பாடல் #977: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடக்கவல் லார்கட்கே
அஞ்சாதி யாதி அகம்புக லாமே.
விளக்கம்:
உடல் எனும் காட்டிற்குள் ஐந்து புலன்களாகிய யானைகள் வாழ்கின்றது. இந்து ஐந்து யானைகளையும் கட்டுப் படுத்தும் அங்குசமாக இருப்பது ஐந்தெழுத்து ‘நமசிவாய’ மந்திரமாகும். இந்த மந்திரத்தின் மூலம் ஐந்து புலன்களாகிய யானைகளை அடக்க முடிந்த சாதகர்களுக்கு ஐந்தெழுத்தின் அதிபதியாகிய இறைவனை அறிந்து தமக்குள் இருக்கும் இறைவனை அறிந்து கொள்ளலாம்.