பாடல் #139

பாடல் #139: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

விளக்கம்:

குருவின் திருமேனியைத் தரிசித்து அவரது உருவத்தைத் தமது உருவமாகவே எண்ணி தியானிப்பதும் குருவின் திருநாமத்தை மந்திரமாக சொல்லிக்கொண்டே தியானிப்பதும் குருவின் திருவார்த்தைகளைத் தமக்குள்ளே கேட்டு உணர்வதும் எப்போதும் குருவின் திரு உருவத்தைத் தம் மனதிற்குள் சிந்தித்து தியானிப்பதும் ஆகிய இந்த செய்கைகள் அனைத்தும் மும்மலங்களும் நீங்கித் தாம் யார் இறைவன் யார் என்பதைத் தமக்குள் உணர்ந்து தெளிகின்ற பேரறிவு ஞானத்தைக் கொடுக்கும்.

பாடல் #140

பாடல் #140: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தானே புலனைந்தும் தன்வச மாயிடும்
தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்
தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.

விளக்கம்:

குருவின் அருளால் இறைவனைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெறுபவர்களுக்குத் தானாகவே இதுவரை அவர்களை ஆட்டி வைத்திருந்த ஐந்து புலன்களும் அவர்களின் வசமாகும். அவ்வாறு அவர்களின் வசமான ஐந்து புலன்களும் அவைகளின் தனிப்பட்ட தன்மைகளை இழந்துவிடும். அவ்வாறு தனிப்பட்ட தன்மைகளை இழந்த ஐந்து புலன்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் விருப்பம் போல செயல்படுபவையாக மாறிவிடும். அவ்வாறு விருப்பம் போல செயல்படும் ஐம்புலன்களும் அவை மூலம் வந்த மலங்கள் முழுவதும் குருவின் திருவருளால் தாமாகவே அவர்களை விட்டு நீங்கி அவர்களின் ஆன்மா மட்டுமே இறைவனைச் சென்று சந்திக்கும்.

பாடல் #141

பாடல் #141: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளினை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

விளக்கம்:

குருவின் அருளினால் தமது அனைத்து மலங்களும் நீங்கிச் சென்று சந்திப்பது இறைவனின் திருவடிகளே ஆகும். எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியது இறைவனின் திருமேனியே ஆகும். உண்மையை மட்டுமே பேசுகின்ற வாயால் எப்போதும் வணங்கித் துதிக்க வேண்டியது இறைவனின் திருநாமமே ஆகும். நெஞ்சத்திலும் எண்ணத்திலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது குருநாதர் கூறிய பொன்னான போதனைகளே ஆகும்.

பாடல் #142

பாடல் #142: முதல் தந்திரம் – 1. உபதேசம்

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

விளக்கம்:

குருநாதர் கொடுத்த புண்ணியமான போதனைகளைத் தமது எண்ணத்தில் வைத்து அவற்றின் பொருளுணர்ந்து தமக்குள் தெளிவு பெற்றவர்கள் தாம் பெற்ற பிறவியின் புண்ணியத்தை அடைந்தவர்கள் ஆவார்கள். அப்படி புண்ணியம் பெற்றவர்கள் குருவின் திருவருளால் இறைவனின் திருநடனத்தைத் தமக்குள்ளே தரிசித்து பேரின்பம் கூடிவர வேதங்கள் துதிக்க விண்ணுலகத்திற்குச் சென்று இறைவனின் திருவடியைச் சேருவார்கள்.