பாடல் #1419: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)
ஊரு முலகமு மொக்கப் பணைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
மேருவு மூவுல காளியிலங் கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஊரு முலகமு மொககப பணைககினற
பெரறி வாழன பெருமை குறிததிடில
மெருவு மூவுல காழியிலங கெழுந
தாரணி நாலவகைச சைவமு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஊரும் உலகமும் ஒக்க பணைக்கின்ற
பேர் அறிவாளன் பெருமை குறித்திடில்
மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழும்
தாரணி நால் வகை சைவமும் ஆமே.
பதப்பொருள்:
ஊரும் (அனைத்து உயிர்களையும்) உலகமும் (அவை இருக்கின்ற உலகத்தையும்) ஒக்க (ஒன்றாக) பணைக்கின்ற (கலந்து நின்று இயக்குகின்ற)
பேர் (பேரறிவு) அறிவாளன் (ஞானமாக இருக்கின்ற இறைவனின்) பெருமை (பெருமைகளை) குறித்திடில் (குறித்து சொல்லப் போனால்)
மேருவும் (அனைத்து சக்திகளின் ஒன்றியமாகிய மேரு மலையயும்) மூ (மேலோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய முன்று) உலகு (உலகங்களையும்) ஆளி (ஆளுகின்ற இறைவனை) இலங்கு (தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி) எழும் (அவனிடமிருந்தே வெளிவந்து)
தாரணி (அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற) நால் (நான்கு) வகை (வகையான நெறிமுறைகளே) சைவமும் (சைவம்) ஆமே (என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்).
விளக்கம்:
அனைத்து உயிர்களையும் அவை இருக்கின்ற உலகத்தையும் ஒன்றாக கலந்து நின்று இயக்குகின்ற பேரறிவு ஞானமாக இருக்கின்ற இறைவனின் பெருமைகளை குறித்து சொல்லப் போனால் அனைத்து சக்திகளின் மொத்த உருவமாகிய மேரு மலையயும் மேலோகம் பூலோகம் பாதாள லோகம் ஆகிய முன்று உலகங்களையும் ஆளுகின்ற இறைவனை தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி அவனிடமிருந்தே வெளிவந்து அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற நான்கு வகையான நெறிமுறைகளே சைவம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்.
குறிப்பு: இறைவனை உணர்ந்து அடைவதற்கு அவனால் அருளப்பட்ட நான்கு விதமான நெறிமுறைகளே சைவம் ஆகும். அந்த சைவ நெறிமுறைகளை அறிந்து கொண்டவர்கள் சைவர்கள் ஆவார்கள்.