பாடல் #1419

பாடல் #1419: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

ஊரு முலகமு மொக்கப் பணைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
மேருவு மூவுல காளியிலங் கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஊரு முலகமு மொககப பணைககினற
பெரறி வாழன பெருமை குறிததிடில
மெருவு மூவுல காழியிலங கெழுந
தாரணி நாலவகைச சைவமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஊரும் உலகமும் ஒக்க பணைக்கின்ற
பேர் அறிவாளன் பெருமை குறித்திடில்
மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழும்
தாரணி நால் வகை சைவமும் ஆமே.

பதப்பொருள்:

ஊரும் (அனைத்து உயிர்களையும்) உலகமும் (அவை இருக்கின்ற உலகத்தையும்) ஒக்க (ஒன்றாக) பணைக்கின்ற (கலந்து நின்று இயக்குகின்ற)
பேர் (பேரறிவு) அறிவாளன் (ஞானமாக இருக்கின்ற இறைவனின்) பெருமை (பெருமைகளை) குறித்திடில் (குறித்து சொல்லப் போனால்)
மேருவும் (அனைத்து சக்திகளின் ஒன்றியமாகிய மேரு மலையயும்) மூ (மேலோகம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய முன்று) உலகு (உலகங்களையும்) ஆளி (ஆளுகின்ற இறைவனை) இலங்கு (தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி) எழும் (அவனிடமிருந்தே வெளிவந்து)
தாரணி (அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற) நால் (நான்கு) வகை (வகையான நெறிமுறைகளே) சைவமும் (சைவம்) ஆமே (என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்).

விளக்கம்:

அனைத்து உயிர்களையும் அவை இருக்கின்ற உலகத்தையும் ஒன்றாக கலந்து நின்று இயக்குகின்ற பேரறிவு ஞானமாக இருக்கின்ற இறைவனின் பெருமைகளை குறித்து சொல்லப் போனால் அனைத்து சக்திகளின் மொத்த உருவமாகிய மேரு மலையயும் மேலோகம் பூலோகம் பாதாள லோகம் ஆகிய முன்று உலகங்களையும் ஆளுகின்ற இறைவனை தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி அவனிடமிருந்தே வெளிவந்து அவனை அறிவதற்கு முயலுகின்ற அடியவர்களுக்கு ஆதார இடமாக இருக்கின்ற நான்கு வகையான நெறிமுறைகளே சைவம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியதாகும்.

குறிப்பு: இறைவனை உணர்ந்து அடைவதற்கு அவனால் அருளப்பட்ட நான்கு விதமான நெறிமுறைகளே சைவம் ஆகும். அந்த சைவ நெறிமுறைகளை அறிந்து கொண்டவர்கள் சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1420

பாடல் #1420: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

சத்து மசத்துஞ் சதசத்துந் தான்கண்டுஞ்
சித்து மசித்தையுஞ் சேர்வுறாமே நீத்துஞ்
சுத்த மசுத்தமுந் தோய்வுறாமே நின்று
நித்தம் பரசுத்த சைவர்க்கு நேயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதது மசததுஞ சதசததுந தானகணடுஞ
சிதது மசிததையுஞ செரவுறாமெ நீததுஞ
சுதத மசுததமுந தொயவுறாமெ நினறு
நிததம பரசுதத சைவரககு நெயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டும்
சித்தும் அசித்தையும் சேர்வு உறாமே நீத்தும்
சுத்தம் அசுத்தமும் தோய்வு உறாமே நின்று
நித்தம் பர சுத்த சைவர்க்கு நேயமே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையானதாகிய சிவமும்) அசத்தும் (நிலையில்லாததாகிய உடலும்) சத (நிலையில்லாத உடலுக்குள்) சத்தும் (நிலையாக நிற்கின்ற ஆன்மாவும்) தான் (ஆகிய இவை மூன்றையும்) கண்டும் (கண்டு உணர்ந்தும்)
சித்தும் (உலக அறிவும்) அசித்தையும் (அறியாமையும்) சேர்வு (சேர்ந்து) உறாமே (கலந்து விடாமல்) நீத்தும் (அதிலிருந்து விலகி இருந்தும்)
சுத்தம் (சுத்த மாயை) அசுத்தமும் (அசுத்த மாயை) தோய்வு (ஆகிய இரண்டிலும் மயங்கி) உறாமே (இல்லாமல்) நின்று (உண்மை ஞானத்தில் நின்றும்)
நித்தம் (எப்பொழுதும்) பர (பரம்பொருளாகிய இறைவனின்) சுத்த (அதி சுத்த நிலையில் இருப்பதே) சைவர்க்கு (சைவர்களின்) நேயமே (பேரன்பு ஆகும்).

விளக்கம்:

நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் ஆகிய இவை மூன்றையும் கண்டு உணர்ந்தும், உலக அறிவும் அறியாமையும் சேர்ந்து விடாமல் அதிலிருந்து விலகி இருந்தும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டிலும் மயங்கி விடாமல் உண்மை ஞானத்தில் நின்றும், எப்பொழுதும் பரம்பொருளாகிய இறைவனின் அதி சுத்த நிலையில் இருப்பதே சைவர்களின் பேரன்பு ஆகும்.

குறிப்பு: சைவ நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி சடங்குகளில் சிக்கிக் கொள்ளாமல் சம்பிரதாயங்களைக் கடந்து இறைவனிடம் அன்பு செலுத்துபவர்களே சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1421

பாடல் #1421: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோக
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கறபன கறறுக கலைமனனு மெயயொக
முறபத ஞான முறைமுறை நணணியெ
சொறபத மெவித துரிசறறு மெலான
தறபரங கணடுளொர சைவசித தாந்தரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கற்பன கற்று கலை மன்னும் மெய் யோகம்
முற் பதம் ஞான முறை முறை நண்ணியே
சொற் பதம் மேவி துரிசு அற்று மேலான
தற் பரம் கண்டு உளோர் சைவ சித்தாந்தரே.

பதப்பொருள்:

கற்பன (இறைவனை அடைய வேண்டியதற்கு கற்க வேண்டிய கல்விகள்) கற்று (அனைத்தையும் கற்றுக் கொண்டு) கலை (அதன் மூலம் பெற்ற கலை அறிவின்) மன்னும் (மிகவும் உன்னதமான உச்ச நிலையில்) மெய் (உண்மையான) யோகம் (யோகத்தை அறிந்து கொண்டு)
முற் (அந்த அறிவிற்கு முதல் மூல) பதம் (தன்மையாக இருக்கின்ற) ஞான (ஞானத்தை) முறை (அடைய வேண்டிய முறைகளை அறிந்து கொண்டு) முறை (அந்த முறைகளை முறைப்படி) நண்ணியே (கடைபிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு)
சொற் (தாம் சொல்லுகின்ற வாக்கில்) பதம் (சத்தியத்தின் தன்மையை) மேவி (கடைபிடித்து) துரிசு (தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும்) அற்று (நீங்கப் பெற்று) மேலான (அனைத்திற்கும் மேலாக)
தற் (தானாகவே இருக்கின்ற) பரம் (பரம்பொருளை) கண்டு (தரிசித்து) உளோர் (அதை தமக்குள்ளேயே உணர்ந்து இருப்பவர்களே) சைவ (சைவத்தின்) சித்தாந்தரே (சித்தாந்தத்தை கடைபிடிக்கின்ற சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டியதற்கு கற்க வேண்டிய கல்விகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு அதன் மூலம் பெற்ற கலை அறிவின் மிகவும் உன்னதமான உச்ச நிலையில் உண்மையான யோகத்தை அறிந்து கொண்டு அந்த அறிவிற்கு முதல் மூல தன்மையாக இருக்கின்ற ஞானத்தை அடைய வேண்டிய முறைகளை அறிந்து கொண்டு அந்த முறைகளை முறைப்படி கடைபிடித்து அதன் மூலம் அந்த ஞானத்தை பெற்றுக் கொண்டு தாம் சொல்லுகின்ற வாக்கில் சத்தியத்தின் தன்மையை கடைபிடித்து தம்மிடம் இருக்கும் அழுக்குகளான மும்மலங்களும் நீங்கப் பெற்று அனைத்திற்கும் மேலாக தானாகவே இருக்கின்ற பரம்பொருளை தரிசித்து அதை தமக்குள்ளேயே உணர்ந்து இருப்பவர்களே சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்.

குறிப்பு: சைவ நெறிமுறைகளின் மூலம் இறைவனை அடைந்தவர்களே சைவ சிந்தாந்தர்கள் ஆவார்கள்.

பாடல் #1422

பாடல் #1422: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியோர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய
நாதாந்த பூரண ஞானநே யத்தரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெதாநதஞ சுததம விளஙகிய சிததாநதம
நாதாநதங கணடொர நடுககறற காடசியொர
பூதாநத பொதாநத மாகப புனஞசெயய
நாதாநத பூரண ஞானநெ யததரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேத அந்தம் சுத்தம் விளங்கிய சித்த அந்தம்
நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியோர்
பூத அந்தம் போத அந்தம் ஆக புனம் செய்ய
நாத அந்தம் பூரணம் ஞான நேயத்தரே.

பதப்பொருள்:

வேத (வேதங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) சுத்தம் (மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில்) விளங்கிய (விளங்குகின்ற) சித்த (எண்ணங்களின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) கண்டோர் (கண்டு தரிசித்தவர்கள்) நடுக்கு (அசைகின்ற எண்ணங்கள்) அற்ற (இல்லாமல்) காட்சியோர் (எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள்)
பூத (ஐந்து பூதங்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்றவனை) போத (கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற) ஆக (இறைவனாகவே ஆகுகின்ற) புனம் (பக்குவத்தை) செய்ய (பெறுவதற்கான செயல்களை செய்து)
நாத (நாதத்தின்) அந்தம் (எல்லையாக இருக்கின்ற இறைவனை) பூரணம் (பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே) ஞான (பேரறிவு ஞானமாகவும்) நேயத்தரே (பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

வேதங்களின் எல்லையாக இருக்கின்றவனும் மும்மலங்களும் நீங்கிய பரிசுத்தமான நிலையில் விளங்குகின்ற எண்ணங்களின் எல்லையாக இருக்கின்றவனும் நாதத்தின் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை கண்டு தரிசித்தவர்கள் அசைகின்ற எண்ணங்கள் இல்லாமல் எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கின்றவர்கள். ஐந்து பூதங்களுக்கும் எல்லையாக இருக்கின்றவனும் கற்றுக் கொடுக்கின்ற அனைத்து ஞானத்திற்கும் எல்லையாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனாகவே ஆகுகின்ற பக்குவத்தை பெறுவதற்கான செயல்களை செய்து நாதத்தின் எல்லையாக இருக்கின்ற இறைவனை பரிபூரணமாக உணர்ந்து கொள்பவர்களே பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்கள் ஆவார்கள்.

குறிப்பு: இறைவனை அடைந்து அவனது பேரறிவு ஞானமாகவும் பேரன்பாகவும் ஒன்றாக கலந்து இருப்பவர்களே ஞான நேயத்தர்கள் ஆவார்கள்.