பாடல் #1160 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்திற்குள் புகுந்து பேரின்பத்தில் வீற்றிருக்கும் இறைவி என்றும் இளமையுடன் இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற மனோன்மணியானவள் தன்னுடைய பெண் தன்மையில் இறைவனின் ஆண் தன்மையையும் சேர்த்து உலகங்கள் அனைத்திற்கும் பரவி நின்று அருள் பாலிக்கின்றாள். இவள் உலக இயக்கத்திற்கு தலைவியாகவும் வேதங்களின் தலைவியாகவும் இறைவனோடு கலந்து நின்று அருள் புரியும் விதத்தை தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொண்ட சாதகர்கள் அவர்களோடு சேர்ந்து தாமும் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.
பாடல் #1161 இல் உள்ளபடி இறைவியோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற சாதகன் தனது சாதகத்தில் முழுமையை அடைந்த பிறகு தமது ஆக்ஞா சக்கரத்தில் ஒளி பொருந்திய நெற்றிக் கண்ணாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தைப் பெறுகின்றான். அந்தப் பேரறிவு ஞானத்தை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலருக்குள் புகுந்து செல்லும்படி செலுத்தி அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாங்கியிருக்கும் இறைவியின் தோளோடு தன் தோளையும் சேர்த்து தாங்கி நிற்கின்றான்.
திண்ணிய முலைகளையும் சங்கு போல வளைந்து செதுக்கியது போன்ற இடுப்பையும் விருப்பத்திற்கு ஏற்ப பாம்பின் தலை போல விரித்து சுருங்கும் உடலையும் தூய்மையாக சொல்கின்ற இதழ்களையும் மயிலின் இறகு போன்ற மென்மையான திருவடிகளையும் பேரழகு பொருந்திய பெண் அம்சத்தையும் கொண்டு இருக்கும் சக்தியாக சாதகரே மாறி இறைவியோடு கலந்து இருக்கும் தன்மையை எம்மால் வார்த்தைகளில் விவரித்து சொல்ல இயலாது.
கருத்து:
பாடல் #1162 இல் உள்ளபடி இறைவியோடு சேர்ந்து இருந்து உலகத்தை தாங்கிக் கொண்டிருக்கும் இறைவியின் காரியங்களைச் செய்யும் சாதகர்கள் இறைவியின் அம்சங்களோடு வீற்றிருந்து செய்கின்ற நிலையை எம்மால் விவரித்து சொல்ல இயலவில்லை என்று அருளுகிறார்.
தத்துவ விளக்கம்:
இறைவியின் அம்சங்களில் திண்ணிய முலைகள் என்பது உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கும் அமிழ்தப் பால் நிறைந்து இருப்பதைக் குறிக்கும். சங்கு போல வளைந்து செதுக்கியது போன்ற இடுப்பு என்பது அண்ட சராசரங்களையும் அதனதன் தன்மைக்கேற்ப தாங்கி இருப்பதைக் குறிக்கும். பாம்பின் தலை போல சுருங்கி விரியும் உடல் என்பது உலகங்கள் அனைத்தையும் தாங்கும் போது தேவைக்கு ஏற்ப தனது உருவத்தை விரிக்கவும் சுருக்கவும் கூடியவளாக இருப்பதைக் குறிக்கும். மயிலின் இறகு போன்ற மென்மையான திருவடிகள் என்பது அடியவர்களின் மனதை இனிமையாக வருடி அருளுவதைக் குறிக்கும். பேரழகு பொருந்திய பெண் என்பது அனைத்தையும் பெண் தன்மையில் இருந்து இறைவியின் சக்தி செயலாற்றுவதைக் குறிக்கும்.
வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாத அரும்பெரும் ஜோதியாக இருக்கும் இறைவனிடமிருந்து வெளிப்படும் கனிந்த நெருப்புத் தணல் பொதிந்து உள்ள பரவெளி மண்டலத்தில் பாடல் #1163 இல் உள்ளபடி இறைவியின் நிலையை அடைந்த சாதகர்கள் அந்த தணலின் வெப்பத்தை அனுபவித்து சொல்ல முடியாத திகைப்பில் அங்கேயே இருப்பார்கள். அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களும் இயங்குவதற்கு காரணமாகவும் எளிதில் வெற்றி கொள்ள முடியாததாகவும் இருக்கின்ற வினைகளை தனித்திருந்து ஆளுகின்ற பெருந்தலைவியாகிய இறைவியே எளிதில் அடைந்து விட முடியாத மனோன்மணி எனும் சிவசக்தியாக இருக்கிறாள்.
பாடல் #1165: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் தானே வடவரைத் தண்கடற் கண்ணே.
விளக்கம்:
பாடல் #1164 இல் உள்ளபடி மனோன்மணி எனும் சிவசக்தியே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு வகையான உலகங்களையும் (பாடல் #1153 இல் உள்ளபடி மேலுலகம் கீழுலகம் என்று இரண்டு வகையில் மொத்தம் 14 உலகங்கள் இருக்கின்றன) அண்ட சராசரங்களில் விரிந்திருக்கும் ஆகாயமாகவும் உயிர்களுக்கு வெப்பத்தை தருகின்ற நெருப்பாகவும் உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் தருகின்ற சூரியனாகவும் இரவில் குளிர்ச்சியான ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மழையைப் பொழிய வைக்கின்ற மேகங்களாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கும் மலைகளாகவும் குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கும் கடல்களாகவும் இருந்து அனைத்தையும் தனது அருட் பார்வையினாலேயே செயல்படுத்துகின்றாள்.
பாடல் #1165 இல் உள்ளபடி அனைத்தையும் தனது அருட் பார்வையினால் செயல்படுத்துகின்ற இறைவியோடு சேர்ந்து அவளிருக்கும் இடத்திலேயே வீற்றிருக்கும் பேறு பெற்ற சாதகர்கள் மண்ணுலகத்தை தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களோடு ஒன்றாக சேர்ந்து இருக்காமல் தனித்திருந்து உண்மை ஞானத்தை உணர்ந்த பண்பைக் கொண்டவர்களாக இருப்பதால் மண்ணுலகத்தில் நிகழும் எதனாலும் பாதிக்கப்படாமல் விண்ணுலகத்தை தமது இருப்பிடமாகக் கொண்ட தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர்களை தமது ஞானத்தால் கண்டு கொண்டே இருப்பார்கள்.
பாடல் #1166 இல் உள்ளபடி ஞானத்தால் தரிசனம் செய்து கொண்டே இருக்கின்ற சாதர்களோடு எட்டு திசைகளிலும் கூடவே சேர்ந்து வருகின்ற என்றும் இளமையான இறைவியானவள் ஆதியிலிருந்தே எட்டு திசைகளிலும் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டு வீற்றிருக்கின்றாள். இதை செய்து கொண்டு விண்ணகத்தில் இருக்கும் இறைவியின் நிலையை அடைந்த சாதகர்களை எட்டு திசையிலும் இருக்கின்ற உயிர்கள் நறுமணம் வீசும் மலர்கள் தூவி அர்ச்சித்து தொண்டு செய்து எட்டுத் திசையெங்கும் அவர்களை வணங்கி நிற்கும்படி அருளுகின்றாள் என்றும் இளமையான இறைவி.
பாடல் #1167 இல் உள்ளபடி அனைவரும் வணங்கும் அளவிற்கு என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியால் அருளப்பட்ட சாதகர் பேரொளியாக இருக்கும் இறைவியிடமிருந்தே எவ்வாறு சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று இரவில் நிலா பிரகாசிக்கிறதோ அது போலவே இறைவியாகிய அருட் பேரொளியிடமிருந்து தாம் ஒளியாகிய அருளைப் பெறுவதையும் அந்த அருள் நிரப்பப்பட்டதால் மாளிகை போல இருக்கும் தமது உடல் முழுவதும் அருள் நிறைந்து இருக்கின்றார். அதன் பிறகு தமது தலை உச்சியில் உள்ள சகஸ்ரதள ஜோதியோடு உடல் முழுவதும் உள்ள பதினாறு கலைகளையும் (பாடல் #713 இல் காண்க) ஒன்று சேர்த்து தமக்குள் இருக்கும் அருளைக் கொண்டு அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டே இருப்பதால் ஆதிப் பரம்பொருளான பராசக்தியாகவே சாதகர் ஆகிவிடுகின்றார்.
பாடல் #1168 இல் உள்ளபடி பராசக்தியாகவே ஆகிவிடுகின்ற சாதகர் அந்த பராசக்தியின் பலவித அம்சங்களில் பல வகையான உலக இயக்கங்களை செய்து கொண்டு இருக்கும் போது அவருக்கு அருளைத் தருகின்ற சக்தியாக இருப்பது அனைத்திற்கும் தலையான பிரம்மம் என்று உணரப்படும் இறைவியாகும். இந்த இறைவியே இரா சக்தி என்று யாமள ஆகமத்தில் அழைக்கப்படுகிறாள். குருவாக வந்து அருளுகின்ற இவளது பலவிதமான திருக்கோலங்களை யாம் எமக்குள்ளே தரிசித்து உணர்ந்து கொண்டோம்.
பாடல் #1169 இல் உள்ளபடி பலவிதமான திருக்கோலங்களில் எமக்குள்ளே உணர்ந்த பராசக்தியாகிய இறைவியே இறைவனை உணர்வதற்கு உயிர்கள் பிறவி எடுக்கும் ஏழு உலகங்களிலும் இறைவனை அறிவதற்காக செய்யும் யோகங்களுக்கெல்லாம் தலையான சக்தியாக இருக்கின்றாள். எமது உயிருக்கு உயிராக எம்மோடு கலந்து இருக்கும் உன்னதமான இறைவனை யாம் உணர்ந்து அவருடன் கலந்து பல காலம் இருந்து உச்ச நிலையை அடைந்த ஒரு சமயத்தில் பேரின்பத்தை யாம் பெற்று அனுபவித்தோம். அப்போது எம்மோடு கலந்து இருக்கும் இறைவனோடு ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் பராசக்தியாகிய இறைவியும் கலந்து பரம்பொருள் ஆகி நின்று இறைவன் இறைவி யாம் என்கிற தனித்தன்மைகள் இல்லாமால் ஒரே பொருளாகி இருக்கின்றோம்.