பாடல் #1398: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
சூலந்தண் டொள்வாள் சுடர்பரை ஞானமாய்
வேலம்பு தமாக மாகிளி விற்கொண்டு
கோலம்பு பாசம் மழுக்கத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை யெண்ணதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சூலநதண டொழவாழ சுடரபரை ஞானமாய
வெலமபு தமாக மாகிளி விறகொணடு
கொலமபு பாசம மழுககததி கைககொணடு
கொலஞசெர சஙகு குவிநதகை யெணணதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பரை ஞானம் ஆய்
வேல் அம்புதம் ஆக மா கிளி வில் கொண்டு
கோல் அம்பு பாசம் மழு கத்தி கை கொண்டு
கோலம் சேர் சங்கு குவிந்த கை எண் அதே.
பதப்பொருள்:
சூலம் (திரிசூலமும்) தண்டு (தண்டாயுதமும்) ஒள் (கூர்மையான) வாள் (வாளும்) சுடர் (சுடர்வீசும் நெருப்பும்) பரை (பேரறிவு) ஞானம் (ஞானத்தை வழங்கும்) ஆய் (திருக்கரங்களாகவும்)
வேல் (வேலாயுதமும்) அம்புதம் (கோரைப் புல்) ஆக (ஆகவும்) மா (மானும்) கிளி (கிளியும்) வில் (வில்லும்) கொண்டு (திருக்கரங்களில் ஏந்திக் கொண்டு)
கோல் (கோலும்) அம்பு (அம்பும்) பாசம் (பாசக் கயிறும்) மழு (மழுவும்) கத்தி (கத்தியும்) கை (திருக்கரங்களில்) கொண்டு (ஏந்திக் கொண்டு)
கோலம் (அழகிய வடிவத்தோடு) சேர் (சேர்ந்தே இருக்கின்ற) சங்கு (சங்கும்) குவிந்த (அபயம் கொடுக்கின்ற குவிந்த) கை (திருக்கரங்கள் இரண்டும் அதனுடன் மேல் நோக்கி முக்தியையும் கீழ் நோக்கி சரணாகதியையும் குறிக்கின்ற விரல்களை நீட்டி இருக்கின்ற இரண்டு திருக்கரங்களும் கொண்டு) எண் (இருக்கின்ற இறைவியை எண்ணிக்கொண்டே) அதே (இரு அதையே).
விளக்கம்:
பாடல் #1397 இல் உள்ளபடி தனது திருக்கரங்களை சாதகருக்குள் கொடுத்து சாதகருக்கும் உணர்வுகளுக்குமான பந்தத்தை அறுக்கும் படி பரந்து விரிந்து சாதகரை சுற்றி அருளுகின்ற இறைவியானவள் தனது இருபது திருக்கரங்களிலும் 1. திரிசூலமும் 2. தண்டாயுதமும் 3. கூர்மையான வாளும் 4. சுடர்வீசும் நெருப்பும் 5. பேரறிவு ஞானமும் 6. வேலாயுதமும் 7. கோரைப் புல்லும் 8. மானும் 9. கிளியும் 10. வில்லும் 11. கோலும் 12. அம்பும் 13. பாசக் கயிறும் 14. மழுவும் 15. கத்தியும் 16. தனது அழகிய வடிவத்தோடு சேர்ந்தே இருக்கின்ற சங்கும் 17 & 18. அபயம் கொடுக்கின்ற குவிந்த திருக்கரங்கள் இரண்டும் 19. மேல் நோக்கி முக்தியை குறிக்கின்ற விரலை நீட்டியும் 20. கீழ் நோக்கி சரணாகதியையும் குறிக்கின்ற விரலை நீட்டியும் இருக்கின்ற திருக்கரங்களை கொண்டு இருக்கின்றாள். இப்படி தம்மைச் சுற்றி பாதுகாப்பாக இருபது கரங்களில் இருபது விதமான ஆயுதங்களை ஏந்தி நிற்கும் இறைவியை சாதகர் எண்ணி தியானித்துக் கொண்டே இருக்க வேண்டும்.