்கும் கைலாசத்தை ஆளுவார்கள் (சிவகணங்கள் போல). தருமம் தவம் என்ற இந்த இரண்டு வழிகளிலும் எதையும் செய்யாதவர்கள் தாம் இறக்கும்போது துணைக்கு இறைவனும் வராமல் தருமங்களும் வராமல் எந்த துணையுமின்றி தமது வாழ்க்கையில் கொண்ட ஆணவத்திலும் கோபத்திலுமே மூழ்கி அழிந்து போய்விடுவார்கள்.